கிராமங்கள்தோறும் பிரச்சாரம் – கோவை மாவட்டக் கழகம் முடிவு!
கோவை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 03.01.2026 அன்று தமிழ்ப் புலிகள் கட்சி தலைமை அலுவலகத்தில் சூலூர் பன்னீர்செல்வம் (மாவட்டக் கழகச் செயலாளர் ) தலைமையில் நடைபெற்றது.
கழகத்தின் 2025-ஆம் ஆண்டு செயல்பாடுகள், 29.12.2025 அன்று அன்று கோவையில் நடந்து முடிந்த போராட்டத்தின் நிறைகுறைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டு போராட்ட வரவு – செலவுக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் பின்வருமாறு:-
1. அண்மையில் மாரடைப்பால் முடிவெய்திய கழகக் காரமடை பகுதி அமைப்பாளர், பொறியாளர் ஜெகதீசு அவர்களுக்கு கோவை மாவட்டக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. மிகவிரைவாக அவர் வாழ்ந்த காரமடையில் நினைவேந்தல் கூட்டம் நடத்துவதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.
2. கோவையில் நடந்து முடிந்த ஜாதியத் தீண்டாமைக்கு எதிரானப் போராட்டத்திற்கு முகம் அறியாத – வெளிநாட்டில் வசிக்கும் பலரும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து 100, 200, 500,1000 ரூபாய் என தங்களால் இயன்ற நிதியினை வழங்கி போராட்டத்திற்கு உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு கோவை மாவட்டக் கழகம் மனதார நன்றி பாராட்டிக் கொள்கிறது.
3. போராட்டப் பணியில் ஆர்வத்துடன் பங்கேற்று, போராட்ட வெற்றிக்காக அர்ப்பணிப்போடு செயலாற்றிய கழகத்தின் இளம் வேர்களை கோவை மாவட்டக் கழகம் பாராட்டி மகிழ்கிறது.
4. கோவை போராட்டத்தில் மாநில அளவில் அனைத்து மாவட்டங்களில் இருந்து பெருந்திரளாகக் கலந்துகொண்ட கழகச் செயல்வீரர்களுக்கும், அவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும், போராட்டத்தை நடத்த அனுமதியளித்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கும் கோவை மாவட்டக் கழகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
2025-ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் செய்த பணிகளைக் காட்டிலும் 2026-ஆம் ஆண்டு கூடுதலாகவும் சிறப்பாகவும் வேகமாகவும் கிராமங்கள் மற்றும் புதிய பகுதிகளில் பிரச்சாரம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், தற்போது வரை சேர்த்த ரூ.3600 பெரியார் முழக்கம் சந்தா தொகையை ஒப்படைத்தார். நிர்மல் குமார், வெங்கட், தமிழ்ச்செல்வி, நிலவழகன், சதீஷ், சிவராசு, நவீன், சத்தியமூர்த்தி, கதிரவன், தரணி, லோகநாயகி, மோகன கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 22012026
