“தமிழீழமும் – திராவிடர் இயக்கமும்!” கருத்தரங்கம்; கழகத் தலைவர் சிறப்புரை
கோவை மாநகரக் கழக சார்பில் 30.01.25 அன்று “தமிழீழமும் திராவிடர் இயக்கமும்“ சிறப்புக் கருத்தரங்கம் கோவை சிவானந்தா காலனியில் கழகத் தோழர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. மாநகரச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். தோழர்கள் லோகநாயகி, சதீஸ், ஜெகதீஸ், நவீன் முன்னிலை வகித்தனர்.
இதில் கழகத் தலைவர் கொளத்தூர்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர் மலரவன் ஆகியோர் சிறப்பரையாற்றினர். கருத்தரங்கில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர்மணி, தமிழ் ஈழத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இன்ன பிற அமைப்புகளுக்கும் திராவிடர் இயக்கங்களும் அதன் தலைவர்கள் – தோழர்கள் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் – தொண்டர்கள் செய்த தன்னலமற்ற உதவிகளையும், பணிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் மற்றும் ஏனைய பொறுப்பாளர்கள், தளபதிகளின் ஆரிய மனுவாத எதிர்ப்பையும், புலிகளின் பகுத்தறிவு சார்ந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.
மேலும் இதில் விசிக மாநகர மாவட்டச் செயலாளர் கோவை குமணன், தி.மு.க. காந்திபுரம் பகுதிச் செயலாளர் சேதுராமன், திமுக கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் டெம்போ சிவா, வி.சி.க. கோவை மாவட்ட மாநகர செய்தி தொடர்பு அமைப்பாளர் கோவை ராசா, தி.மு.க. மாவட்ட மாநகர மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் செ. மதிவாணன், தமிழ்ப்புலிகள் கட்சி மேற்கு மண்டலத் துணைச் செயலாளர் கோவை குமார், கழக மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், நிலவழகன், ஸ்டாலின் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்னிலையில் மனோஜ்குமார், அபிலாஷ் பாண்டியன் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்தனர். தோழர்களுக்கு இயக்க நூல்களை வழங்கி வரவேற்றார்.இதில் தி.மு.க. வி.சி.க.உள்ளிட்ட தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இருநூறுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதியாக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார் நன்றி கூறினார்.
குறிப்பு: கருத்தரங்கம் தொடங்குவதற்கு முன் அரங்குகிற்கு முன்பாக பாஜக, இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சுமார் 30 மேற்பட்டவர்கள் கருத்தரங்கத்திற்கு எதிராகவும், இந்து கடவுள்களை விமர்சிக்கும் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை கைது செய் என்று கூச்சலிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை கைது செய்து அழைத்து சென்றது.
பெரியார் முழக்கம் 07022025 இதழ்
