ஊர்-சேரி பாகுபாட்டை ஒழித்த ‘ஆனைமலை’
வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். `நரசிம்மன் நகர்’ வரலாறு இது.
1938-ஆம் ஆண்டில் முதல் இந்தி எதிர்ப்புப் போரில்’ பங்கேற்று தந்தை பெரியார் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்ட போது, அவருடன் சிறையில் இருந்தவர்களில் ஒருவர் `ஆனைமலை’ நரசிம்மன். பட்டம் படித்தவர் என்பதால், சிறையில் முதல் வகுப்பை அதிகாரிகள் வழங்க, தன் தோழர்கள் எல்லோரும் சாதாரண வகுப்பில் இருக்க, தனக்கு மட்டும் முதல் வகுப்பு வேண்டாம் என்று மறுத்துவிட்டார் நரசிம்மன்.
ஆனால், ஆனைமலையில் வசதி படைத்த, செல்வாக்கான குடும்பம் இவருடையது. ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் என அந்த காலத்தில் இவர் வீட்டில் பல தலைவர்கள் தங்கிச் சென்றுள்ளனர். 1906-ஆம் ஆண்டு நாராயண நாயக்கர்-குஞ்சம்மாள் தம்பதிக்கு கடைசி மகனாகப் பிறந்தவர் நரசிம்மன். சென்னை அடையாற்றில் பள்ளிப்படிப்பும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும் முடித்தவர். அண்ணன் சங்கர நாராயணன் சந்நியாசி ஆகிவிட்டதால், அச்சத்தில் நரசிம்மனுக்கு அவசர அவசரமாக திருமணம் முடித்து, ஆனைமலையிலேயே தங்கவைத்துவிட்டனர்.
அது, சுதந்திரப் போராட்டக் காலம் என்பதால், காந்தியடிகளை பின்பற்றி தேச விடுதலைப் பணிகளில் ஈடுபட்ட அவருக்கு, பின்னாளில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் மீது பற்று திரும்பியது. திருமணம் செய்தால் ஆனைமலையிலேயே இருந்துவிடுவார் என்ற பெற்றோரின் கணிப்பைப் பொய்யாக்கி, தந்தை பெரியாருடன் சேர்ந்து தமிழ்நாடெங்கும், பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டார்.
1946-இல் மதுரையில் `கருஞ்சட்டைப்படை’ மாநாட்டுப் பந்தலுக்கு எதிரிகள் சிலர் தீ வைத்தபோது, தலைவர்களையும் தொண்டர்களை யும் ஓடி ஓடி பாதுகாத்தவர் நரசிம்மன். பெரியார் 1944-இல் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டபோதும், 1950-இல் பம்பாய் சென்றபோதும், 1954-இல் பர்மாவின் ரங்கூனில் நடைபெற்ற பௌத்த மாநாட்டுக்குச் சென்றபோதும் உடன் சென்றவர்களில் நரசிம்மனும் ஒருவர். 1945-இல் பெரியாரால் நிறுவப்பட்ட கருஞ்சட்டைப் படையின் தொண்டர் படைத்தளபதியாகச் செயல்பட்டார்.
`பிரமணாள் கஃபே பெயர் அழிப்புப் போராட்டம்’, `சென்னை கபாலீஸ்வரர் கோயில் தமிழ் அர்ச்சனைப் போராட்டம்’, `குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம்’, `இந்தி எதிர்ப்புப் போராட்டம்’, `ராமன் படம் எரிப்புப் போராட்டம்’, `பிள்ளையார் உருவ பொம்மை உடைப்புப் போராட்டம்’, `அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்’ என பெரியார் முன்னெடுத்த முக்கிய போராட்டங்கள் அனைத்திலும் தவறாமல் பங்கெடுத்தவர்.
பெரியாருடன் வெளியூர்களுக்குப் பயணப்பட்ட அதேவேளையில், உள்ளூரிலும் ஏ.எம்.திருமூர்த்தி, ஏ.எம்.திருவேங்கடம், நஞ்சப்பன், கே.காளிமுத்து, காதர் மைதீன், முகமது அனிபா, ஆறுமுகம் என திராவிடர் கழகத் தோழர்கள் பலருடன் இணைந்து சுற்றுப்புற கிராமங்களில் பெரியாரின் கொள்கைகளை, `துண்டறிக்கைகள்’, `தெரு முனைக் கூட்டங்கள்’ வாயிலாகப் பரப்பி வந்தார். 1960-களுக்கு முன்பே ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் இரட்டைக்குவளை முறையை இல்லாமல் செய்தது இந்தப் படை.
அதுமட்டுமல்ல, 1949-ஆம் ஆண்டில் அன்னை மணியம்மையாரை பெரியார் பதிவுத் திருமணம் செய்தபோது, ஆனைமலைக்குச் சென்று, நரசிம்மன் வீட்டில்தான் 15 நாட்கள் தங்கியிருந்தார். பெரியாருடன் நரசிம்மன் கொண்டிருந்த நெருக்கத்தின் அடையாளத்திற்கு, இவற்றையெல்லாம் விட முக்கியச் சான்றாக இருப்பது, பெரியார் கூறிய ஆலோசனையை ஏற்று உள்ளூரில் சில புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டதுதான். குறிப்பாக, பெரியாரின் பெருங்கனவான ஊர்- சேரி பாகுபாட்டை ஒழிக்கத் துணிந்தவர் நரசிம்மன். `சமத்துவபுரம்’ என்ற புரட்சிகரமான திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் வழங்குவதற்கு முன்பே, மாதிரி சமத்துவபுரத்தைக் கட்டியெழுப்பினார் நரசிம்மன். அது அவரின் பெயராலேயே `நரசிம்மன் நகர்’ என்றாகி, இன்றும் நிலைபெற்று இருக்கிறது.
– தொடர்ச்சி அடுத்த இதழில் வெளிவரும்
