தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்!-ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி
‘ஈரோட்டுப் பாதை சரியா?’ நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களுக்கான பதிலின் தொடர்ச்சி.
தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியாக 22.11.1925 குடிஅரசு இதழில் ‘தமிழ் தினசரி பத்திரிக்கை’ என்ற ஒரு தலையங்கத்தை பெரியார் எழுதியுள்ளார். அதில், ‘தென்னிந்தியாவுக்கு, தென் இந்தியர்களுக்கு, ஒரு நம்பிக்கையும் யோக்கியமும் உள்ள தமிழ் தினசரி பத்திரிக்கை வேண்டுமா? வேண்டாமா? என்று யோசிக்க வேண்டும். குறைந்தது ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். ஒரு வருடத்தில் பத்தாயிரம் சந்தாக்கள் சேர வேண்டும். 50,000 இல்லாமல் ஆரம்பிப்பது நிலை பெற தக்கதாகாது. அதற்கு பங்கு ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் 20 ஆயிரம் பங்கு கொண்ட ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். 50 ஆயிரம் ரூபாய் வசூலித்த பிறகுதான் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் ஜில்லாக்களாகிய 12 ஜில்லாக்களுக்கும் ஜில்லா ஒன்றுக்கு 5000 ரூபாய் முன்பணம் வசூலிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டு, “பத்திரிகையின் கொள்கை பிராமணரல்லாதாருடையவும் தீண்டாதாருடையவும் சமத்துவமும் முன்னேற்றமுமே முக்கியமாய் இருக்க வேண்டும் என்றும், ஆகையால் இதைப் பற்றி தமிழ் மக்கள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டாகலாம் என்று விண்ணப்பித்துக் கொள்கிறோம்” என்று தமிழர்களுக்கு ஒரு தமிழ் பத்திரிக்கை தேவை என்பதை முதன்மை இலக்காகக் கொண்ட ஒரு தலையங்கத்தை எழுதியுள்ளார்.
தமிழர் மாநாடு
08.11.1925 நாளிட்ட குடிஅரசு இதழில் ‘தமிழர் மாநாடு’ என்ற தலைப்பில் பெரியார் ஒரு தலையங்கத்தை எழுதியுள்ளார். அதில் சில செய்திகளை முன் வைக்கிறார். “சுயராஜ்யம் என்பது சுயமரியாதையும் சுயேச்சையும் உள்ள சமூகத்துக்குதான் பயன்படுமே அல்லாது, அது இல்லாதவர்க்கு சுயராஜ்யம் என்பதும் பர ராஜியம் என்பதும் வித்தியாசம் அற்றதே ஆகும். இந்தியாவுக்கு பிரிட்டிசார் செய்த கெடுதியை விட பிராமணர் செய்த கெடுதி குறைவானதல்லவென்று மகாத்மாவே சொல்லி இருக்கிறார். காஞ்சிபுரம் மகாநாட்டில் கூடும் பொதுஜன பிரதிநிதிகள் சுயராஜ்ஜியத்திற்கு என்றோ தேச முன்னேற்றத்திற்கென்றோ கருதி ஏமாந்து போய் மறுபடியும் இக்கூட்டத்தாரின் சூழ்ச்சிக்கு ஆளாகி அவர்கள் சொல்வதை சொல்லுகிறபடி நடந்து நமது நன்மைக்கென்று நினைத்து அவர்கள் நம்பிக்கைக்கு விட்டு கொடுத்துவிட்டு போகாமல் இருக்கும்படி நாம் எச்சரிக்கை செய்கிறோம்
ஒவ்வொருவருக்கும் ராஜிய விஷயத்திலோ மத விஷயத்திலோ தனது வாழ்வு விஷயத்திலோ ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதம் உடையவர்களாக இருந்தபோதிலும், தாங்கள் எல்லோரும் பிராமணர் அல்லாதார் என்பதையும், பிராமணர்களின் சூழ்ச்சிகள் என்றும் தந்திரங்கள் என்றும் விலகி தாங்கள் சுயமரியாதையுடன் மனிதனாக வாழ வேண்டும் என்கின்ற ஒரே பொதுவான நோக்கத்தை வைத்து பாடுபடுவதற்கு ஒரு பொது இயக்கத்தை காண வேண்டியது தற்சமயம் மிகவும் அவசியமானது என்பதை பெரும்பாலோர் ஒப்புக் கொள்வார்கள். உத்தியோக விஷயங்களில் ஆகட்டும் மற்றும் தெரிந்தெடுப்பு பதவிகள் ஆகட்டும் அல்லது இதர பொது ஸ்தாபனங்களில் ஆகட்டும் அவரவர் இன்னின்ன அளவுக்கு உரியவர்கள் என்று தீர்மானம் ஏற்பட்டு போய்விட வேண்டியது அவசியம்.
பிராமணர் அல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை விட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் கோபுரத்தின் மீது இருந்தும் சொல்லுவோம். ஏனெனில் அவர்கள் சமூகப் பெருக்கத்திற்கு தக்கபடி கல்வியிலோ உத்தியோகத்திலோ மற்றும் பல பொது வாழ்க்கையிலோ அவர்கள் முன்னேறவே இல்லை. இதன் காரணத்தினால் தேசத்தில் ஐந்தில் ஒரு பாகம் ஜனங்கள் தேச நலத்தை மறந்து சர்க்கார் தயவு நாடி இருக்க வேண்டியதாக உள்ளது.
சுமார் 25 வருடங்களுக்கு முன்பாகவாவது இச்சமூகங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு இருக்குமேயானால் இன்றைய தினம் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும் ஒற்றுமை இன்மையும், பிரிட்டிஷார் கொடுங்கோன்மையும், பிராமணக் கொடுமையும் நமது நாட்டில் இருக்குமா? தெருவில் நடக்க கூடாத மனிதனும், கண்ணில் தென்பட கூடாத மனிதனும், அவனவன் மதத்தை அறிய கூடாத மனிதனும், அவனவன் தெய்வத்தை காணக்கூடாத மனிதனும் இந்தியாவில் இருக்கக் கூடுமா? என்பதை பொதுநோக்குடைய ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டுவதோடு ராஜீய மாநாட்டில் இதை வலியுறுத்தி அமலுக்கு கொண்டு வரும்படி செய்ய வேண்டியது தேசபக்தர்களின் கடமை என்பதை வணக்கத்துடன் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்கிறார்.
தமிழர் இயக்கம்
மீண்டும் 15.11.1925 நாள் இட்ட குடிஅரசு இதழில் ‘காஞ்சிபுரம் தமிழர் மாநாடுகள்’ என்ற தலைப்பில் ஒரு வேண்டுகோள் என தன்னுடைய கையொப்பத்தோடு பெரியார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
“பிராமணரல்லாதார் முன்னேற்றத்தில் கரிசனம் உள்ள தமிழ்நாட்டு பிராமணரல்லாத அனைவரும் வந்திருந்து தங்களது முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தைக் காணவும் அதை சரிவர அமுலுக்குக் கொண்டு வரவும் ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இது விஷயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ராஜீய அபிப்பிராய பேதம் காரணமாகவாவது சொந்த அசவுரியம் காரணமாகவாவது அலட்சியமாய் இருந்துவிடாமல் கண்டிப்பாக வர வேண்டுமாய் மறுபடியும் வினயத்துடன் கேட்டுக்கொள்கிறேன். தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதவருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில் தீண்டாதர்களின் முன்னேற்றம்தான் பிராமணரல்லாதாரின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பம் தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும்.
தீண்டாமை ஒழிவதன் மூலமாகத்தான் பிராமணரல்லாதார் கடைத்தேற முடியும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்தான் நாடு சுயராஜ்யமடையும். ஆதலால் தீண்டாமை விலக்கில் கவலை உள்ளவர்களும் தீண்டாதார் என்று சொல்லப்படுபவரும் அவசியம் காஞ்சிபுரத்திற்கு வந்து அதற்கென்று ஓர் மாநாடு கூட்டி காரியத்தில் பலன் தரத்தக்கத் திட்டங்களைக் காணவேண்டுமாயும் கேட்டுக்கொள்கிறேன்” என்பதே அவ்வேண்டுகோள்
இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டுவதற்குக் காரணம், தமிழர் கூட்டம், தமிழர் இயக்கமாகி அது பின்னர் காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாநாட்டின் போது கூட பார்ப்பனரல்லாதார் சந்திக்கிற மாநாட்டை ‘தமிழர் மாநாடு’ என்ற பெயராலும் ‘தமிழ்ப் பத்திரிக்கை’ வேண்டும் என்றும் பெரியார் குறிப்பிட்டு ‘தமிழர் இயக்கம்’ என்பதைத் தொடர்ச்சியாக எடுத்துச் சென்றிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டுவதற்கு மட்டுமே ஆகும்.
அதுபோலவே 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இந்தியின் ஆபத்தை விளக்கி பரப்புரை செய்ய சுயமரியாதை இயக்கத்தவர்களைக் கொண்டு நடத்திய இந்தி எதிர்ப்பு பரப்புரை படைக்குக் கூட ‘தமிழர் படை’ என்று தான் பெயர் சூட்டப்பட்டது. அப்படையினர் ஏந்தி சென்ற கொடி ‘தமிழ்க்கொடி’யே ஆகும். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது முன்னெடுத்த இயக்கம் ‘தமிழர் இயக்கம்’ என்பதாகத்தான் அப்போதும் பெயர் சூட்டப்பட்டிருந்தது என்பதையும் இவ்வேளையில் சுட்டிக்காட்ட வேண்டும். தொடரும்…
பெரியார் முழக்கம் இதழ் 04122025
