தா.மோ. அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி தவறான முன்னுதாரணம் பிரார்த்தனை – வழிபாடுகள் நடத்தி கலைஞர் கொள்கையை அவமதிக்க வேண்டாம்

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி அவர்கள், கலைஞர் உடல்நலம் பெற பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார். சரியான நேரத்தில் விடுக்கப்பட்டn வண்டுகோள் இது. வாழ்நாள் முழுதும் நாத்திகராக வாழ்ந்து வரும் ஒரு தலைவருக்காக இப்படி பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவது கலைஞரின் கொள்கைக்கு இழைக்கும் துரோகமும் அவமதிப்பும் ஆகும்.

சில பார்ப்பன ஊடகங்கள், இப்படிப்பட்ட ‘பிரார்த்தனை’கள் நடத்தப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செய்திகளை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு திருவாரூரில் கலைஞர் படித்த பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளி மைதானத்திலேயே (கோயிலில்  அல்ல) ‘கூட்டு பிரார்த்தனை’யை அவர்கள் நம்பிக்கை அடிப்படையில் நடத்தியதை வெளியிட்டு தமிழகம் முழுதும் தி.மு.க.வினர் வழிபாடுகளை நடத்துவதாக ஒரு கற்பனையை செய்தியாக உருவாக்கிப் பரவ விட்டது. இந்து மக்கள் கட்சியைச் சார்ந்த அர்ஜூன் சம்பத் என்பவர் கலைஞரை நலம் விசாரிக்கச் செல்வதாகக் கூறி கோயில் பிரசாதங்களை எடுத்துப் போய் வழங்கி பண்பாடற்ற முறையில் நடந்து கொண்டார். ஒரு வைதீகர் இறப்பில் கடவுள் மறுப்பாளர்கள், ‘ஆன்மா, கடவுள்’ மறுப்பு நூல்களைக் கொண்டு போய் வழங்கினால் அதை ஏற்பார்களா? பகுத்தறிவாளர்கள் அத்தகைய பண்பாடற்ற செயல்களில் ஒரு போதும் ஈடுபட மாட்டார்கள்.

காவேரி மருத்துவமனை முன்பு எவரோ ஒருவர் ‘பூசணிக்காயை’ச் சுற்ற, உடனே ஊடகங்கள் அதைப் பெரிதாக ஒளிபரப்பத் தொடங்கிவிட்டன. தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி கூட்டுப் பிரார்த்தனையில் அமர்ந்து தங்கள் ‘பக்திப் பரவசத்தை’ வெளிப்படுத்தியிருப்பதை ஊடகங்கள் ஒளிபரப்பின. இந்த செயல் கலைஞர் கொள்கையை அவமதித்ததாகவே கருத வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கலைஞருடனேயே இருக்கும் அவரது உதவியாளர் நித்யாவின் பேட்டி ஒன்றை ‘தமிழ் இந்து’ நாளேடு (ஜூலை 31, 2018) வெளியிட்டுள்ளது. அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“தலைவருக்குக் கடவுள் நம்பிக்கைக் கிடையாதுங்குறது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எனக்கு கடவுள் பக்தி உண்டு. ஒரு முறை நான் பக்கத்துல இருக்குற கோயிலுக்குப் போயிட்டு வந்து, தலைவருக்கு விபூதி குங்குமம் வெச்சி விட்டேன், அழிச்சிட்டாங்க. இந்த வைராக்கியம் இருக்கு பாருங்க தலைவரோட மனோ தைரியம் தான் அவரோட உயிர்” என்று கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். உடல்நலிந்தபோது பிரார்த்தனை சடங்குகள் தொடங்கி வைக்கப் பட்டன. அப்போதே ‘பிரார்த்தனை’ மோசடிகளைக் கண்டித்து பெரியார் இயக்கம் கூட்டங்களை நடத்தியது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவமனை வளாகம் பஜனை மடமாக்கப்பட்டு அமைச்சர்கள் மொட்டை அடித்து, காவடி தூக்கி, மண் சோறு சாப்பிட்டு, கூத்து அடித்ததை நாடு பார்த்து கைகொட்டி சிரித்தது. தி.மு.க.விலும் அந்தக் கலாச்சாரத்தைப் புகுத்திட பார்ப்பன ஊடகங்கள், மதவாத சக்திகள் துடிப்பதாகத் தெரிகிறது. இதை தி.மு.க. தலைமை, குறிப்பாக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி, ஆ. ராசா போன்றவர்கள் ஊக்கப்படுத்த மாட்டார்கள் என்றே நம்புகிறோம். இந்த சடங்குகளை அனுமதிக்கவும் கூடாது.

ஒரு தலைவருக்குக் காட்டும் மரியாதை, அன்பு என்பது  அவர் ஏற்றுக் கொண்ட இலட்சியங்களை மதிப்பதாகவே இருக்க வேண்டும்.

பெரியார் முழக்கம் 02082018 இதழ்

You may also like...