அச்சுத்துறையில் அதிர்வலைகளை உருவாக்கிய “சீர்”
ஈரோட்டில் செப்-7-ல் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு சீர் வாசகர் வட்டம் விருது வழங்கும் விழாவில் பேரா. வீ.அரசு உரையிலிருந்து…
யாருக்கு பரிசு கொடுக்க வேண்டுமோ அந்த சரியான நபருக்கு பரிசு கொடுப்பதுதான் இந்த சீர் வாசகர் வட்டத்தின் நோக்கமாக அவர்கள் வரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தான் தமிழறிஞர் பொதியவெற்பனுக்கும் அதைப்போல நம் தோழர் கொளத்தூர் மணிக்கும் அவர்கள் பரிசளித்திருக்கிறார்கள்.
இந்த சீர்வாசகர் வட்டத்தை பற்றி ஒரு குறுகிய காணொளியும் ஒளிபரப்பட்டது. கவிஞர் தம்பி அவர்கள் பேசுகிற பொழுது சில தகவல்களையும் சொன்னார். சில முக்கியமான தகவல்களை அவர் பகிர்ந்து கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று எனக்கு ஒரு சங்கடம் இருந்தது. அவர் சொன்னார், நீங்கள் அதை சொல்லிவிடுங்கள் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். இந்த சீர்வாசகர் வட்டம் என்கிற அமைப்பு தனக்கான அறவியலை உறுதிப்படுத்திக் கொண்டு செயல்படும் ஒரு இளைஞர் பாசறை. பெருமைப்படக்கூடிய பல்வேறு பணிகளை அவர்கள் செய்துள்ளார்கள்.
“பெண் ஏன் அடிமையனாள்?” என்ற நூல் பெரியார் எழுதியது. மிகக் குறைந்த விலைக்கு ஏறக்குறைய 5 இலட்சம் பிரதிகளை தமிழ்நாட்டில் கொண்டு சேர்த்துள்ளனர். இது சாதாரண செயல் அல்ல! பெரியாருடைய “பெண் ஏன் அடிமையனாள்?” சிறிய நூல் அது, ஒரு மிகப்பெரிய ஆவணம். 1930களில் பெரியார் பெண்ணடிமை பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களை மிகத் தெளிவாக எழுதி இருக்கக்கூடிய ஒரு மிக அரிய நூல் அதை தமிழ்ச் சமூகத்தில் 5லட்சம் பேரிடம் கொண்டு சேர்த்தது சீர்வாசகர் வட்டம்.
தமிழின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளின் நூல்களை மிகக்குறைந்த விலையில் எப்படி விற்பனை செய்யலாம் என்று திட்டமிட்டார்கள். புதுமைப் பித்தன் கதைகளை அதனுடைய உற்பத்தி செலவு என்பது 200 ரூபாயாக இருந்தாலும் அதை 100 ரூபாய்க்கு ஏறக்குறைய 27ஆயிரம் பிரதிகளை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்கள். புதுமைப்பித்தன் என்ற ஒரு சீரியப் படைப்பாளியை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றதில் இந்த சீர்வாசகர் வட்டத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. புதுமைப்பித்தன் ஒரு மிக நல்ல எழுத்தாளர் என்பதனால் பல வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு அந்த பிரதிகளை வாங்கினார்கள். அது நாட்டுடமையாக்கப்பட்டதனால் 500 ரூபாய் 600 ரூபாய் என்று மிகப்பெரிய வணிகம் நடந்த சூழலில் அதை 100 ரூபாய்க்கு தந்துள்ளது. அதுவும் மிக உயர்ந்த தரத்தில் வெளியிட்டார்கள். இது சாதாரண செய்தி அல்ல!
அதைப் போலவே தோழர் தம்பி பேசும்போது “கயிறு” என்ற நூல் பற்றி கூறினார். பள்ளிக்கூடங்களிலே குறிப்பாக பழைய தென்னார்காடு மாவட்டங்கள் என்று சொல்லுகிற பகுதிகள் மதுரை பகுதிகள் அதைப்போல கீழத்தஞ்சை சேர்ந்த பகுதிகளில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வண்ணத்தில் கைகளில் கயிறு கட்டி பள்ளிக்கூடத்துக்கு வருகிறார்கள். சட்டையும் அந்த கலரில் போடுகிறார்கள். சைக்கிளுக்கும் அந்த கலரில் பெயிண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். இப்படியெல்லாம் ஒரு கேவலமான மனநிலைமையை மாணவர்கள் மத்தியில் உருவாக்கிய பொழுது நண்பர் விஷ்ணுபுரம் சரவணன் ஒரு மிக அருமையான கதையை “கயிறு” என்று எழுதினார் இந்தக் கொடுமைக்கு எதிராக இளம் உள்ளங்களிடம் ஒரு மாற்று சிந்தனை மரபை கொண்டு வரக்கூடிய அந்த கதையை ‘சீர்’ ஒரு ரூபாய் விலை வைத்து பல லட்சம் பிரதிகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது. தொலைக்காட்சிகளில் அது செய்தியானது.
இப்படி கந்தர்வன், பா சிங்காரம், டால்ஸ்டாய் எனப் பல எழுத்தாளர்களுடைய நூல்களை மிக குறைந்த விலையில் வெளியிட்டு அச்சு உலகத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்துகிற இயக்கமாக இந்த சீர்வாசகர் வட்டம் இருக்கிறது.
பெரியார் முழக்கம் இதழ் 02102025
