தீவட்டிப்பட்டி கலவரத்தில் காவல்துறை பாரபட்சம்! பாதிக்கப்பட்டவர்கள் மீதே பாயும் நடவடிக்கை! உண்மை கண்டறியும் குழுவின் பரிந்துரைகள்
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி மே 2/2024 அன்று நடந்த சாதிய வன்முறைகளைத் தொடர்ந்து, முற்போக்கு, சனநாயக அமைப்புத் தோழர்கள் மே 11 ஆம் நாளன்று நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நாச்சினாம்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் (Investigation Officer – I.O.) திரு.ஞானசேகரன் அவர்களையும் சந்தித்து ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் அடிப்படையில் உண்மை அறியும் குழு அரசுக்கு முன்வைக்கும் பரிந்துரைகள்:
• ஆதிதிராவிடர் பகுதியில் தேவையில்லாமல் பலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவை திரும்பப் பெறப்பட வேண்டும். எடுத்துக் காட்டாகப் பெருமாயி மகன் அருண்குமார் (வயது 23) , குணா ( 21 ) தா/பெ பழநியம்மாள் போன்ற பல அப்பாவி இளைஞர்கள் கலவரத்தில் காயம் அடைந்ததோடு ஆத்தூர் சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளனர்.
• காவல்துறை தாக்குதலால் காயம் பட்டு இருப்பவர்களுக்கு உரிய தரமான மருத்துவ சிகிச்சை அரசு பொறுப்பில் வழங்கப்பட வேண்டும்.
• காவல்துறைக் கண்காணிப்பை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இரவு நேரத்தில் வந்து ஆதிதிராவிட இளைஞர்களைக் கைது செய்து கொண்டு செல்லும் நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
• தீவட்டிப்பட்டியில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும். எடுக்கப்பட வேண்டும்.
• சக்தி மாரியம்மன் கோயில், தமிழ்நாடு அறநிலைத்துறையின் கீழ் இருந்தாலும் வன்னியர்கள் தங்களது ஆதிக்கத்தில் அதைக் கையகப்படுத்திக் கொண்டிருப்பது ஏற்கத் தக்கதல்ல. எனவே அறநிலையத் துறை இதில் தலையிட்டுக் கோயிலைத் தனது பொறுப்பின் கீழ் கொண்டுவர வேண்டும். மேலும் கோயில் நிர்வாகக் குழுவில் ஆதி திராவிட மக்களுக்கு உரிய பிரதிநித்துவம் தரப்பட வேண்டும்.
• சக்தி மாரியம்மன் கோயில் அறநிலையத் துறையின் கீழ்தான் உள்ளது என்பது பற்றிய அறிவிப்புப் பலகை, கோயிலின் எந்தப் பகுதியிலும் வைக்கப்படவில்லை. அது சரி செய்யப்பட வேண்டும்.
• சக்தி மாரியம்மன் கோயில் பூசாரி பெரும்பான்மைச் சமூகத்தைச் சார்ந்தவராக இருப்பதை மாற்றிச் சுழற்சி முறையில் அமைக்க வேண்டும்.
• தீவட்டிப் பட்டி அரசுயர் பள்ளியில் மாணவர்களிடையே கஞ்சா போன்ற போதைப் பொருள் பயன்பாடு அதிக அளவு இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதை முற்றிலும் ஒழித்துக்கட்டத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
• இந்தக் கலவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த ஆட்டையாம்பட்டி ஒன்றியச்செயலாளர் வெங்கடேசன் என்பவருக்கு மிக முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிய வருகிறது. அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
• ஆதிதிராவிட சமுதாயத்திலுள்ள பெண்கள் பலருக்கு 100 நாள் வேலைதான் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால் அவர்கள் வேலைக்குச் செல்வதற்கும் அஞ்சி வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களிடைய நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
• காவல்துறை பக்கச்சார்பாக நடந்து கொண்டுள்ளது மிகத்தெளிவாகத் தெரிகிறது. பெண்களையும், சிறுவர்களையும் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தி உள்ளனர். குறிப்பாக ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ராணி (38) க/பெ ராஜாமணி என்பவரைக் குளியலறையிலிருந்து இழுத்துக் கொண்டுவந்து தாக்கி உள்ளனர். இத்தகைய அராஜகச் செயலில் ஈடுபட்ட காவலரைக் கண்டறிந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• சிசிடிவி காமிரா மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது செல்பேசியில் எடுத்த படங்கள் ஆகியவற்றைப் பரிசீலித்துத் தவறு செய்த குற்றவாளிகள் மீது பக்கச் சார்பின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.சிசிடிவி காமிராவில் ஒருவேளை படங்கள் இல்லாவிட்டால், அதற்குப் பொறுப்பாக உள்ள காவல் துறையினர் மீது நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
• பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, தீக்கிரையாக்கப்பட்ட கடைகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
• கோயில் விழாவினை எதிர்வரும் காலத்தில் அறநிலையத் துறையின் கண்காணிப்பின் கீழ் நடத்த வேண்டும்.
• ஆதிதிராவிடர் பகுதியில் இவ்வளவு கடுமையான பாதிப்பு இருந்தும், காவல்துறை அதன் அடிப்படையில் வழக்கு எதுவும் பதிவு செய்யாதது ஏற்கத் தக்கதல்ல. இனியாவது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து புகார் பெற்று வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.
• கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் கோவில்களில் பட்டியலின மக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தும் போதெல்லாம், அந்தக் கோயில்கள் பூட்டப்படுவதும், சீல் இடுவதும்தான் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆதிக்க சாதிகளைச் சார்ந்தவர்களும் தாங்கள் வழிபாடு நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் சரி, பட்டியலின மக்களை அனுமதிக்காமல் இருந்தால் போதும் என்ற அவர்களின் கருத்துக்கு அது ஏற்பளிப்பதாக ஆகிவிடுகிறது. எனவே இனி எந்த ஓர் அறநிலையத் துறை சார்ந்த கோயிலிலும், பொதுக் கோவில்களிலும் இதுபோன்ற பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை தடுக்கப்படும் போது அரசு வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குகள் பதிவதோடு, அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள ஆய்வில் பங்கெடுத்தோர்
• கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
• கண.குறிஞ்சி
ஒருங்கிணைப்பாளர், சமூகநீதிக் கூட்டமைப்பு
• மருதுபாண்டியன், சோசலிச மையம்
• தமயந்தி
தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கம்
• வளர்மதி, SUMS
• மாரியப்பன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
• கோ.சீ.மணி
• மூர்த்தி
தலைவர், நல்வழிக்கழகம்
• அருண்சோரி, க.க. மா-லெ-மா
• கண்ணன்
பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்