அல்பேனியா அரசின் அதிரடி முடிவு செயற்கை நுண்ணறிவுக்கு ஊழல் ஒழிப்பு அமைச்சர் பதவி!
உலகில் முதன் முதலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.அய்) அமைச்சர் பதவியை ஏற்று இருக்கிறது. அந்த அமைச்சரின் பெயர் ‘டியெல்லா’. அல்பேனியா நாட்டின் பிரதமர் ஏ.டி ராமா கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தனது அமைச்சரவையில் இணைத்துள்ளார். ‘டியெல்லா’வுக்கு ஊழல் ஒழிப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அல்பேனியா இணையதளத்தின் உதவியாளராக கடந்த ஜனவரியில் நியமனம் செய்யப்பட்டது. இப்போது அமைச்சராக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முதலாக அமைச்சராக பதவி ஏற்றுள்ளது ‘டியெல்லா’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். டியெல்லாவுக்கு அல்பேனிய நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த பெண் உருவம் தரப்பட்டுள்ளது. 28 லட்சம் மக்கள் தொகை கொண்ட அல்பேனியா, ஐரோப்பாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்டது இந்த நாடு. 18 வயதுக்கு உட்பட்ட நல்ல மனநிலை உள்ள எவரும் அமைச்சராக முடியும் என்று அல்பேனியாவின் அரசியல் சட்டம் கூறுகிறது.
அல்பேனியா இணையதளத்தில் டியெல்லா பணியாற்றிய போது மக்களுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட சேவைகளையும் வழங்கி இருக்கிறது. அல்பேனியா நாட்டில் ஊழல் தாண்டவமாடி வருகிறது. சர்வதேச அளவில் மோசடி பணப்பரிமாற்றம், போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் பெருமளவில் நடக்கும் நாடு அல்பேனியா. நான்கு முறை தொடர்ந்து பிரதமராக இருக்கும் என்டி ராமா இப்போது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் இப்படி ஒரு அதிரடி முடிவை அவர் எடுத்து இருக்கிறார். அமைச்சர் நியமனத்திற்கு பிறகு டியெல்லா, தன்னிலையை விளக்கிப் பேசியது. “அரசியல் சட்டத்திற்கு எதிராக நான் நியமிக்கப்படவில்லை. அரசியல் சட்டம், கடமைகள் பொறுப்பு, வெளிப்படைத் தன்மை, பாகுபாடு மறுப்புகளை வலியுறுத்துகிறது. அதைச் செய்ய வேண்டியது மனித உடலாகத் தான் இருக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறவில்லை. அந்த கடமைகளை நான் உண்மையாக நிறைவேற்றுவேன். இன்னும் சொல்லப்போனால் மனிதர்களை விட நேர்மையாக செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன். எனக்கு இந்த நாட்டின் குடியுரிமை அடையாளம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எதுவும் கிடையாது என்று உறுதி டியெல்லா உறுதியளித்துள்ளது.”
அல்பேனியா பிரதமரின் முடிவை எதிர்க்கட்சிகள் எதிர்த்துள்ளனர். இது ஊழல் எதிர்ப்பை திசை திருப்பும் முயற்சி. தகவல்களை சேகரிக்க எந்திரங்களை பயன்படுத்தலாம், ஆனால் முடிவெடுக்கும் உரிமைகளுக்கு எந்திரங்களை பயன்படுத்தக்கூடாது. தவறான முடிவுகளை எந்திரம் எடுக்கும் போது அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி கொண்டு இருக்கின்றன. ஆனாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமைச்சராக தன்னுடைய கடமைகளை செய்ய துவங்கி விட்டது.
அல்பேனியாவில் நடந்த நாத்திக ஆட்சி
20ஆம் நூற்றாண்டில் இந்த நாடு பல நாடுகளின் பகுதி ஆக இருந்தாலும், 1912-ல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, 1946-ல் கம்யூனிஸ்டு ஆட்சியின் வருகை வசமாகியபோது, மத அமைப்புகள் அனைத்தும் நாட்டிலிருந்து நீக்கப்பட்டு, மத குழுக்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. 1967-ல் அல்பேனியாவை உலகின் முதல் முழுமையாக நாத்திக நாடாக அறிவித்தனர். அந்த காலத்தில் மக்கள் மத வழிபாட்டிலிருந்து அதிகமாக விலகி நாத்திக சிந்தனைகளை ஏற்றுக் கொண்டார்கள். இந்த நாத்திக நிலை 20ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தது.
1944 இல் என்வர் ஹோக்ஷா தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்பேனியாவில் அதிகாரத்தைப் பிடித்தனர். பின்னர் 1967-ல், அல்பேனியா உலகின் முதல் அதிகாரப்பூர்வ நாத்திக நாடாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அனைத்து பொதுமத சேவைகளும், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் மற்ற மதசார்பட்ட செயல்பாடுகளும் முற்றிலும் தடை செய்யப்பட்டன. 1967-ஆம் ஆண்டில் வெளியான அறிக்கை மூலம் அல்பேனிய அரசு மத வழிபாட்டை முற்றிலும் தடை செய்தது. பல தேவாலயங்கள் மூடப்பட்டன, மத ஆசிரியர்கள் மற்றும் பாதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெயர் சூட்டுதலில் மத அடையாளம் தடை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பெரியார் இயக்கத் தொண்டர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அல்பேனியா என்று பெயர் சூட்டினார்கள். 1990 வரை அல்பேனியா நாத்திக நாடாகவே இருந்தது. அதன்பிறகு ஹோசா ஆட்சியைப் பிடித்த உடன் கொள்கை மாறியது.
பெரியார் முழக்கம் இதழ் 02102025
