வன்மவாதிகளுக்குப் பாடம் எடுத்த மாரி செல்வராஜ்!

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் இந்த ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜிற்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. பெரியார் மீது வன்மக் கணைகளை வீசும் கூட்டத்துக்கு அப்போது தக்க பதிலடி கொடுத்த மாரி செல்வராஜின் பேச்சு இணையத்தில் கவனம் பெற்றது. அவரது பேச்சில் இருந்து.

“திருமணத்திற்கு என் இணையர் வீட்டில் எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். ஏனென்றால் அவர்கள் வீட்டில் பெரியார் இருந்தார். எனக்குப் பெரியாரை அறிமுகப்படுத்தியதே என் இணையர்தான். நான் பெரியாரை விட மிகச்சிறந்த சிந்தனையாளன் என என்னை நிரூபிக்க வேண்டும் என்றால் பெரியாரைத் திட்டி நிரூபிக்க கூடாது. அதற்கும் மேலானதாக சிந்திக்கவேண்டும். பெரியாரை புரிந்து கொள்வது சாதாரணமான விஷயம் கிடையாது. அவர் எப்போதும் நம்மை மேம்படுத்துவதற்கான விஷயங்களையே சொல்லி இருக்கிறார்.

இன்னும் பெரியாரை வாசிக்க வாசிக்க, நன்றாகப் பேச கற்றுக் கொள்ளலாம். பின்பு அவரையே எதிர்த்துப் பேசலாம். இன்னொன்று அவரைப் பற்றி பேசும்போது மட்டும்தான் நீங்கள் பெரிய ஆளாக முடியும்.

ஆசானை மீறுவது என்ற ஒன்று உண்டு. ஆனால் ஆசானை மீறுவது என்பது ஆசானைக் குறை சொல்லி அல்ல, ஆசான் உங்களைப் பாராட்ட வேண்டும். `என்னை விட பெரிய இயக்குநர் ஆக வேண்டும். அப்போதுதான் நான் உனக்கு சரியாக கற்றுக் கொடுத்திருக்கிறேன் என அர்த்தம்’ என ராம் சார் என்னிடம் சொல்வார். எனவே நான் பெரியாரை விட மிகச்சிறந்த சிந்தனையாளன் என என்னை நிரூபிக்க வேண்டும் என்றால் பெரியாரைத் திட்டி நிரூபிக்கக்கூடாது.

பெரியாரின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக இயங்குவதே செய்ய வேண்டியது. எதை மக்களிடம் சேர்க்கிறோம் என்பது மிக முக்கியமானது. வன்மத்தையும், வெறுப்புணர்ச்சியையும், பிரிவினையையும் கொடுப்பது சாதனை கிடையாது. எல்லாவற்றையும் இணைப்பது.

அது ஜெயிப்போமா, தோற்போமா என்று தெரியாத யுத்தம். ஆனால் சாகும் வரை அந்த யுத்தத்தை நிகழ்த்திக் கொண்டே இருந்தீர்கள் என்பதே உங்கள் வாழ்வின் உன்னதமான நிலை. அந்த உன்னத நிலை தான் பெரியார் என புரிந்து கொண்டேன் நான்” என்றார் அவர்.
பெரியார் முழக்கம் இதழ் 22012026

You may also like...