தோழர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சியுரை! ஈரோட்டுப் பாதையில் நடைபோடுவோம்!

ஈரோட்டுப் பாதை தான் நமக்கு வழி காட்டுகிறது; பெரியார் இயக்கம் தான் எனது தாய் வீடு என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். சென்னையில் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி தலைவர் மறைந்த தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு நிறைவு மலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று துணை முதலமைச்சர் நிகழ்த்திய உரையிலிருந்து சில பகுதிகள்…

பெரியாரின் தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. பெரியாரின் தொண்டர்களை, துறவிகளைவிட மேலானவர்கள் என்று பெருமையாக சொல்வார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் அய்யா ஆனைமுத்து அவர்கள். பெரியார் தொண்டர்களின் தன்னலம் இல்லாத உழைப்புதான், தமிழ்நாட்டை சுயமரியாதை மண்ணாக மாற்றி வைத்துள்ளது.

எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விட, மிகமிக முக்கியமான நிகழ்ச்சியாக நான் கருதுவது, இன்றைக்கு இந்த அரங்கில் நடந்துகொண்டு இருக்கின்ற அறிஞர் ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழா. இன்னும் சொல்லப்போனால், எனது தாய் வீட்டிற்கு நான் வருகை தந்துள்ளேன்.

பெரியார் தொண்டர்கள் நிறைந்து இருக்கிற இந்த அரங்கத்தில் இன்னும் நான் அழுத்தம், திருத்தமாக சொல்ல விரும்புகிறேன். மாநில உரிமைக்காக தமிழ்நாடு போராடும், சமூகநீதியைக் காக்க தமிழ்நாடு என்றும் போராடும், மத வெறி, ஜாதி வெறியை எதிர்த்து தமிழ்நாடு நிச்சயம் போராடும், இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு தொடர்ந்து போராடும், ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசை எதிர்த்து தமிழ்நாடு என்றைக்கும் போராடும்.

எல்லோருக்கும் எல்லா காலத்துக்கும் பெரியாரியம் பொருத்தமாக இருப்பதால்தான் இன்றைக்கும் தந்தை பெரியாரின் கருத்துகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வரை சென்றடைந்துள்ளன. நம் தலைவர் முதலமைச்சர் அவர்கள், சமீபத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்துள்ளார். ஏனென்றால், தந்தை பெரியாரின் சிந்தனைகள் எல்லாம் மனிதநேய, மனித உரிமைகளுக்கான சிந்தனைகள்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிராகப் போராடுகின்ற மக்கள் அனைவரும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் படங்களை கையில் ஏந்தி முழக்கமிடுவதை, நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். தந்தை பெரியார் அவர்கள் அரசியல் ரீதியாக தமிழ்நாட்டைப் பக்குவப்படுத்தி வைத்துள்ளார். அதனால்தான் பா.ஜ.க.வின் எந்த தில்லு முல்லு வேலையும் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடவில்லை.

அய்யா ஆனைமுத்து எழுதிய கட்டுரை ஒன்றில், பெரியார் வென்றாரா? என்ற கேள்வியை அவரே கேட்டுவிட்டு, அதற்கு அவரே பதிலளித்துள்ளார். பெரியார் தோற்றார் என்று சொன்னோம் என்றால், அது ஒட்டுமொத்த தமிழர்களின் தோல்வி என்று அர்த்தம் என்று ஆனைமுத்து அவர்கள் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். எனவே, தந்தை பெரியார் அவர்கள் எப்பொழுதும் வெல்வார். பெரியாருக்குத் தோல்வியே கிடையாது. தமிழ்நாடு அதேபோல் எப்போதும் வெல்லும், தமிழர்கள் எப்போதும் வெல்வார்கள் அதை யாராலும் தடுக்க முடியாது.

ஈரோட்டுப் பாதையில் நடைபோடுவதால்தான் இன்றைக்கு திட்டங்களிலும், கொள்கைகளிலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டியாக இருந்து வருகிறார். தனித்தனியாக செயல்பட்டாலும் பெரியாரின் இயக்கத் தோழர்கள் பல நாட்களுக்குப் பிறகு இன்றைக்கு ஒரே மேடையில் ஒற்றுமையாக உட்கார்ந்து இருக்கிறீர்கள். அதைப் பார்க்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதே ஒற்றுமையுடன் தந்தை பெரியாரின் கருத்துகளை நாம் இன்னும் அதிகம் பரப்ப வேண்டும். இது போன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்த வேண்டும்.அப்படி நிகழ்ச்சி நடத்தினீர்கள் என்றால் நிச்சயம், எப்போதெல்லாம் என்னிடம் தேதி கேட்கிறீர்களோ அப்போதெல்லாம் நான் எந்தத் தயக்கமும் இல்லாமல், உங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். எப்போதும் இல்லாத அளவுக்கு, இது மாதிரியான நிகழ்ச்சிகள் நமக்கு இப்போது தேவைப்படுகிறது.

கொள்கையற்ற இளைஞர் கூட்டம் இப்போது உருவாகி வருகிறார்கள். அவர்களை கொள்கைமயப்படுத்த வேண்டிய பொறுப்பு எல்லோரையும் விட நமக்கு அதிகமாக இருக்கிறது. ஆகவே, நாம் அனைவரும் சேர்ந்து அய்யா ஆனைமுத்து காட்டிய வழியில் பெரியாரியத்தை இன்னும் அதிகமாக பரப்புவோம். அதற்கு நானும், இளைஞர் அணியும், நம் தலைவர் அவர்களும் நிச்சயம் உங்களுடன் துணை நிற்போம் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிகழ்ச்சி

அறிஞர் வே. ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா மலர் வெளியீடு அக்-10 அன்று காலை 10 மணிக்கு, சென்னை அடையாறு முத்தமிழ் பேரவையில், மா.பெ.பொ.க துணைப் பொதுச் செயலாளர் வாலாசா வல்லவன் தலைமையில் நடைபெற்றது. மா.பெ.பொ.க தலைமைக்குழு உறுப்பினர் சா. குப்பன் வரவேற்புரையாற்றினார்.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, உயர்நிலைக் குழு உறுப்பினர் மு. நாகநாதன், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் திஇதபே தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தபெதிக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், புலவர் செந்தலை ந. கவுதமன் (சூலூர் பாவேந்தர் பேரவை), மாபெபொக பொதுச் செயலாளர் துரை. சித்தார்த்தன், மாபெபொக தலைமைக் குழு உறுப்பினர் க. முகிலன் ஆகியோர் உரையாற்றினர். மாபெபொக காஞ்சி மாவட்டச் செயலாளர் சி. நடராசன் நன்றியுரையாற்றினார்.

நிகழ்வில் திவிக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.‌உமாபதி, தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், காஞ்சி மாவட்டத் தலைவர் கா.ரவிபாரதி, வேலூர் மாவட்டச் செயலாளர் இரா.ப. சிவா, திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், பாரிசிவா ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 16102025

You may also like...