மக்கள் தொகை பதிவேடு-குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே பா.ஜ.க. வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு

குடியுரிமை சட்ட திருத்தம் (CAA)/தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR)/ தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகிய மும்முனை தாக்குதலுக்கு எதிராக  இயக்கங்கள் தொடர் கின்றன. எனினும் மோடி அரசாங்கம்  தனது நிலையை மறுபரிசீலனை செய்ய மறுப்பது மட்டு மல்ல; தினமும் புதிய பொய்களை அள்ளி வீசுவதன் மூலம் போராடுபவர்களை தனிமைப்படுத்த எத்தனிக்கிறது.

CAA காரணமாக முஸ்லீம்கள் உட்பட எந்த ஒரு இந்திய குடிமகனின் உரிமையும் பறிபோகாது என மோடி அர சாங்கம் கூறுகிறது. CAA  என்பது தனியாக செயல்படப் போவது இல்லை. NPR மற்றும் NRC உடன் இணைந்து தான் CAA  பயணிக்க ஆட்சி யாளர்கள் திட்டமிடுகின்றனர்.

NRCயை தேசம் முழுதும் அமலாக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். “தற்போதைக்கு” என்பதன் பொருள், பின்னால் இது வரும் என்பதுதானே! NPR மற்றும் NRCக்கு இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என அடித்து சத்தியம் செய்கின்றனர். எனினும் NPRதான் NRCக்கு தொடக்கம் என்பதை 2003இல் வாஜ்பாய் அரசாங்கம் குடி உரிமை சட்டத்தில் செய்த திருத்தம் தெளிவாக கூறுகிறது. மேலும் சென்சஸ் அமைப்பின் வலைதளத்திலும் இது தெளிவாக குறிப்பிடப்பட் டுள்ளது. மோடி அரசாங்கத்தின் மும்முனை தாக்குதலின் தொடக்கம் தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும் NPRதான்! போராட்டங்கள் நடக்கும் பொழுதே NPRக்கான பணிகளுக்காக மோடி அரசாங்கம் சுமார் ரூ4000 கோடியை ஒதுக்கியுள்ளது. 2010 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனால் தற்போது கீழ்கண்ட கேள்விகள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளன:

உங்களது தாய்/தந்தை எப்பொழுது பிறந்தனர்?

எங்கே பிறந்தனர்?

எந்தெந்த இடங்களில் வசித்தனர்?

இவற்றுக்கு ஆதாரங்கள் என்ன?

இந்த கேள்விகள்தான் ஆபத்துகளுக்கு தொடக்கப் புள்ளியாக அமைகின்றன.

NPR-NRC  எப்படி உருவாக்கப்படும்?

ஒரு சிறு நகரத்தில் அனைத்து மதம் மற்றும் சாதியினர் சுமார் 25,000 குடும்பங்களை சேர்ந்த 1,00,000 பேர் வசிப்பதாக வைத்து கொள்வோம். மக்கள் தொகை பதிவேடு ஊழியர்கள் 25,000 வீடுகளுக்கும் வந்து தகவல்கள் சேகரிப்பர். ஆவணங்களை பார்வையிடுவர். இந்த விவரங்களை மக்கள் தொகை பதிவேடு அதிகாரியிடம் சமர்ப்பிப்பர். இதன் அடிப்படையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) உருவாக்கப்படும். இந்த கட்டம் வரையில் எவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.  அடுத்த கட்டமாக மக்கள் தொகை பதிவேடு அதிகாரி இந்த விவரங்களை சரி பார்ப்பார். அப்பொழுது 85ரூ அதாவது 85,000 பேரின் விவரங்கள் திருப்தியாக உள்ளது என மதிப்பீடு செய்யும் அதிகாரி அவர்களின் பெயர்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) பதிவு செய்கிறார். அதே சமயத்தில் சுமார் 15ரூ அதாவது 15,000 பேரின் விவரங்கள் குறித்து அவருக்கு சந்தேகம் எழுகிறது. எனவே அவர்களின் பெயர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவேற்றப்படாது. நினைவில் கொள்ளுங்கள்! இந்த தனிப்பட்ட அதிகாரி எனும் ஒற்றை நபர்தான் அதிகாரம் படைத்தவர். விவரங்களை சரிபார்க்க அனைத்து கட்சி அல்லது குடிமக்களின் எவ்வித கூட்டு அமைப்பும் உருவாக்கப் படாது; மாறாக ஒரு தனி நபர்தான் தீர்மானிக்கிறார். இவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உட்பட இதில் பிரதிபலிக்கும் ஆபத்து உள்ளது. அடுத்து 15,000 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். அதே போல ஒருவரின் விவரங்கள் குறித்து வேறு எவர் ஒருவரும் ஆட்சேபணையை எழுப்ப முடியும். உதாரணத்திற்கு உங்களை பிடிக்காத அண்டை வீட்டுக்காரர்  உங்களை பற்றி ஆட்சேபணை எழுப்பினால் மக்கள் தொகை பதிவேடு அதிகாரி உங்களுக்கும் நோட்டீஸ் அனுப்புவார்.  இவ்வாறு நோட்டீஸ் பெற்றவர்கள், தாங்கள் குடிமக்கள்தான் என நிரூபிக்க வேண்டும். தற்சமயம் இருக்கும் நடைமுறை என்பது ஒருவர் குடியுரிமை பெற்றவர் இல்லை என்பதை அரசாங்கம்தான் நிரூபிக்க வேண்டும். ஆனால் புதிய நடைமுறையில் குடியுரிமை பெற்றுள்ளேன் என்பதை தனிநபர்தான் நிரூபிக்க வேண்டும். குடியுரிமையை நிரூபிக்கும் சுமை அரசாங்கத்திட மிருந்து தனி நபருக்கு மாற்றப்படுகிறது. சந்தேக வளையத்திற்குள் சிக்கிக் கொண்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் அந்த அதிகாரி யின் அலுவலகத்துக்கு வரவேண்டும். அப்பொழுது அந்த அதிகாரி கேட்கும் அனைத்து ஆவணங்களை யும் சமர்ப்பிக்க வேண்டும். உங்களின் ஆதார் எண் / ஓட்டுநர் உரிமம்/ வருமான வரி அட்டை / வாக்காளர் அடையாள அட்டை /பாஸ்போர்ட் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அவை மட்டும் போதாது. உங்களின் பெற்றோர்கள் பிறந்த இடம்/வாழ்ந்த இடம்/பிறந்த தேதி ஆகியவையும் அதற்கான ஆதாரங்களையும் தர வேண்டும்.

இந்த தருணத்தில் குடியுரிமை பெற தகுதி படைத்தவர்கள் யார் என்பதை கவனிக்க வேண்டும்.

2003ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கம் கொண்டு வந்த திருத்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் பிறந்த கீழ்கண்ட பிரிவினர் குடியுரிமை பெற தகுதிபடைத்தவர்கள்: 26.01.1950 அன்று அல்லது அதற்கு பின்பு, ஆனால் 01.07.1987க்கு முன்பு  இந்தியாவில் பிறந்தவர்கள். 01.07.1987 அன்று அல்லது அதற்கு பின்பு ஆனால் 2003ஆம் ஆண்டு திருத்தம் அமலாக்கத்திற்கு முன்பு இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்; மேலும்  பெற்றோர் இருவரில் யாராவது ஒருவர் தனது பிறப்பின் பொழுது இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.

2003ம் ஆண்டு திருத்தம் அமலாக்கத்திற்கு பிறகு இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்; மேலும் பெற்றோர் இருவரும் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்; அல்லது ஒருவர் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.  இன்னொருவர் சட்டவிரோத புலம் பெயர்ந்தவராக இருக்க கூடாது.  (வெளி நாட்டில் பிறந்தவர்களுக்கு தனியாக சட்டவிதிகள் உள்ளன)

இந்த சட்டவிதிகளின்படி குடியுரிமையை நிரூபிக்க பிறப்பு சான்றிதழ் முக்கிய ஆவணமாக முன்வருகிறது. ஆனால் முதல் பிரிவினருக்கு பெரும்பாலும் பிறப்பு சான்றிதழ் இருக்க வாய்ப்பு இல்லை. இரண்டாவது பிரிவினருக்கு பிறப்பு சான்றிதழ் இருக்கும். ஆனால் அவர்களின் பெற்றோருக்கு இருக்க வாய்ப்பு இல்லை. மூன்றாவது பிரிவினர் மற்றும் அவரது பெற்றோருக்கு பிறப்பு சான்றிதழ் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே முதல் பிரிவினர் அனைவரும் இரண்டாவது பிரிவினரில் பெரும்பாலோரும் தமது அல்லது தமது பெற்றோரின் பிறப்பு சான்றிதழ்களை தேடி அலைய வேண்டிய சூழல் உருவாகும்.

2000ம் ஆண்டு வரைகூட சுமார் 57ரூ பிறந்த குழந்தைகளுக்குதான் பிறப்பு சான்றிதழ்கள் உள்ளன. இது 2017ஆம் ஆண்டு 85ரூக்கு உயர்ந்துள்ளது. எனினும் இன்னும் 15ரூ குழந்தைகள் சான்றிதழ்கள் இல்லாமல் உள்ளனர். ஓரளவு வசதி படைத்த வீடுகளில் 9ரூ குழந்தைகளுக்கு தான் பிறப்பு சான்றிதழ் இல்லை. ஆனால் ஏழை வீடுகளில் 23ரூ குழந்தை களுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை . பிற்படுத்தப் பட்ட பிரிவினரில் 28ரூ, தலித் பிரிவில் 39ரூ, பழங்குடி பிரிவில் 44ரூ குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை. 12 ஆண்டு கல்வி கற்ற தாய்மார்களின் 78ரூ குழந்தைகளுக்கு சான்றிதழ் உள்ளது. ஆனால் கல்வி கற்கவாய்ப்பில்லாத தாய்மார்களின் 42ரூ குழந்தை களுக்குதான் பிறப்பு சான்றிதழ் உள்ளது. (ஆதாரம் : இண்டியா ஸ்பெண்ட் இதழ்)

ஆவணங்களை பெறுவதில் அல்லது பராமரிப் பதில் பொருளாதார நிலைமை / சாதிய நிலைமை / கல்வி ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன என்பதையே இந்த விவரங்கள் தெளிவாக்குகின்றன. ஏழை அல்லது சமூகத்தில் அடித்தட்டில் உள்ள அனைத்து மதங்களை சேர்ந்த குடும்பத்தினரும் அவர் தம் குழந்தைகளும் தேசிய குடிமக்கள் பதிவேடில் இடம் பெறாமல் போவதற்கான ஆபத்துகள் அதிகம் உள்ளன என்பதை எவரும் மறுக்க இயலாது.

முறைசாரா/இடம் பெயரும் உழைப்பாளிகள் எங்கே செல்வர்?

பிறப்பு சான்றிதழ் தர இயலாதவர்கள் மாற்று ஆவணங்கள் தர வேண்டும். அந்த மாற்று ஆவணங்கள் என்ன? நிலம்/சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்கள் அல்லது எல்ஐசி காப்பீடு போன்ற சில ஆதாரங்கள் தரப்பட வேண்டும். இங்குதான் சுமார் 40 கோடி எண்ணிக்கையில் உள்ள முறைசாரா உழைப்பாளிகளாக உள்ள ஏழைகள் அல்லது வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்ந்தவர்கள் பாதிக்கப்படுவர். தினமும் உண்பதற்கே கூலி வேலை செய்யும் உழைப்பாளிகள் எப்படி இடம் அல்லது காப்பீடு வாங்க இயலும்? அதற்கான ஆவணங்கள் அவர்களிடம் எப்படி இருக்க முடியும்?  ஒருவர் இராமநாதபுரத்திலிருந்து சென்னை அல்லது கோவைக்கு வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்ந்தவர் எனில் அவருக்கு ஆவணங்கள் எப்படி இருக்கும்? அவரது தந்தை அல்லது தாத்தாவின் ஆவணங்களுக்கு எங்கே போவார்? தனது வாழ்வாதாரப் பணியை விட்டுவிட்டு இராமநாதபுரம் போய் தேடுவாரா? அப்படியே போனாலும் ஆவணங்கள் கிடைக்குமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. எனவே, முஸ்லீம் அல்லாதவர்களும் இத்தகைய பிரச்சனைகளை சந்திப்பர். மக்கள் தொகை பதிவேடு அதிகாரிக்கு குறிப்பிட்ட மதம் அல்லது சாதியை சார்ந்தவர்களை பிடிக்கவில்லை எனில், அவர்களை “சந்தேகம்” எனும் வளையத்திற்குள் கொண்டு வந்துவிட முடியும். அதற்கு பின்னர் இத்தகைய மக்கள் ஆவணங்களை தேடி அலைய வேண்டி வரும். இது கற்பனை அல்ல; இதுதான் அசாமில் நடந்தது. தமது பெயர்களை பதிவேட்டில் இணைக்க மக்கள் லஞ்சம்  உட்பட பல செலவுகளை செய்தனர். ஒரு சிலர் தமது வாகனங்கள் அல்லது இடத்தை விற்று பல்லாயிரம் ரூபாய்களை அதிகாரிகளுக்கு செலவு செய்தனர் என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பாதிக்கப்படும் இந்துக்கள்

இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் முஸ்லீம்களாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. இந்துக்களும் கிறித்துவர்களும் பாதிக்கப்படலாம். இதிலிருந்து, குடியுரிமை சட்ட திருத்தத்தின்படி விலக்கு பெற வேண்டு மெனில் முஸ்லீம் அல்லாதவர்கள் தாங்கள் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என நிரூபிக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை. ஏனெனில் தேசிய மக்கள்தொகை பதிவேடு விவரங்களின் பொழுது எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை நீங்கள் சொல்லியிருப்பீர்கள். இப்பொழுது அதனை மாற்றி பாகிஸ்தான் அல்லது வங்கதேசம் என கூற இயலாது. எனவே தற்போதைய குடியுரிமை சட்டத்திருத்தம் கூட இவர்களுக்கு உதவாது. இந்துக்களில் சுமார் 40ரூ பேர் பாதிக்கப்படுவர் என்கிறார் அம்பேத்காரின் பேரனும் மகாராஷ்டிரா தலித் இயக்கத்தின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர். பிரிட்டஷார் “ஆதிவாசி குற்ற பரம்பரை” சட்டத்தை 1871ஆம் ஆண்டு கொண்டு வந்தனர். இச்சட்டத்தின் கீழ் ஏராளமான ஆதிவாசி மக்கள் “திறந்த வெளிச் சிறைச் சாலைகளில்” (னுநவநவேiடிn ஊநவேநசள)வைக்கப்பட்டனர். 1952ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு அரசாங்கம்தான் இந்த சட்டத்தை அகற்றி இவர்களை விடுதலை செய்தது. சுமார் 80 ஆண்டுகள் இலட்சக்கணக்கான ஆதிவாசி மக்கள் இந்த சிறைகளில் இருந்தனர். பலர் அங்கேயே பிறந்தனர்/இறந்தனர். இவர்களில் எவருக்கும் எந்த ஆவணமும் கிடையாது. ஆவணங்கள் இல்லாத இத்தகையவர்கள் மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 1.80 கோடி பேர் உள்ளனர். இப்படி ஆதிவாசி மக்கள்/ தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினர் என 40ரூ பேர் இந்த சட்டத்தால் பாதிக்கப்படுவர் என்கிறார் பிரகாஷ் அம்பேத்கர். மத்தியப் பிரதேசத்தில் நாடோடி சமூகத்தை சார்ந்த 51 பிரிவினர் உள்ளனர். இவர்களின் மக்கள் தொகை 60 இலட்சம். நாடோடி மக்களின் விவரங்களை சேகரிக்கும் ரேன்கா எனும் குழு இவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுதும் 11 கோடி என கணக்கீடு செய்துள்ளது. இவர்கள் எந்த ஒரு இடத்திலும் நிரந்தரமாக தங்குவது இல்லை. இவர்களிடம் குடியுரிமைக்காக எந்த ஆவணமும் இல்லை. இவர்கள் எங்கே போவார்கள்? இந்தியாவில் ஆதார் எண் இல்லாதவர்கள் 11ரூ அதாவது சுமார் 14 கோடிப் பேர் உள்ளனர். ஆதார் எண் பெற தேவையான ஆவணங்களை இவர்களால் தர இயலவில்லை. அப்படியாயின் குடியுரிமைக்கான ஆவணங்களை இவர்கள் எப்படி தர இயலும்?  ஆகவே CAA-NPR-NRC எனும் திரிசூலம் முஸ்லீம் களை மட்டுமல்ல; இந்துக்கள் உட்பட அனைவரையும் பாதிக்கும். எனவே இவற்றை முறியடிப்பது மிக மிக அவசியமாகிறது.

நன்றி : ‘தீக்கதிர்’

பெரியார் முழக்கம் 09012020 இதழ்

You may also like...