கொள்கைக்காக உயீர்நீத்த உடையார்பாளையம் வேலாயுதம்!
வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரைத் தொடர்.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் நாம் இருக்கிறோம். இந்த நூற்றாண்டு காலபயணம் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார- பண்பாட்டு வளர்ச்சிக்கான பாதையை அமைத்திருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதரின் கல்வி, வேலைவாய்ப்புக்கான ஏணியாக மற்றெந்த இயக்கத்தையும் விடவும் அதீத பங்களிப்பைச் செய்த இயக்கமாக சுயமரியாதை இயக்கமும், அதன் பரிணாம வளர்ச்சியாக உருவெடுத்த திராவிட இயக்கமும் திகழ்கின்றன. ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலம் அவ்வளவு இனிமையானது அல்ல. நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடுவதற்கு சமமான காலம் அது. இயக்கத்தின் தலைவராக இருந்த பெரியார் மீதே செருப்பு வீசப்பட்டது, பாம்பு வீசப்பட்டது, மலம் வீசப்பட்டது என்றால் சாமானிய தொண்டர்களைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டுமா?
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கரடிக்குளம் என்னும் சிற்றூரில் சாமிநாதன் என்பவருக்கும் பொன்னாச்சி அம்மையாருக்கும் ஐந்தாவது மகனாக 1910-ஆம் ஆண்டு, பிறந்தவர் வேலாயுதம். திருச்சி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இரண்டு ஆண்டுகளும், சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி கல்வியும், சாரணர் பயிற்சியும் முடித்தவர். மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கமும், இராமலிங்க அடிகளாரின் சன்மார்க்க சங்கம் வலியுறுத்திய சமத்துவ நெறிகளும் படிக்கும் காலத்திலேயே இவரை பெரிதும் ஈர்த்துள்ளன. அந்த ஈர்ப்பின் திசையில் ‘குடிஅரசு’ இதழை வாசிக்க, பெரியாரின் வழித்தடத்தில் தனது பாதையை அமைத்துக்கொண்டார். 1938-ஆம் ஆண்டு, முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தபோது, 28 வயது இளைஞராக போராட்டக்களங்களில் பங்கேற்றார்.
படித்து முடித்தவுடன் உடையார்பாளையத்திலேயே ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பள்ளியில் மாணவர்களுக்கு பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளையும், சுயமரியாதை இயக்கம் பேசும் சமூகநீதி அரசியலையும் பாடத்துடன் சேர்த்து புகட்டினார். ‘கல்வி ஒன்றுதான் சமூக விடுதலைக்கான வழி’ என்ற பெரியாரின் சிந்தனையை ஆழ்மனதில் ஏற்றிக்கொண்டவர், அப்பகுதியில் கிராமம் கிராமாகச் சென்று ஊர் மக்களிடம் பேசி, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என மன்றாடி அவர்களை கல்வி நிலையங்களுக்கு அழைத்து வந்தார். அப்படி, மாடு மேய்த்துக்கொண்டிருந்த மாணவர்களையும் அழைத்து வந்து கல்வியில் அவர்களை ஈடுபடச் செய்ததன் விளைவாக பல மாணவர்கள் பட்டதாரிகள் ஆனார்கள்.
குறிப்பாக, அங்குள்ள உல்லியக்குடி கிராமத்தில் பின்னாளில் தொடக்கப்பள்ளி உருவானபோது அப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டவர் மாரிமுத்து என்பவர். பள்ளிக்கு வராமல் மாடு மேய்த்துக்கொண்டிருந்த இவரை அழைத்து வந்து, கல்வியின் அவசியத்தை அவரின் பெற்றோருக்கும் உணர்த்தி படிக்கச் செய்தவர் வேலாயுதம். உழைக்கும் மக்களில் பெரும்பான்மையானோருக்கு கையெழுத்து கூட போடத்தெரியாத காலம் அது. கல்வி அவர்களுக்கு எட்டாத தொலைவுக்கு போயிருந்தாலும், அவர்களையும் பண்படுத்த வேண்டுமென்று சிந்தித்தார் வேலாயுதம். இரவு நேரங்களில் மாணவர்களுடன் சேர்த்து பெற்றோரையும் வரவழைத்து கூட்டங்கள் கூட்டி, நாடகங்கள் நடத்தி அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆசிரியராக கல்விச்சாலைக்குள் மேற்கொண்ட பணிகளுக்கு மத்தியில், பெரியார் தொண்டராகக் குடும்பத்திலும் சமூகத்திலும் பகுத்தறிவுப் பணியையும் தொடர்ந்தார். அன்றைய காலச்சூழலுக்கு புரட்சிகரமான பல செயல்களை செய்யத் துணிந்தார். விளைவு அவரையே விலையாகக் கொடுக்க நேர்ந்தது. இருகையூர், மீன்சுருட்டி, இராங்கியம், சாலப்பட்டி, உடையார்பாளையம் எனப் பல்வேறு பகுதிகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார் வேலாயுதம்.
ஊர் மக்களுக்குக் கடிதம் எழுதிக்கொடுப்பது, பத்திரிகைகளைப் படித்து, அவர்களுக்குச் செய்திகளை எடுத்துச் சொல்வது, அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை விளக்குவது, அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் இவரே உடன் சென்று உதவுவது என எண்ணற்ற பணிகளைச் செய்துவந்தார். இதற்காக `கிராம மன்றம்’ ஒன்றையும் ஏற்படுத்தினார். திருக்குறள் நூல்களைச் சிறிய அளவில் அச்சடித்து, தொடக்கப் பள்ளிகளுக்குச் சென்று விற்பார். பெரியாரின் `குடிஅரசு’, `விடுதலை’, அண்ணாவின் `திராவிட நாடு’ இதழ்களை ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்தார். இன்றைக்கும் லட்சக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் `பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற நூலைத் தன் சொந்தச் செலவில் வாங்கி மக்களிடையே பரப்பினார்.
`படிப்பை விட்டுவிட்டு உழவுப் பணிகளைப் பார்’ என்ற பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி படித்து ஆசிரியரானவர். 30 கிலோ மீட்டருக்கு மேல் சைக்கிளில் சென்று படித்தவர். வீட்டில் பணம் தராவிட்டாலும், அரசு செய்த சிறுசிறு உதவிகளை வைத்தே கடும் சிரமத்துக்கு மத்தியில் படித்தவர். கூடவே பெரியார் மீதான பற்றும் இருந்ததால், கல்வியின் முக்கியத்துவத்தை, பொதுமக்களுக்குப் புரியவைத்து, அனைவரையும் படிக்கவைக்க எண்ணற்ற உதவிகளைச் செய்தார்.
கிழிந்த ஆடைகளுடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், அவர்களுக்குத் தன் செலவிலேயே புதிய ஆடைகள் வாங்கிக் கொடுப்பார். கடும் பசியோடு வகுப்பறையில் மாணவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தால், தன் வீட்டுக்கு அனுப்பி, மனைவி ஜெகதாம்பாளிடம் அவர்களுக்கு உணவு கொடுக்கச் சொல்வார். அவர்கள் மேல்படிப்பைத் தொடர உதவிகள் செய்தார். மாணவர்கள் தங்கிப் படிக்க, தன் வீட்டையே கட்டணமில்லாமல் அவர்களுக்குக் கொடுத்து உதவினார். இதனாலேயே, வேலாயுதம் இடமாறுதல் அடைந்து வேறு பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம், மாணவர்கள் அவரைக் கட்டியணைத்து அழுவர்.
அத்தகைய `மக்கள் ஆசிரியரா’கத் திகழ்ந்த வேலாயுதம், உடையார்பாளையத்தில் பணியாற்றும்போது எண்ணற்ற சமூகப் புரட்சிகளையும் செய்துள்ளார். அங்கு அவர் பணியாற்றி வந்த பள்ளி, சிவன் கோயில் தெருவில் இருந்தது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அந்த தெரு வழியாகப் பள்ளிக்கு வரக்கூடாது என்று அங்கிருந்த பார்ப்பனர்கள் தடைபோட்டு வைத்திருந்தனர். உடையார்பாளையம் கடைவீதியில் இக்கொடுமையை எதிர்த்துக், கூட்டம் போட்டுப் பேசினார் வேலாயுதம். நாளை அத்தெரு வழியாகத் தாழ்த்தப்பட்ட மாணவர்களை அழைத்துச் செல்வேன் என்றும் அறிவித்தார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், மறைந்திருந்த சிலர் அவர்மீது கல் வீசித் தாக்கினர். ஆனால், அதைக் கண்டெல்லாம் அஞ்சாமல் மறுநாள் சொன்னபடியே செய்துகாட்டினார். அதன்பிறகு, அப்பகுதியில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் பெருமளவு தங்கள் குழந்தைகளைப் படிக்க அனுப்பினர்.
பள்ளிகளில் ஆதிக்கச் ஜாதியினருக்கு ஒரு இடம், இடைநிலைச் ஜாதியினருக்கு ஒரு இடம், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குத் தனி இடம் என்றெல்லாம் நிலவிய கொடுமைகளைத், தான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் அறவே ஒழித்துக்கட்டினார்.
ஆசிரியர் என்ற அளவில், பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது, இடையிடையே சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பேசுவது என்ற அளவில் மட்டும் வேலாயுதம் இருக்கவில்லை. பெண்கள் பொதுவெளியில் தலைநிமிர்ந்துகூட நடக்க இயலாத அளவுக்கு ஆணாதிக்கச் சிந்தனைகள் தலைவிரித்தாடிய அந்தக் காலத்திலேயே, தன் மகள் மங்கையர்க்கரசியை மேடையேற்றிப் பேசச் செய்தார். கூந்தல் வளர்த்து, அதைப் பராமரிப்பது வீண் வேலை என `கிராப்’ வெட்டிக்கொள்ளச் செய்தார். மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொடுத்தார். கணவரை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துவைத்தார். ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திவைத்தார்.
`உயர் ஜாதிக்காரர்களை `ஆண்டை’ என்றோ `எஜமான்’ என்றோ அழைக்காதீர்கள்’ எனத் தாழ்த்தப்பட்ட மக்களிடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உணவு விடுதி ஒன்றுக்கு, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தன்னுடைய நண்பரோடு சென்றபோது, அனுமதிக்க மறுத்த அந்த உணவகத்தின் உரிமையாளருடன் கடும்விவாதம் செய்து, இருவரும் உணவருந்திவிட்டே அங்கிருந்து வெளியேறினர். இச்செயல்கள் எல்லாம் பழைமைவாதிகள் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தின. இவரை இனியும் விட்டுவைக்கக் கூடாது என்று சதித்திட்டம் தீட்டினர். 13.11.1947 அன்று காலை, உடையார்பாளையம் பெரிய ஏரியின் மேற்குப் பக்கம் அமைந்திருந்த கோயில் மண்டபத்தில் வைத்து, வேலாயுதத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கழுத்தை நெரித்துக் கொன்றனர். பின்னர், உடலை அருகே இருந்த பலா மரத்தில், ஆடைகளின்றி கட்டித் தொங்கவிட்டுச் சென்றனர். மறுநாள் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள் அனைத்திலும் வேலாயுதம் படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியானது. இந்தக் கொடூர சம்பவத்தைத் தற்கொலை என்று மாற்றிட சூழ்ச்சிகள் நடந்தன. வழக்கு தொடுக்கப்படாமலேயே காவல்துறையும் காலம் கடத்தியது. ஆனால், கொலையைக் கண்டித்தும், அங்கு நடக்கும் சூழ்ச்சிகளையும் தொடர்ந்து அம்பலப்படுத்திக்கொண்டே வந்தது `விடுதலை’ ஏடு.
1948-ஆம் ஆண்டு ஜனவரியில், பெரியார் நேரடியாக உடையார் பாளையத்திற்குச் சென்று, வேலாயுதம் கொலை செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார். வேலாயுதத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அன்று இரவே கூட்டம் ஒன்றை நடத்தி, காவல் துறையின் மெத்தனத்தைக் கண்டித்துப் பேசினார். அண்ணா, கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத் எனப் பலரும் வேலாயுதம் வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தனர். வேலாயுதம் வழக்கு அரசுக்கு நெருக்கடியாக மாறிய சூழலில், அன்றைய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அரசு, விசாரணைக்காகத் தனி நீதிமன்றம் ஒன்றை அமைத்தது. ஆனால், நீதிதான் கிடைக்கவில்லை. குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் பட்டியலை 13.6.1948 அன்று `விடுதலை’யில் வெளியிட்டார் பெரியார். பள்ளி ஆசிரியர்களாக இருந்த வைத்தியநாத அய்யர், முத்துசாமி சாஸ்திரி உட்பட 10 பேர் இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். ஜெயங்கொண்டம் தொகுதியின் அன்றைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த பி.வெங்கடாசலம், நடராசன், சண்முகசுந்தரம் ஆகிய மூவர் தலைமறைவாக இருந்தனர் என்கிறது `விடுதலை’ ஏடு. பார்ப்பனியமும் பணமுதலைகளும் சேர்ந்து செய்த படுகொலையாக வரலாற்றில் இன்றும் அப்பகுதியில் அறியப்படுகிறது வேலாயுதம் வழக்கு. வேலாயுதம் மறைந்துவிட்டார் என யாரும் அங்கு கல்வியில் இருந்து வெளியேறிவிடவில்லை, ஆதிக்கவாதிகளால் ஜாதி இறுக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் முடியவில்லை.
பெரியார் முழக்கம் இதழ் 29052026
