கடவுளின் குரலை “மனம்” பேசுகிறதா? கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (11)
கேள்வி: மனம் ஒரு குரங்கு, மனசை அடக்கு என்று ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள். மனமும், சிந்தனையும் ஒன்றா? ‘சிந்தனைசெய் மனமே’ என்று திரைப்படப் பாடல் சொல்கிறதே! மனதும் அறிவும் வெவ்வேறுதானே! அப்படியாயின், மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே?
மனசெல்லாம் மத்தாப்பு, மனநிம்மதி, மனநிறைவு, மனசாட்சி இப்படி ஏராளமான சொற்களை அன்றாடம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். மனம் ஒரு குரங்கு என்று ஆன்மீகவாதிகள் மட்டுமா சொன்னார்கள்? இல்லை. “மனசாட்சி தூங்கும் போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது” என்பது கலைஞர் சினிமா வசனமும் கூட. மார்க்சின் எழுத்துகளில் கூட மனசாட்சி என்ற சொல்லைக் காண முடியும். மனம் என்ற சொல் ஆன்மீகத்துக்கு பட்டாபோட்ட சொல் அல்ல; ஆனால் எது மனம் என்பதை விளக்குவதில்தான் ஆன்மீகவாதிகளும் பகுத்தறிவாளர்களும் மாறுபடுகின்றனர்.
மனம் என்பது தனித்து சுயம்புவாக இயங்குவதாக ஆன்மீகவாதிகள் சித்தரிப்பர். ஆனால் மனம் என்பது மூளை என்ற உறுப்பின் செயல்பாடென அறிவியலாளர் கூறுவர். மகிழ்ச்சி, கோபம் என பல்வேறு உணர்ச்சிகளை மூளையே உணர்கிறது. அப்போது இரத்த ஓட்டமும் இதயத்துடிப்பும் மாறுபடும்; நெஞ்சில் கைவைப்போம்; இதனால் மனம் இதயத்தோடு சம்பந்தப்பட்டதாகக் கருதிவிட்டோம். ஆனால் அது மூளையின் செயல்பாடே மனம் என்பது மூளையின் உணர்ச்சிப் பிரதேச செயல்பாடே அன்பு, பாசம், இரக்கம் போன்ற நல்லுணர்வுகளும் மூளையின் அறிவுச்சேகரங்களே.
`மனோவியல் அல்லது உளவியல் செயல்பாடுகள் உடலிலிருந்து தனித்திருக்கக்கூடிய தனிமனிதச் செயல்பாடுகள் எனக் கருத்து முதல்வாதம் சொல்கிறது. ஆனால் மனோவியல் செயல்பாடுகள் உயர்ந்த மட்ட வளர்ச்சி அடைந்த பருப்பொருளின்; அதாவது மூளையின் செயல்பாடுகள் என்று மார்க்சியம் கூறுகிறது.” என்கிறார்” இயக்கவியல் பொருள் முதல்வாதம் எனும் நூலில் மாரிஸ் கான்போர்த். பா. வீரமணி எழுதியுள்ள “மனமென ஒன்று உண்டா?” என்கிற நூலில் “மனம்” குறித்த ஒரு பரந்த விவாதத்திற்குத் தளம் அமைத்துள்ளது. வாசலைத் திறந்துள்ளது.
மேலும் நம் சிந்தனை சூனியத்தில் பிறக்கவில்லை. நாம் காண்கிற. நாம் அனுபவிக்கிற, நாம் ஊடாடுகிற சமூகத்தின் பிரதிபலிப்பே ஆகும். மனம், சிந்தனை எல்லாமே மூளையின் செயல்பாடுகள். மனம்,சிந்தனை இரண்டும் மூளையின் செயல்பாடாக இருப்பினும் ஒன்றல்ல – வெவ்வேறு தளத்தில் ஆனவை. இந்த சமூகத்தின் பிரதிபலிப்பு.இந்தப் பொருள் பல நூறு பக்கங்கள் கொண்ட நூலாகும் அளவுக்கு விரிந்தது.
மூளைச்சாவு அடைந்துவிட்டால் அப்புறம் எதுவும் இல்லை என்கிற அனுபவ உண்மையை மனதில் நிறுத்துவோம். மனம் பேதலித்தவனை. பைத்தியம் பிடித்தவனாக மூளை பிசகியவனாகவே கருதி சிகிச்சை அளிப்பதையும்; பல்வேறு வேதியியல் மருந்துகள் மூலம் சமநிலைக்கு கொண்டுவருவதையும் பார்க்கிறோம். மனதை ஒருமுகப்படுத்துவது என்பது ஆன்மீகம் சார்ந்ததல்ல. அது பயிற்சியே. தனக்கு விருப்பமான ஒன்றில் முழுக்கவனத்தையும் செலுத்தும்போது மனம் மகிழ்கிறது. எடுத்துக்காட்டு: சங்கீதத்தில் மூழ்குவது. எனக்கு புத்தகம் படிக்கும்போது எதிரில் என்ன நடந்தாலும் தெரியாது. இப்படி யோசித்துப் பாருங்கள் உங்களுக்கே எல்லாம் விளங்கும்.
கேள்வி: நம்மை மீறி ஒரு இயற்கை சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில் அதை நம்புவதில் – வழிபடுவதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?
இயற்கை சக்தி என்று சொல்லி விட்டீர்கள்! இதிலொன்றும் பகுத்தறிவாளர் மாறுபடுவதில்லையே! அதனை இறைவனாகக் கருதி சரணடைவதில்தான், வழிபடுவதில்தான் மாறுபடுகிறோம். ஆதி நாத்திகர்கள் அதாவது லோகாயவாதிகள் அல்லது பூதவாதிகள் கூட உலகம் பஞ்சபூதங்களினால் ஆனது என்பதை ஒப்புக்கொண்டவர்களே.நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்கள் ஐந்தென வகுத்தனர். அன்றைய அறிவியல் புரிதலுக்கு உட்பட்டு அவ்வாறு அவர்கள் முடிவுக்கு வந்ததே மிகப்பெரிய முன்னேற்றமே.
பின்னர் வேதியியல் புரட்சி ஏற்பட்டபோது லாவோசியர், ஜோசப் பிரீஸ்ட்லி முதலியோர் நெருப்பு என்பது வெறும் வினை; அடிப்படைப் பொருளல்ல என நிறுவினர். காற்று என்பது ஆக்ஸிஜன், நைட்ரஜன்,கார்பன் என வாயுக்களின் கலவை எனக் கண்டனர். நீரென்பது (H2O) என கண்டு தெளிந்தனர். அதாவது ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்சிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால் நீர். இரத்தம், சதை, சிமெண்ட், சுல், மண் என எல்லாமே மூலக்கூறுகளின் கலவைதான் என அறிவியல் கண்டது.
இந்த மூலக்கூறுகள் அடிப்படையில் அணுக்களால் ஆனவை. தங்கம், இரும்பு, சோடியம், யுரேனியம் முதலிய 119 வகை அணுக்கள், தனிமங்கள் உள்ளன. இதில் 96 வகை தனிமங்கள் பூமியில் இயற்கையில் கிடைக்கும். அணுவே கடைசி கண்ணி அதைப் பிளக்க முடியாதென்பது டால்டன் கொள்கை. அடுத்த கட்டத்தில் ரூதர் போர்டு, ஜே.ஜே. தாமஸ் முதலானோர் அணுவைப் பிளந்து ஆராய்ந்து எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் மற்றும் நியூட்ரினோ, மியூவான், மியூமிசான் என்கிற அணுத்துகள்களே அடிப்படை அலகு என்பதைக் கண்டு கூறினார்கள். அந்த எலக்ட்ரான்தான் இன்றைய கணினிப் புரட்சியின் அடித்தளம். அதனையும் உடைத்து குவார்க்குகள், க்ளுவான்ஸ்கள் என ஆய்வு முன்னேறுகிறது.
நியூட்ரினோதான் உலகெங்கும் நிறைந்துள்ள துகளெனக் கண்டு அதனை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். தமிழகத்தில் தேனியில் அமையும் நியூட்ரினோ நோக்குகூடம் அத்தகையதே ஆக இயற்கையை வழிபட்டு சரணடைந்திருந்தால் இவ்வளவு கண்டுபிடிப்புகளை செய்திருக்க இயலுமா?பகுத்தறிவு மேலும் விசாலமாக, மேலும் கூர்மையாக முன்னேறுகிறது. கணினிமுன் உட்கார்ந்துகொண்டு மதவெறிப் பிரச்சாரம் செய்பவரும் இந்த அறிவியலின் பலன் மீது நின்று கொண்டன்றோ செயல்படுகிறார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும்! எல்லாம் வல்ல ஒரே இயற்கை சக்தியே இறைவனெனில் இத்தனை மதங்கள் ஏன்? இத்தனை கடவுள்கள் ஏன்? இவ்வளவு மதவெறிச் சண்டைகள் ஏன்? இத்தனை மனித உயிர்களை காவு கொடுப்பது ஏன்? நீங்கள் சொல்லுகிற அந்த ஒற்றைக் கடவுள் எந்த மதம்? சொல்லுங்கள்!!
கேள்வி: உலகில் யாருமே நாத்திகரில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வழியில் கடவுளை நம்புகிறார்கள்” என்பது சரியா? ஆத்திகர் கடவுளை நம்புகிறார். ஆனால் கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது நாத்திகரல்லவா? இல்லாத ஒன்றெனில் பேசிக்கொண்டே இருக்கவேண்டுமா?
“கடவுள் கவலை எனக்கில்லை” என்பார் பாரதிதாசன்.
“கடவுள் இருக்கு என்பதும் இல்லை என்பதும் கவைக்குதவாத வெறும் பேச்சு / கஞ்சிக்கில்லாதவன் கதை நூறிருக்கு அதை நீ பேசு”
என்பார் பட்டுக்கோட்டையும். நாமும் அதையே விழைகிறோம். ஆயினும், ஆத்திகர் கேள்வி எம்மை அது பற்றி பேச வைக்கிறது.
கேள்வியில் முன்வைக்கும் வாதம் புதிதல்ல. பண்டைய இந்தியாவில் உதயணர் எனும் ஒரு தத்துவவாதி இருந்தார். அவர் கடவுள் உண்டென நிரூபிக்க முயலும் “நியாயம்” என்ற தத்துவப் பிரிவைச் சார்ந்தவர். அவருடைய “நியாயகுஸிமாஞ்சலி” என்ற நூலைத்தான் ஆத்திகர்கள் `கடவுளை’ நிரூபிக்கத் துணையாகக் கொள்கிறார்கள். அவரும் இந்த கேள்வியில் கேட்கப்பட்டதை அதே வார்த்தைகளில் தன் வாதமாக முன்வைத்தார். அதற்கு ஆதாரமாக லோகாயவாதிகள் சிலரின் வார்த்தைகளைத் திருத்தி தன் வாதத்துக்குப் பயன்படுத்த முயன்றார்.டாக்டர் ராதாகிருஷ்ணன் கூட கம்யூனிசமும் ஒரு மதமே என வாதம் செய்தார். இது பட்டிமன்ற வாதம் போல் இருக்கிறது.
கடவுளை நம்பாதவர்களை மட்டிலுமே நாத்திகரென பகுத்தறிவாளர் வரையறை செய்கின்றனர்; அதுவே சரியானது. ஆனால் இஸ்லாம் மதம் அல்லாவை ஏற்காத பிறமதத்தவர் உட்பட எல்லோரையும் நாத்திகரென்று கூறும்; சனாதன பிராமண மதம் வேதத்தை ஏற்க மறுத்தாலே நாத்திகரென வசைபாடும். கிருத்துவமும் பிறமதத்தவரை நாத்திகரென்றே கணிக்கும்.
இப்படி இவர்களின் வெறுப்பு அளவுகோலால் பிறமத நம்பிக்கையாளரை நாத்திகரென்பதால் மேலே கேள்வியில் ஏற்பட்ட குழப்பம் ஏற்படுகிறது. எந்த மதத்தையும், எந்தக் கடவுளையும் ஏற்காதவரே நாத்திகர். இதனை உணர்ந்தால் குழப்பமே இல்லை. எந்தவழியில் கடவுளை நம்பிடினும் அவர் நாத்திகரில்லை.
ஆத்திகரென்பவர் கடவுள் பெயரால் பல சடங்குகள் சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கைகள் என மூழ்கிக் கிடக்கின்றனர்;அதை மறைக்கவே நாத்திகர் கடவுள் பற்றி அதிகம் பேசுவதாகக் பழி போட்டுத்தப்பிக்க முயல்கின்றனர்; புற்றுநோயில் விழுந்துகிடப்பவனைவிட; புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை விதைக்கிறவர்தான் அதிகம் பேசவேண்டும்.பேசமுடியும். இது விழிப்புணர்வுக்கான பேச்சு. இதனையெல்லாம் தெரிந்துகொண்டே திசைதிருப்பும் விதமாக சாமர்த்தியமாக ஆத்திகவாதிகள் இப்படி சொற்போராட்டம் நடத்துவது நெடுங்காலமாக நடந்து வருகிறது. இதனை தத்துவ வாதத்தில் ‘சாமான்ய சளா’ அல்லது ‘சாமான்ய சாலம்’ என்பர். புரிகிறமாதிரி சொல்வதானால் “அறிவியல் அயோக்கியத்தனம்” என்கிறார் ஆய்வாளர் நா. வானமாமலை.
கடவுள் என்பது இல்லாததே; அதை இருக்குதென மற்றவர் பேசும்வரை மறுத்துப் பேசுவது இயல்பானதே. தேவையானதே! தொலைக்காட்சியில் ஒரு ஆன்மீகப் பேச்சாளர் மின்சாரத்தை கண்ணால் பார்க்கமுடிவதில்லை என்பதால் மின்சாரம் இல்லை என்று சொல்லமுடியுமா? அது போலத்தான் கடவுளும் என்றார்.
மின்சாரம் இருப்பதை விளக்கு எரிவதைக் கொண்டு அறியலாம்; தொட்டுப் பார்த்தால் ஷாக் அடிக்கும். மின்சாரத்தை உண்டாக்க முடியும் எங்கே எப்படி உண்டாக்கப்பட்டது என்கிற விவரம் உண்டு. கடவுளை உண்டாக்கிக் காட்டுங்கள் என சவால் விடலாமே! இப்படி இடக்கு மடக்கு வாதம் பயனில்லை. நாத்திகரைப் பொறுத்தவரை கடவுள் இல்லை. ஏனெனில் அறிவியல் பூர்வமாக இதுவரை கடவுள் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை. அவ்வளவே!
ஆதாரம்: சு.பொ. அகத்தியலிங்கம் எழுதிய “ஆன்மிகமா? அறிவியலா?” நூல்
Box content
மனதின் குரல் என்று மோடி பேசுகிறார், கடவுளின் குரலே என்னை வழிநடத்துகிறது என்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மனிதர்களின் புலனறிவு உறுப்புகளுக்கு அப்பாற்பட்ட சக்தி தான் மனிதர்களை இயக்கிக் கொண்டு இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் மக்களின் கடவுள் பக்தியே கட்டமைக்கப்படுகிறது. அப்படி ‘மனம்’ என்று ஒன்று உண்டா? அறிவியல்
அதை இல்லை என்று மறுக்கிறது.
பெரியார்முழக்கம்இதழ்21082025
