எளிய ஆங்கிலத்தில் பெரியாரியலை பேசும் நூல் “Periyar, Caste, Nation,Socialism”
பெரியாரிய மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.வி.ஆர் (எஸ்.வி ராஜதுரை) எழுதிய பெரியார் குறித்த ஆங்கில நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. “பெரியார் ஜாதி, தேசம் மற்றும் சோசலிசம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆங்கில நூல், உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பெரியார் அம்பேத்கர் சிந்தனையாளரான வித்யாபூஷன்ராவத் என்ற ஜாதி எதிர்ப்புப் போராளி எஸ்.வி.ஆர் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பே இந்த நூல்.
பெரியார், அம்பேத்கர் இடையிலான கொள்கை உறவுகள், பெரியாரின் வடநாட்டு பயணங்கள், புத்த மார்க்கம் குறித்த இவர்களது பார்வைகள், திராவிட இயக்கம் பட்டியலின பிரிவினருக்கான உறவுகள் குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. பல வரலாற்றுச் செய்திகள் இதில் குவிந்து கிடக்கின்றன.
பெரியாரின் வடநாட்டுப் பயணங்கள் குறித்த விரிவான செய்திகள் இடம் பெற்றுள்ளன. 1944 தொடங்கி 1970 வரை பெரியார் கல்கத்தா, கான்பூர் (இரண்டு முறை), லக்னோ (இரண்டு முறை), டெல்லி, பம்பாய் (மூன்று முறை) மற்றும் பூனே நகரங்களுக்கு பெரியார் பயணம் செய்துள்ளார். 1944 டிசம்பர் 20 நாளில் கல்கத்தாவில் எம்.என்.ராய் அவர்களின் அழைப்பை ஏற்று அவரது நிகழ்வில் பேசியுள்ளார். “ரேடிக்கல் ஹியூமானிசம்” என்ற அமைப்பை நடத்தியவர் எம்.என்.ராய், மார்க்சிய சிந்தனையாளராக இருந்த எம்.என்.ராய் பிறகு அதிலிருந்து மாறுபட்டு மனிதஉரிமை அடிப்படையிலான சுயமரியாதை கருத்துக்களை முன்வைத்து அவர் உருவாக்கிய கோட்பாடுதான் ரேடிக்கல் ஹியூமானிசம். வர்க்கப் போராட்டம், தீவிர பொருளாதார கருத்தியல்கள் மனித உரிமைகளை மறுக்கின்றன என்பது அவரது கருத்து. மூடநம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவு கருத்துகளையும், தனிமனித உரிமைகளையும் வலியுறுத்துகிற கூட்டாட்சி அமைப்பு வரவேண்டும் என்று அவரது அமைப்பு வலியுறுத்தியது.
பெரியாரின் தமிழ் உரையை சென்னை மாகாணத்தின் அமைச்சராகவும் வகுப்புவாரி உரிமை ஆணையை முதலில் செயல்படுத்தியவருமான எஸ்.முத்தையா முதலியார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஆனால் முக்கியத்துவமான இந்த மாநாடு குறித்து விரிவான தகவல் குடிஅரசு மற்றும் விடுதலை ஏடுகளில் பதிவாகவில்லை. இது தவிர பெரியார் பங்கேற்ற பெரும்பான்மையான கூட்டங்கள் அம்பேத்கருக்கு நெருக்கமான குடியரசு கட்சி ஏற்பாடு செய்த கூட்டங்களே ஆகும்.
பார்ப்பனியத்தை எதிர்த்து பார்ப்பனரல்லாத அனைத்துப் பிரிவினரும் ஓரணியாகத் திரள்வோம் என்ற கருத்து இந்த கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது. பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் முரண்பாடு கூர்மை அடைந்திருந்த காலகட்டம். அம்பேத்கர் மறைந்த அடுத்த ஆண்டு 1959-ல் பிப்-9ல் கான்பூரில் குடியரசு கட்சி பெரியாரை பேசுவதற்கு அழைத்திருந்தது. இதில் மணியம்மையார் அவர்களும் பங்கேற்றார். தொடர்வண்டியிலேயே ஹைதராபாத் – நாக்பூர் வழியாக, அங்கேயே சில நாட்கள் தங்கி விட்டு, கான்பூர் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
பெரியாருக்கு எழுச்சியான வரவேற்பு தரப்பட்டது. வரவேற்புப் பத்திரத்தில் “பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களின் இந்த நூற்றாண்டுக்கான தலைவர், யுக புருஷர்; அம்பேத்கர் மறைந்து ஒரே ஆண்டில் பார்ப்பனர்கள் தங்களின் ஒடுக்குமுறைகளை தீவிரமாக்கி விட்டார்கள், இந்த சூழலில் நேருவின் பார்ப்பன அரசை எதிர்த்து நிற்கும் துணிவு மிக்கத் தலைவர் பெரியார் ஒருவர்தான்” என்று அந்த வரவேற்புப் பத்திரத்தில் பெருமையுடன் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் பெரியார் 2 மணி நேரம் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி இருக்கிறார். “பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் தெற்காக இருந்தாலும் சரி, வடநாடாக இருந்தாலும் சரி; நாம் அனைவரும் இந்து தர்மத்தின் கீழ் சூத்திரர்கள் என்றே வாழ்கிறோம். பார்ப்பனியத்தை எதிர்த்து நடக்கும் இந்த போராட்டத்தில் நமக்குள் வடநாடு தென்னாடு என்ற பேதம் இல்லை ”என்று பெரியார் பேசினார்.
அதே 1959-ல் லக்னோவில் குடியரசு கட்சி ஏற்பாட்டில் பெரியார் பேசினார். புத்த பிக்குகளும், குடியரசு கட்சியினரும் இணைந்து பெரியாருக்கு உற்சாக வரவேற்ப்பு அளித்தனர். இந்து மகாசபை மற்றும் ஜனசங்கத்தினர் சிலர் பெரியார் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். குழப்பங்களை ஏற்படுத்திய முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பெரியாரை வரவேற்றுப் பேசியவர் லோகியாவின் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜ்நாராயணன். பெரியாருக்கு விருந்தளித்து வரவேற்றார். அப்போது அவர் உ.பி சட்டமன்ற உறுப்பினர். காசி விஸ்வநாதன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்துச் சென்று போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருந்த, அடுத்த சில வாரங்களில் இந்த கூட்டம் நடந்தது. ராஜ்நாராயணன் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். இந்திராகாந்தியை ரேபரேலி தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டு தோற்கடித்தவர் ராஜ்நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாதி ஒழிப்புக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த போராளி பெரியார் ஈவே ராமசாமி என்று ராஜ்நாராயணன் புகழாரம் சூட்டினார். “பார்ப்பனியத்திற்கு எதிராக மக்களிடம் நாங்கள் செய்துவரும் பரப்புரை நல்ல விழிப்புணர்வை எங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கி வருகிறது, வன்முறையை நாம் கையில் எடுக்கக் கூடாது. நேரு பார்ப்பன ஆட்சி அடக்குமுறையால் அதை ஒடுக்கிவிடும் எனவே மக்களின் சிந்தனையில் நாம் விழிப்புணர்வை உருவாக்கி அவர்களை தயார் செய்து விட்டால் எதிரிகளை எளிதாக விழ்த்தி விட முடியும்” என்றார் பெரியார்.
1968 அக்டோபர் 12ஆம் தேதி இரண்டாவது முறையாக லக்னோவில் குடியரசு கட்சி ஏற்பாடு செய்த மாநாட்டில் பெரியார் பங்கேற்றார். உ.பி மாநில பட்டியலின ஜாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஒன்று அதில் உருவாக்கப்பட்டது. அம்பேத்கர் முழுஉருவச் சிலை அமைக்கப்பட்ட இடத்தில் மேடை அமைக்கப்பட்டு பெரியாரை பேசுவதற்கு அழைத்தார்கள். “நானும் அம்பேத்கரும் ஒரே சிந்தனையை தனித்தனியாக சிந்தித்தோம், நேரில் சந்தித்தப் போது கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்” என்றார் பெரியார்.
திராவிட இயக்கத்துக்கும் தலித்துகளுக்கும் இடையிலான உறவு குறித்து இந்த நூல் பேசுகிறது. திமுக ஆட்சியில் தீண்டாமை கொடுமைகள் நடக்கவில்லை என்று கூற முடியாது. பல அமைச்சர்கள் ஜாதியவாதிகளாகவே இருக்கிறார்கள். காவல்துறையில் ஊடுருவியுள்ள ஜாதியம் தலித்மக்களுக்கு எதிராகவே இருக்கிறது. அதே நேரத்தில் தீண்டாமையை சட்டங்களினால் ஒழித்து விட முடியாது; அதற்கு கலாச்சாரப் புரட்சி நடத்த வேண்டும் என்ற அம்பேத்கர் கருத்தையும் நாம் கருதிப் பார்க்க வேண்டும். கடந்த காலத்தில் பெரியார் இயக்கம் தலித் தலைவர்களோடு இணைந்து சமூக மாற்றத்திற்கான இயக்கத்தையே நடத்தி வந்தது என்பது வரலாறு. தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகள் அதிகரித்திருப்பதாக ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. அதன் ஆர்கனைசர் ஏடுக’ளில் எழுதுகிறார்கள். அவர்கள் இதை கூறுவதற்கு தார்மீக உரிமை இல்லை. இந்து சமுதாயம் பாரம்பரியப் பெருமைக்குரியது என்று கூறும் இவர்கள் ஒரு பிற்படுத்தப்பட்ட இந்து மற்றொரு தலித் இந்துவை தீண்டாமைக் கொடுமைகளை திணிப்பதை இவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா? இதுதான் இவர்கள் பேசும் இந்து மதப் பெருமையா, என்று கேட்கிறார் நூலாசிரியர்.
பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையை ஏற்று அதில் உறுப்பினர்களாக வரத் துடிக்கும் ஒவ்வொருவரும் ஜாதி அடிப்படையிலான தங்கள் வாக்கு வங்கிகளை உருவாக்கிக் கொள்கிறார். தங்களுக்கான வாக்குவாதங்களை உருவாக்கி கொள்கிறார்கள். இந்த சமூக அமைப்பும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பும் ஜாதியை பாதுக்காக்கிறது. இந்த நிலையில் தீண்டாமைக்கு ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சியின் மீது மட்டும் எப்படி குற்றம் காண முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறார் எஸ்விஆர். -தொடரும்.
இரா.
பெரியார் முழக்கம் இதழ் 02102025
