உணர்வலைகளில் மூழ்கிய சீர் விருது வழங்கும் விழா

❖ சீர் விருது வழங்கும் விழா ஈரோடு மல்லிகை அரங்கில் 07-09-2025 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
❖ விழா அரங்கத்திற்கு 100 மீட்டர் தூரத்திலிருந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணியை தோழர்கள் கொள்கை முழக்கத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
❖ விழா சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கி 9 மணிக்கு நிறைவடைந்தது.
❖ ஜாதி, மத எதிர்ப்பு இசைப் பாடல்கள் பாடி அரங்கத்தை சூடேற்றினர். உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தியது. “போராடடா” என்ற பாடலில் பார்வையாளர்களும் மேடைக்கு வந்து நடனமாடிய காட்சி உணர்ச்சி அலைகளைத் தட்டி எழுப்பியது.
❖ திருநங்கை நேகா குழுவினரின் QUEER நாடகம் அரங்கேறியது. பால்புதுமையினர் (LGBTQ) பற்றிய புரிதலை ஏற்படுத்தும் விதமாக நாடகம் அமைந்தது.
❖ வழக்கறிஞர் ப.பா மோகன் நாடகக் குழுவினரைப் பாரட்டி நினைவுப் பரிசினை வழங்கினார். கழகத் தலைவரைப் பாராட்டி வாழ்த்துரை ஆற்றினார்.
❖ கழகத் தலைவர் கொளத்தூர் மணி பற்றிய 50 நிமிட ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.
❖ குடிஅரசுத் தொகுப்பில் தோழர்களின் உழைப்பு, சந்தித்த எதிர்ப்புகள், சட்டப் போராட்டங்கள், இதழ்களின் தேடல்கள் குறித்து கொளத்தூர் மணி ஆவணப்படத்தில் விரிவாக விவரித்தார்.
❖ கொளத்தூர் மணியின் தலைமைப் பண்பு குறித்து தோழர்கள் ஓவியா, காவலாண்டியூர் ஈசுவரன், பேராசிரியர் வீ.அரசு ஆகியோர் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
❖ குடும்ப வாழ்க்கை குறித்து கழகத் தலைவரின் இளவல் பழனிச்சாமி தலைவரது துணைவியார் கமலம், மகள்கள் நாத்திகராணி, அறிவுச் செல்வி ஆகியோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
❖ ஜாதி மறுப்பு இணையர்களுக்கு அடைக்கலம் தரும் கழகத்தின் கோட்டையான காவலாண்டியூர் குறித்து ஆவணப்படம் பேசியது. ‘சின்னத்துரை’ என்ற திரைப்படத்தில் காவலாண்டியூர் ஜாதிமறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு தரும் காட்சி இடம் பெற்று இருந்தது. திரைப்படத்தில் இருந்த அக்காட்சியை இந்த ஆவணப்படம் சித்தரித்து இருந்தது.
❖ காவலாண்டியூர் கழகப் பொறுப்பாளர் ஈசுவரன் ஜாதி மறுப்புத் திருமணங்களை எதிர்ப்புகளுக்கிடையே நடத்தி வருவதை விவரித்தார்.
❖ குடிஅரசு தொகுப்புக்கு தோழர் கொளத்தூர் மணி முழு பொறுப்பையும் சுமந்து செயல்பட்டதையும், ஜாதி தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தில் கழகம் பின்பற்றிய நடைமுறைகள் மற்றும் கொள்கைப் பார்வைகள் குறித்தும் விடுதலை இராசேந்திரன் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
❖ கழக செயல்பாடுகளுக்கும் கழகத் தலைவருக்கும் பெருமை சேர்க்கும் இந்த ஆவணப்படம் கழகத் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் பெருமித உணர்வுகளையும் எழுப்பியது.
❖ தோழர் கொளத்தூர் மணி பேச்சும் எழுத்தும் 2 தொகுதிகள் வெளியிடப்பட்டன. நூலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட முதல் தொகுதியை நாளை விடியும் பி. இரெ. அரசெழிலனும், 2வது தொகுதியை மேட்டுப்பாளையம் மருத்துவர் மகேஷ்வரனும் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்களும் பெற்றுக் கொண்டனர்.
❖ கழகத் தலைவருக்கு சீர் விருதை பேராசிரியர் வீ.அரசு வழங்கினார், ரூ.1,00,000 விருது தொகையை பேராசிரியர் கண்ணம்மாள் தலைமையில் சீர் வாசகர் வட்டம் வழங்கியது.
❖ கழகத் தலைவருக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அம்பேத்கரின் முதல் 10 தொகுதிகள் மற்றும் என்.சி.பி.அய் வெளியீடான கவிஞர் ‘தமிழ்ஓளி’ எழுத்துக்களின் 6 தொகுதிகளை பேராசிரியர் வீ.அரசு வழங்கினார். பேராசிரியர் மங்கை நினைவுப் பரிசு வழங்கினார்.
❖ சன் நியூஸ் வலையொலி (youtube) முழு நிகழ்வையும் நேரடியாக ஒளிபரப்பியது.
❖ ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், திமுக மாநகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம் கழக தலைவருக்கு ஆடை போர்த்தி பாராட்டினர்.
❖ திராவிடர் இயக்கப் பற்றாளர் பாலு கழக ஏட்டுக்கு ரூ.5000 நன்கொடை வழங்கினார்.
❖ ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல், மதுரை,கோவை ஆகிய மாவட்டப் பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 11092025

You may also like...