சிராவயல் ஆசிரமம் தொடங்கப்பட்டதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (11) – கொளத்தூர் மணி

ஜீவாவின் காந்தி ஆசிரமக் கதைகளில் எதிலும் பதிவிடப்படாத அல்லது ஜீவாவால் சொல்லப்படாமல் தவிர்த்தத் தலைவரைப் பற்றி அறியும் முன்னர் வேறு சில செய்திகளையும் அறியவேண்டியுள்ளது.

ஜீவா நிறுவியதாகவும் அதனுடைய செயலாளராக இருந்து பணியாற்றியதாகவும் நம்ப வைக்கப்பட்டிருக்கும் அந்த சிராவயலில் இயங்கிய நிறுவனங்களை முதலில் நாம் அறிந்தாக வேண்டும்.

சிராவயலில் 1923-ஆம் ஆண்டிலிருந்து காந்தி வாசக சாலை என்ற ஒன்று செயல்பட்டு வந்திருக்கின்றது. அதன் பின்னரே ‘தனவைசிய நாட்டுத் தமிழ்க் கல்விக் கழகம்’ உருவாக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஏடுகள் தரும் செய்தி!

அவ்வாறான காந்தி வாசக சாலையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா ஒன்று 12.05.1925 அன்று நடைபெற்றிருக்கிறது. அவ்விழா ‘நவசக்தி ஆசிரியர் திருவாளர் திரு.வி.கல்யாண சுந்தரம் முதலியார்’ அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும், அந்த விழாவில் திரு.வி.க. அவர்கள் ‘காந்தி தருமம், ஜீவகாருண்யம், தமிழின் இனிமை’ முதலியவைகளைப் பற்றி மிக அழகாக எடுத்துரைத்து உரையாற்றியதாகவும் ‘தனவைசிய ஊழியன்’ ஏட்டின் 12.05.1925 இதழில் செய்தி வெளியாகி இருக்கிறது.

அதற்கு முன்னரே ‘தனவைசிய ஊழியன்’ ஏட்டில் 21.04.1925 நாளிட்ட இதழின் மூன்றாம் பக்கத்தில் ‘தனவைசிய நாட்டுத் தமிழ் கல்விக் கழகம்’ என்ற ஓர் அமைப்பு உருவானது குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது.

அதில் ‘இக்கழகம் குரோதன ஆண்டு சித்திரைத் திங்கள் ஏழாம் நாள் (21.4.1925) காணப்பெற்றது என்றும், தலைவராகக் காரைக்குடி திருவாளர் ராய. சொக்கலிங்கம் அவர்களும், காரியதரிசியாக சிராவயல் திருவாளர் மு.காசி விஸ்வநாதன் செட்டியார் அவர்களும் செயலாற்றுவார்கள் என்றும், அன்பர்களின் நன்கொடைப் பொருளை ஏற்று பள்ளிகள் காண வேண்டிய ஊர்களில் கண்டு, பிறர் தங்கள் பள்ளிகளைக் கழகக் கொள்கைக்கு இசைந்து நடத்துமாறு வேண்டினால் நடத்திட வேண்டுவன செய்தல், கழகக் கொள்கைக்கிணங்கி நடத்தும் பள்ளிகட்குக் குறிப்பிட்ட ஒரு தொகை கொடுத்தல் அல்லது இயன்ற உதவி செய்தல்’ போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றன”.

21.04.1925 நாளிட்ட அதே ‘தன வைசிய ஊழியன்’ ஏட்டின் 7-ஆம் பக்கத்தில் ‘தன வைசிய நாட்டுத் தமிழ்க் கல்விக் கழகம்’ என்ற தலைப்பில் மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது.

அச்செய்தியின் கடைசிப் பகுதியில், ‘இன்று இக்கழகச் சார்பாக நடைபெறுவதற்கு சிராவயலில் திரு மு.கா. (மு காசி விஸ்வநாதன்) அவர்களால் நடத்தப்பெறும் ஒரு பள்ளியும், தேவகோட்டையில் திரு வெ. அழ. அவர்களால் காணப்போகும் ஒரு பெண் பள்ளியும் தயாராக இருப்பதாக அறிகிறோம். இந்த ஆண்டிற்குள்ளேயே இன்னும் பல பள்ளிகள் தோன்ற இறைவன் அருள்வானாக… விரிவஞ்சி விடுக்கின்றோம்; சந்தர்ப்பம் நேர்ந்துழி வரைவோம்’ என்று அந்த செய்தி முடிவடைகிறது.

அடுத்து அதே ‘தனவைசிய ஊழியன்’ ஏட்டில் 23.06.1925 நாளிட்ட இதழின் 18-ஆம் பக்கத்தில் மற்றொரு செய்தியும் வெளியாகி இருக்கிறது. ‘நாளிது ஆனித் திங்கள் ஆறாம் நாள் காரைக்குடி திரு ராய. சொக்கலிங்கன் அவர்கள் வீட்டில் கூடிய கூட்டத்தில் மருதங்குடியில் (சிராவயலில்) கழகச் சார்பில் ஆவணி மாதத்தில் காந்தி பள்ளிக்கூடம் என்ற பெயரோடு ஒரு பள்ளிக்கூடம் திறப்பது என தீர்மானிக்கப்பட்டது. இக்கழகத்திற்கு காரைக்குடி திரு ராய.சொக்கலிங்கன் அவர்கள் 200 ரூபாயும், சிராவயல் திரு மு. காசி விஸ்வநாதன் செட்டியார் அவர்கள் 200 ரூபாயும் எனத் தொடங்கி பலரும் நன்கொடையாக அன்றே கொடுத்துள்ளனர். ஏனைய நண்பர்கள் உதவியை எதிர்பார்க்கின்றோம்’ என காரியதரிசி திரு மு.காசி விஸ்வநாதன் செட்டியார் எழுதுகிறார் என்றும், மருதங்குடியில் (சிரா வயலில்) காந்தி பள்ளிக்கூடம் ( காந்தி ஆசிரமம்) என்ற பள்ளிக்கூடத்தை ஆவணி (1925, ஜூலை மாதத்தில்) திறப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ள செய்தியையும் நாம் அறிகிறோம்.

இவ்வாறான பள்ளிக்கூடங்களை எழுப்ப வேண்டும் என்ற உணர்வோடு செயல்பட்டு இருக்கிற அந்த தனவைசிய நாட்டுத் தமிழ்க் கல்விக் கழகத்தார்தான் சேரன்மாதேவி குருகுலத்திற்கு அதிக நன்கொடைகள் அளித்தனர் என்பதும், அந்தக் குருகுல எதிர்ப்புப் போராட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தனவைசிய நாடான காரைக்குடி, கானாடுகாத்தான் போன்ற ஊர்களில் நடைபெற்ற தமிழர் கூட்டம், தமிழர் இயக்கம் என்ற அமைப்புகளால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை அதனால்தான் சேரன்மாதேவி தமிழ்க் குருகுல வித்தியாலயத்துக்கு (தேசிய தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்கு) ‘பரத்வாஜ ஆசிரமம்’ என்று வ.வே.சு. அய்யரால் பெயர் சூட்டப்பட்டிருந்ததை எண்ணியே சிராவயல் பள்ளிக்கூடத்துக்கு ‘காந்தி ஆசிரமம்’ என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.

வாசக சாலை விழாவில் பெரியார்!

அதன் தொடர்ச்சியாக காரைக்குடி சொ.முருகப்பா அவர்களால் நடத்தப்பட்ட ‘குமரன்’ வார ஏட்டின் 31.3.1926 நாளிட்ட இதழின் 9-ஆம் பக்கத்தில் ‘சிராவயல் காந்தி வாசகசாலை’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ள ஒரு செய்திக் குறிப்பினைப் பார்ப்போம்.

“இவ்வாசக சாலையின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா நாளது மாதம் பங்குனி 24-ஆம் தேதி அதாவது 6.04.1926 செவ்வாய்க்கிழமை மாலையில் ஈரோடு குடியரசு ஆசிரியர் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்கள் தலைமையில் நடைபெறும். அவ்வமயம் திருவாளர்களான திருப்பழனம் வ. ராமசாமி அய்யங்கார், அமராவதிப் புதூர் பிச்சப்பா சுப்ரமணியம், ஊழியன் ஆசிரியர் ராய. சொக்கலிங்கன் ஆகியோர்களின் பேருரை நிகழும். அன்று காலை 9 மணிக்கு திருவாளர் நாயக்கர் அவர்களால் காந்தி கிணறு திறக்கப்படும். மருதங்குடி ஆதிதிராவிடர்களும், காந்தி ஆசிரமத்தாரும் திருவாளர் நாயக்கருக்குத் தனித்தனியே உபசாரப் பத்திரம் (வரவேற்பு இதழ்) படித்துக் கொடுப்பார்கள் என்று மேற்படி வாசக சாலையார் அறிவிக்கிறார்” என்பதே அந்த செய்திக்குறிப்பு.

அதே பக்கத்தின் மற்றொரு இடத்தில், ஓர் மறுப்பு’ “ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் அவர்கள் எழுதுகிறார்” என்ற தலைப்பில் கோயம்புத்தூர் தாலுகா மாநாட்டு நிகழ்வு பற்றிய ஓர் அறிக்கையும் வெளியாகி உள்ளது. அதே ‘குமரன்’ ஏட்டின் 07.04.1926 நாளிட்ட இதழின் 8-ஆம் பக்கத்தில் உள்ள செய்தியையும் பார்ப்போம்.

‘நேற்று முற்பகல் 10 மணிக்கு குடிஅரசு ஆசிரியர் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் காந்தி கிணற்றைத் திறந்து வைத்தார். எல்லாரும் அதில் தண்ணீர் அருந்தினர். பஞ்சமர்களும், காந்தி ஆசிரமத்தாரும் ஸ்ரீமான் நாயக்கருக்குத் தனித்தனி உபசாரப் பத்திரம் படித்துக் கொடுத்தனர். அவர்களுக்கு நாயக்கர் பதில் அளித்தார். பின்னர் காந்தி வாசக சாலையில் மாலை 6 மணிக்குக் கூட்டம் கூடியது. பல ஊர்களில் இருந்தும் தன வைசிய வாலிபர்கள் ஏராளமாக வந்து கூடியிருந்தனர். ஸ்ரீமான் நாயக்கர் தலைமை வகித்து சில நிமிஷங்கள் முகவுரை கூறினார். ஸ்ரீமான் வ.ராமசாமி அய்யங்கார் அவர்களும், ஸ்ரீமான் பிச்சப்பா சுப்ரமணியம் செட்டியார் அவர்களும், ஸ்ரீமான் ராய. சொக்கலிங்க செட்டியார் அவர்களும் முறையே ‘கடமையும் உரிமையும்’ ‘சுதந்திரம்’ ‘வகுப்பு’ எனும் பொருள்களைப் பற்றி உரையாற்றினார்கள். மதுரை ஊமைப்பிள்ளை (பள்ளிக்கூட ஆசிரியர்) தமது பள்ளிக்கூடத்தைப் பற்றி சில வார்த்தைகள் கூறினார். தலைவர் இரண்டே கால் மணி நேரம் அரசியல், ஆசாரத் திருத்தம், தற்கால மதவாதிகளின் போக்கு முதலியவற்றைப் பற்றி எளிய நடையில் ஒவ்வொருவருடைய உள்ளமும் உருகுமாறு உண்மை உணர்வும் பொருட்பொலிவும் உள்ள வசனத்தில் உபந்யசித்தனர். ஸ்ரீமான் மு.காசி விசுவநாதன் செட்டியார் அவர்களால் வந்தனம் கூறப்பெற்று இரவு 9 மணிக்கு இனிது நிறைவெய்தியது’ என்கிறது அந்தச் செய்தி.

ஜீவாவுக்கு என்ன தொடர்பு!

தன வைசிய ஊழியன் இதழில் 1925ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிராவயல் பள்ளி திறப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ள செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் என்ன காரணத்தாலோ முன் குறிக்கப்பட்ட நாளில் சிராவயல் பள்ளி (ஆசிரமம்) திறக்க முடியாமல் போயிருக்கிறது.

25.4.1926 ஆம் நாளிட்ட ‘குடி அரசு’ இதழின் 11ஆம் பக்கத்தில் ‘ஸ்ரீ காந்தி ஆசிரமம், சிராவயல்’ என்ற தலைப்பில் அந்த ஆசிரமத்தின் தலைவரான கு. கும்பலிங்கம் அவர்கள் ஓர் அறிக்கையினை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையின் முதல் பகுதி இப்படித் தொடங்குகிறது. ‘மகாத்மா காந்தியடிகளின் திருப்பெயர் கொண்டிருக்கும் இவ்வாசிரமம் குரோதன வருடம் தை மாதம் 29-ஆம் நாள் சிரா வயலில் ஆரம்பிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது பொது ஆண்டுக்கணக்கில் பார்த்தால் அந்த நாள் 11.02.1926 ஆகும்.

அந்த அறிக்கையின் மற்றொரு பகுதியில் “இஃது தனவைசிய நாட்டுக் கல்விக் கழகத்தாரால் நடத்தப்படுகிறது. இதில் 25 ஆதிதிராவிட மாணவ மாணவிகள் போதிக்கப்படுகின்றனர். இவர்களின் படிப்பைப் பார்த்து மகிழ்ச்சியுற்று நண்பர்கள் பலர் ஆடை, கற்பலகை முதலியன பரிசளித்து வருகிறார்கள். ஸ்ரீ காந்தி ஆசிரமம், ஸ்ரீ காந்தி வித்யாலயம், இராப் பள்ளிக்கூடம் இவைகளை ஸ்ரீமான் கும்பலிங்கம் தலைமை வகித்து நடத்தி வருகிறார்” என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதுவரை குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளில் இருந்து நாம் அறிந்து கொள்வது காந்தி ஆசிரமத்தை சிராவயலில் நிறுவியது பலராலும் நம்ப வைக்கப்பட்டு இருப்பதுபோல தோழர் ஜீவானந்தம் அவர்கள் அல்ல; அது தனவைசிய நாட்டுத் தமிழ்க் கல்விக் கழகத்தின் முயற்சியில் நிறுவப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறது என்ற ஒரு செய்தியை நம்மால் அறிந்து கொள்ள முடியும். இத்தொடரின் 3ஆம் தொடரில் உள்ள ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலின் 541-ஆவது பக்கத்தில் கீழ்க்கண்ட செய்திகள் பாகனேரி வழி என்ற தலைப்பில் 27.09.1927 அன்று நிகழ்ந்ததாகக் காணப்படுகின்றன. “தன வணிகர் கல்விக் கழகம் (இக்கல்விக் கழகத்தின் ஆதரவில் பல ஊர்களில் 15, 16 ஆரம்பப் பள்ளிகள் நிறுவப்பெற்று நடைபெற்று வந்தன. இது ஒரு அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனம்) நடத்தி வந்த பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் சிலர் ப.ஜீவானந்தம் (பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர்), கும்பலிங்கம் ஆகியோர் தலைமையில் காந்திஜியைக் காண வந்தார்கள்” என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மேலும் தெளிவு கிடைக்கும்.

காந்தி ஆசிரமத்தை சிராவயலில் நிறுவியது பலராலும் நம்ப வைக்கப்பட்டு இருப்பதுபோல தோழர் ஜீவானந்தம் அவர்கள் அல்ல;
அது தனவைசிய நாட்டுத் தமிழ்க் கல்விக் கழகத்தின் முயற்சியில் நிறுவப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

பெரியார் முழக்கம் இதழ் 22012026

You may also like...