தலையங்கம் – கருத்துரிமைக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பு!
சமூக வலைத் தளங்களில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்வதை முடக்கி சிறையில் தள்ளும் கொடூரமான கருத்துரிமையை பறிக்கும் தகவல் தொழில்நுட்ப 66(ஏ) சட்டத்தை உச்சநீதிமன்றம் இரத்து செய்து விட்டது. 2008 ஆம் ஆண்டு அன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கொண்டு வந்த சட்டம் இது. அப்போது எதிர்கட்சியாக இருந்த பா.ஜ.க. எதிர்த்தது. இப்போது ஆட்சிக்கு வந்துவிட்ட பா.ஜ.க. உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்துக்கு ஆதரவாகவே வாதாடியது. அதிகாரத்துக்கு வந்த பிறகு தங்களது ஊழல் முறைகேடுகள் அம்பலமாகிடக் கூடாது என்பதே ஆட்சியாளர்களின் நோக்கம்; அதற்காக எந்த அடக்குமுறை சட்டங்களையும் அவர்கள் கையில் எடுப்பார்கள்.
சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே மரணத்தையொட்டி மும்பையில் முழு அடைப்பு திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து வலைதளத்தில் கருத்து தெரிவித்த கல்லூரி மாணவி ஷாகின் மீது இச்சட்டம் பாய்ந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அவரது கருத்துக்கு விருப்பம் தெரிவித்ததற்காக மற்றொரு மாணவி கைது செய்யப்பட்டார். இதேபோல் உ.பி. ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சியின் அமைச்சரான ஆசம்கான் என்பவரை விமர்சித்ததற்காக 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த கொடூர சட்டப் பிரிவுக்கு எதிராக 21 வயது சட்டக் கல்லூரி மாணவி °ரேயா சிங்கால் வழக்கு தொடர்ந்து இப்போது வெற்றி பெற்றிருக்கிறார். அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமைக்கு எதிரானது இந்த சட்டம் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறி, சட்டத்தையே இரத்து செய்து விட்டது. இந்தத் தீர்ப்பு இணையதளத்தில் பதிவிடுவோருக்கான உரிமை என்ற எல்லையையும் தாண்டி நாட்டில் தற்போது பரவிவரும் ‘பார்ப்பன-பாசிச’ சிந்தனைக்கும் எதிரானது என்றே கூற வேண்டும்.
இந்தத் தீர்ப்பு, கருத்துரிமை குறித்து விரிவாக விவாதித்துள்ளது. கருத்துகளை வெளிப்படுத்தும் முறைமைகளை மூன்று வகையாக பிரித்துக் காட்டியிருக்கிறது. ஒன்று ஒரு கருத்தை முன் வைத்து நிகழும் விவாதங்கள்; இரண்டாவது – இதுவே சரியான கருத்து என்று வலியுறுத்துவது; மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது; மூன்றாவது வகை – “தன்னுடைய கருத்து மட்டுமே சரியானது, அதை மற்றவர்களும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்; அதற்காக மற்றவர்களை தூண்டுவது” – இந்த மூன்றாவது வகையினர் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையைக் கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி யிருக்கிறது. ஒரு பிரச்சினையை விவாதிப்பதற்கும் ஒரு கருத்தை உறுதியாக ஆதரிப்பதற்கும் அவை விரும்பக் கூடியதாகவோ அல்லது பெரும்பாலோர் ஏற்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை; பெரும்பாலோர் ஏற்கவியலாத கருத்தாக இருந்தாலும் அதை விவாதிக்கவும் வலியுறுத்தவுமான உரிமையே அடிப்படை உரிமைக்கான உயிர்நாடிஎன்று உச்சநீதிமன்றம் எடுத்துக் காட்டியிருக்கிறது.
பெண்கள் முன்னேற்றத்துக்கான தடை; ஜாதி ஒழிப்புக்கான கருத்துகள்; மதமாற்றம்; இவை குறித்து ஒரு பிரிவினர் கருத்து; வேறு ஒரு பிரிவினருக்கு ‘எரிச்சல்’ ஊட்டுவதாக இருக்கலாம். அதன் காரணமாகவே அந்தக் கருத்தை வெளியிடும் உரிமையைப் பறிக்க முடியாது என்று குறிப்பாக உச்சநீதிமன்றம் எடுத்துக் காட்டியிருக்கிறது.
பார்ப்பன மதவெறி சக்திகள் தங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துகளை அனுமதிக்கக் கூடாது என்று கலவரங்களை நடத்து கிறார்கள். தொலைக்காட்சி நிலையங்களில் குண்டுகளை வைக் கிறார்கள்; மாட்டுக்கறி விருந்து, தாலி நீக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்கக் கூடாது என்று காவல்துறைக்கு மனு போடுகிறார்கள். பெரியார் இயக்கக் கூட்டங்களை அனுமதிக்கவே கூடாது என்கிறார்கள். காவல் துறையும் பல நேரங்களில் இந்த மதவெறி சக்திகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன.
பெரியார் இயக்கம் எந்த ஒரு கருத்தையும் மக்கள் மீது திணிப்பது இல்லை. நாள்தோறும் மணிக்கணக்கில் மேடைகளின் வழியாக மக்களிடம் பேசி வந்த பெரியார், தனது உரையின் இறுதியில், “எனக்கு சரியென்று பட்டதை நான் கூறினேன்; உங்கள் பகுத்தறிவைக் கொண்டு சிந்தியுங்கள்; சரி என்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லை என்றால் தள்ளி விடுங்கள்” என்று கூறியே, தனது ஒவ்வொரு உரையையும் நிறைவு செய்வார். மக்களுக்கு முடிவெடுக்கும் கருத்துரிமையை பெரியார் இயக்கம் இப்படித்தான் வழங்கியது. மாறாக பார்ப்பனப் பாசிசம் மாற்றுக் கருத்துகளை முடக்குவதையே நோக்கமாகக் கொண்டது. அதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள்.
ஒன்றை உறுதியாகக் கூறுகிறோம் – சட்டங்களின் பாதுகாப்போடு மட்டுமே சமூக மாற்றத்துக்கான ஒரு இயக்கம் செயல்பட முடியாது என்பதை உணர்ந்துதான் பெரியார் இயக்கம் களத்தில் நிற்கிறது. தேவைப்பட்டால் சட்டங்களின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு அதற்கான விலையையும் தந்து வருகிறது. எனவே அச்சுறுத்தலால்
இந்த இயக்கத்தின் பயணத்தை எந்த சக்தியாலும் தடுத்து
நிறுத்த முடியாது. ஆனாலும், நீதிமன்றங்களின் இத்தகைய தீர்ப்புகளை மதவாத சக்திகளின் மிரட்டலுக்கு அடிபணியும் அரசு நிர்வாகமும் காவல்துறையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்!
பெரியார் முழக்கம் 02042015 இதழ்