தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி
தொழிலாளர்கள் மீது இதுவரை அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நிகழ்த்தி வந்த பல்வேறு வகையான உழைப்பு சுரண்டலை சட்டரீதியாக செய்வதற்கான ஒரு ஏற்பாடு புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பாகும். விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாக இந்நாட்டின் உழைக்கும் மக்களும் போராடிப் பெற்ற 29 சட்டங்களையும் நீக்கிவிட்டு அவற்றை நான்கு சட்ட தொகுப்புகள் ஆக சுருக்கி புதிய தொழிலாளர் சட்டங்களை நிறுவியுள்ளது ஒன்றிய பாசிச பாஜக அரசு.
இந்த சட்டத் தொகுப்பில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்வது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்/ள்களின் கடமையாகும். இந்தச் சட்ட தொகுப்பில் உள்ள சிக்கல்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
புதிய சட்டத்தின் சிக்கல்கள்!
ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதே தற்போதைய வேலை நேரமாக உள்ளது. புதிய சட்ட தொகுப்பு இதில் ஒரு முக்கிய திருத்தத்தை செய்கிறது. வாரத்திற்கு ஆறு நாள் வேலை என்பது கட்டாயம் அல்ல. மாறாக ஒரு தொழிலாளி வாரத்திற்கு நான்கு நாட்களுக்குள் 12 மணி நேரம் வேலை செய்து 48 மணி நேர வேலையை முடித்தால் மீதி 3 நாட்களை விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்கிறது புதிய சட்டத்தொகுப்பு. நடைமுறையில் இது சாத்தியமா? என்றால் நிச்சயமாக கிடையாது. கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் தொடக்கத்தில் இதுபோன்ற சலுகைகளை அளித்து பின்னர் 12 மணி நேரம் என்பதே ஒரு நாளைக்கு சராசரி வேலை நேரம் என தொழிலாளிகளின் மீது திணிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இந்த சட்டம் அளிக்கிறது. இது மட்டுமல்லாமல் பரவல் நேரம் என்ற ஒருமுறையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு தொழிலாளியை காலையில் வேலைக்கு வரவைத்து இடையில் சில மணி நேரங்கள் ஓய்வு கொடுத்து மீண்டும் வேலை செய்ய வைக்கலாம். இதன்மூலம் பெருநிறுவனங்கள் திட்டமிட்டு தொழிலாளியை காலை முதல் இரவு வரை தொழிற்சாலையிலேயே நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்புகளை இந்த சட்டம் ஏற்படுத்துகிறது.
இரண்டாவதாக வார்த்தைகளின் வரையறைகளில் சில மாற்றங்களையும் இந்த சட்டத்தொகுப்பு கொண்டு வந்திருக்கிறது. உதாரணமாக தொழிலாளி என்பதற்கான வரையறையினை காண்போம்.
18,000 ரூபாய் ஊதியத்திற்கு மேல் வாங்கக்கூடிய ஒரு மேற்பார்வையாளர் தொழிலாளி என்ற வரையறைக்குள் வரமாட்டார். பொதுவாக தொழிற்சாலைகளில் அனுபவம் வாய்ந்த தொழிலாளிகள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள். புதிய சட்ட தொகுப்பில் உள்ள இந்த திருத்தத்தின் மூலம் அனுபவமிக்க தொழிலாளிகள் தொழிலாளி என்ற வரையறையில் இருந்து நீக்கப்படுவதன் மூலம் தொழிற்சங்க பாதுகாப்பிலிருந்தும் நீக்கப்படுவார் இதன்மூலமாக இத்தகைய தொழிலாளிகள் மேனேஜ்மென்ட் வகைமைக்குள் கொண்டுவரப்பட்டு வேலைநீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சட்டப் பாதுகாப்பை விலக்குகிறது!
தொழிற்சாலை என்பதற்கான வரையறையிலும் இதைப்போன்ற சிக்கல்கள் உள்ளது.
மின்சாரம் பயன்படுத்தும் இடங்களில் 20 தொழிலாளர்களும் (முன்பு இந்த எண்ணிக்கை 10) மின்சாரம் பயன்படுத்தாத இடங்களில் 40 தொழிலாளர்களும் (முன்பு இந்த எண்ணிக்கை 20) வேலை செய்தால் அது தொழிற்சாலை என்ற வகை மேற்கொள் வரும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பு இந்தியாவில் உள்ள பல்வேறு சிறு குறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களை சட்டப் பாதுகாப்பிலிருந்து நீக்கம் செய்கிறது. பணி பாதுகாப்பு விபத்து உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சனையிலும் தொழிலாளர் சட்டத்தின் கீழ் இவர்கள் அடையாளப்படுத்தப்படாத ஒரு ஆபத்துப் போக்கை இந்த சட்ட தொகுப்பு ஏற்படுத்துகிறது.
ஊதியம் என்பதற்கான வரையறையில் அடிப்படைச் சம்பளமும் பஞ்சப்படியும் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. ஓவர் டைம், வீட்டு வாடகை படி, பயணப்படி, நைட் சிப்ட் அலவன்ஸ் போன்ற இதர ஊதியங்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழிலாளியின் ஊதியத்தை எந்த வகையில் குறைக்கலாம் என திட்டமிடும் முதலாளிகளுக்கு இந்த சட்டம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தொழிலாளி தனது ஊதியத்திற்கான சட்டப் போராட்டம் நிகழ்த்தி வெற்றி பெற்றாலும் கூட ஊதியம் என்ற வகையில் அடிப்படை சம்பளத்தையும் பஞ்சப்படியையும் மட்டுமே தொழில் நிறுவனங்கள் வழங்கும். இது அடிப்படையில் தொழிலாளிக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை மறுக்கும் செயலாகும்.
நிரந்தர பணி உரிமை பறிபோகிறது!
இதே போல பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் புதிய தொழிலாளர் சட்டம் குறித்து பேசுகையில் Fixed term employment குறித்து பெருமை பொங்க பேசுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் இருக்கும் சூழ்ச்சி என்னவென்றால் நிரந்தர பணி என்னும் உரிமையை முழுவதுமாக நிராகரித்து குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்த பணியை இந்த புதிய சட்ட தொகுப்பு அழுத்தமாய் பேசுகிறது. ஒரு தொழிலாளி தனது பயிற்சி காலம் முடிந்தவுடன் பணி நிரந்தர ஆணையையும் நிரந்தரப் பணியாளருக்கான நலத்திட்டங்களையும் ஊதியத்தையும் அளிப்பதற்கான வழிவகைகளை ஏற்கனவே இருந்த தொழிலாளர் சட்டம் உறுதிப்படுத்துகிறது. ஆனால் NEEM, NAPS போன்ற திட்டங்களின் மூலம் இளம் பட்டதாரிகளின் மீது கடுமையான உழைப்பு சுரண்டலை பாஜக அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாகவே தற்காலிக ஒப்பந்த பணியினையும் அதன் அடிப்படையில் நலத்திட்டங்களையும் முன்வைக்கிறது. இதில் இருக்கும் இன்னொரு சிக்கல் என்னவென்றால் ஒரு நிறுவனம் தொழிற்சங்கத்தில் சேரும் ஒப்பந்த பணியாளருக்கு அடுத்த வருடத்தில் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் ரத்து செய்து அந்த தொழிலாளியை வேலை நீக்கம் செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. இதன் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளி காலம் முழுக்க தொழிற்சங்கத்தில் இருந்து விலகி தொழில் நிறுவனத்தின் அடிமையாகவே நீடித்திருப்பதற்கான காரணிகளை இந்த சட்டத் தொகுப்பு வழங்குகிறது.
பெரு முதலாளிகளுக்கு ஆதரவான சட்டம்!
GIG WORKERS எனும் சுயாதீன தொழிலாளர்கள் குறித்து புதிய சட்ட தொகுப்பில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அமேசான், சோமெட்டொ, உபர், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது டெலிவரி பணியாளர்களை தொழிலாளர்கள் என கூறாமல் பங்குதாரர்கள் எனக் கூறுவதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு அழைப்பதன் மூலம் ஒரு தொழிலாளியின் பணி பாதுகாப்பு, ஒப்பந்த ஆவணம், தீர்மானிக்கப்பட்ட வேலை நேரம், மருத்துவ விடுப்பு, விடுப்புடன் கூடிய ஊதியம் என தொழிலாளிக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு அடிப்படை உரிமைகளை மறுக்கிறது. புதிய சட்ட தொகுப்பு இத்தகைய சுயாதீன தொழிலாளர்களை சுயாதீன தொழிலாளர்களாகவே அங்கீகரித்து அவர்களுக்கு ஒப்பந்த ஆவணம், இ.எஸ்.ஐ., பி.எஃப். உள்ளிட்ட சில உரிமைகளை உறுதி செய்கிறது.
பல ஆண்டுகளாக சுயாதீன தொழிலாளர்களின் கோரிக்கையாக இருப்பது இதுவல்ல. தங்களை ஒரு தொழிலாளியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே அவர்களின் அடிப்படை கோரிக்கை. அவ்வாறு அங்கீகரிப்பதன் மூலமே அனைத்து சட்ட பாதுகாப்புகளையும் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் புதிய சட்ட தொகுப்பும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்களை இறுதிவரை சுயாதீன தொழிலாளர்களாகவே நீட்டிப்பதற்கான வழிவகைகளை செய்கிறது. இதன் மூலம் பல லட்சக்கணக்கான தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகளை இந்த சட்டத் தொகுப்பு மறுக்கிறது.
தொழிலாளர் விரோத சட்டம்!
வேலை நிறுத்தம் என்பது ஒரு தொழிலாளியின் ஜனநாயக போராட்ட வடிவம். அவர்களின் அடிப்படை உரிமை.
புதிய சட்டத் தொகுப்பு வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமையையும் மறுக்கிறது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும், முடிந்த பின்னரும் ஏழு நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்யக் கூடாது என்கிறது புதிய சட்ட தொகுப்பு. மேலும் தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தாலும் 60 நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்வதை தடை செய்கிறது புதிய சட்டத் தொகுப்பு.
முன்பு ஒரு ஒப்பந்ததாரர் 20 பணியாளர்களை வைத்திருந்தாலே அரசின் கீழ் உரிமம் பெற வேண்டும். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 தொழிலாளர்களுக்கு கீழ் வைத்திருப்பவர்கள் அரசின் உரிமம் பெற தேவையில்லை. இவர்களின் கீழ் உள்ள தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் எதையும் அவர்கள் சட்டத்தின் மூலம் கேட்டு பெற முடியாத சூழலை இது உருவாக்குகிறது.
அதேபோல ஒரு தொழிற்சாலையில் 100 பணியாளர்கள் வேலை செய்யும் பட்சத்தில் அந்த தொழிற்சாலை அரசின் அனுமதி இன்றி தன்னிச்சையாக மூட முடியாது. இந்த எண்ணிக்கையை புதிய சட்ட தொகுப்பு 300 ஆக மாற்றுகிறது. இந்தியாவில் உள்ள 90 சதவீத தொழிற்சாலைகள் 300க்கும் கீழான தொழிலாளர்களை கொண்டவைகளே. இத்தகைய எண்ணிக்கை மாற்றம் வெளிநாட்டு நிறுவனங்கள் எத்தகைய முன்னறிவிப்புமின்றி தங்களது தொழிற்சாலைகளை மூடிவிட்டு தொழிலாளர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
புதிய சட்டத்தொகுப்பு துறைசார் சட்டங்களையும் நீக்கி உள்ளது இதன் காரணமாக துறைசார் பிரச்சனைகளுக்காக போராடி பெறப்பட்ட சட்டங்கள் பயனற்றதாகி இருக்கிறது.
இது மட்டுமல்லாமல் இன்னும் பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை சட்டரீதியாக செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் புதிய சட்டத் தொகுப்பு வழங்குகிறது. 2019-2020இல் மசோதாக்கள் வந்தாலும் தொழிலாளர்களின் தொடர்ச்சியான எதிர்ப்பின் காரணமாக உடனடியாக அமல்படுத்தாமல் இருந்தது ஒன்றிய அரசு. இந்தியாவின் அதிகபட்சமான உழைப்பு சக்திகளைக் கொண்ட பீகார் மாநிலத்தின் தேர்தல் முடிந்தவுடன் இந்த புதிய சட்டத் தொகுப்பை அமல்படுத்திருக்கிறது பாஜக அரசு. இந்தச் சட்டத் தொகுப்பை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்வது என்பது பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தின் நூற்றாண்டுகால போராட்டத்தை வீணடிப்பதற்கு சமம். ஒன்றுபட்ட விவசாயிகளின் போராட்டம் விவசாய சட்டத்தை திரும்ப பெற செய்தது. அதேபோல புதிய சட்டத் தொகுப்பையும் நம் போராட்டத்தின் மூலம் திரும்ப பெறச் செய்வோம்.
Box content: ஒரு தொழிற்சாலையில் 100 பணியாளர்கள் வேலை செய்யும் பட்சத்தில் அந்த தொழிற்சாலை அரசின் அனுமதி இன்றி தன்னிச்சையாக மூட முடியாது. இந்த எண்ணிக்கையை புதிய சட்டத் தொகுப்பு 300 ஆக மாற்றுகிறது. இந்தியாவில் உள்ள 90 சதவீத தொழிற்சாலைகள் 300க்கும் கீழான தொழிலாளர்களை கொண்டவைகளே.
பெரியார் குறித்த ஜீவாவின் விமர்சனங்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்துவரும் பதில் அடுத்த இதழில் தொடரும்.
பெரியார் முழக்கம் இதழ் 11122025
