தோழர் திருமா பேசியதில் என்ன தவறு?
முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் திருமாவளவன், “எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. எவனையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது. சமஸ்கிருதமயமானது, இந்துத்துவமயமானது. கோயிலின் கருவறைக்குள்ளே இருந்த தமிழ் தூக்கி வெளியே வீசப்பட்டதெல்லாம் இந்த பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், சேர மன்னர்கள், பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில்தான். வேள்வி நடத்தியவன் யாகம் நடத்தியவன் எல்லாம், தமிழ் பெயர்களை மாற்றி வடமொழிப் பெயர்களை தங்கள் பெயருக்குப் பின்னால் சூட்டிக்கொண்டார்கள்.
ராஜ ராஜன் என்பது தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ்ப் பெயரா? எல்லாரும் வடமொழிப் பெயர்களைச் சூட்டிக் கொண்டவர்கள். வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள். பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்தவன் நான். எனவே எனக்கு ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. அதில் உடன்பாடும் இல்லை” என்று கூறியதற்காக பா.ஜ.க.வும் அதன் நேரடி மற்றும் மறைமுகக் கூட்டணியில் இருக்கும் அடியாட்களும் தோழர் திருமாவளவன் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தோழர் திருமா பேசியதில் என்ன தவறு இருக்கிறது? சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் “பொற்கால ஆட்சி” நடத்தியதாக கொண்டாடுவதில் அடிப்படை உண்மை எதாவது இருக்கிறதா? அந்த பொற்கால ஆட்சியில் எத்தனை தமிழர்கள் படித்திருந்தார்கள்? எத்தனை தமிழர்கள் நல்ல வேலைவாய்ப்பு பெற்றிருந்தார்கள்? எத்தனை தமிழர்களுக்கு 3 வேளை உணவு கிடைத்தது? தமிழ் மன்னர்கள் வருணாசிரம தர்மத்தை பாதுகாக்கும் பார்ப்பனிய காவலர்களாக இருந்தார்கள் என்பதே உண்மை. அதைத்தான் பெரியாரும் கூறியிருக்கிறார். மன்னர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும், தங்களை தெய்வீகத் தன்மை கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளவும் பார்ப்பனர்களின் துணையை நாடினர். மனுதர்ம சட்டங்களை நடைமுறைப்படுத்தி, ஜாதி ஏற்றத்தாழ்வுகளை சமூகத்தில் ஆழமாக வேரூன்றச் செய்தனர். வரிக்கு மேல் வரி வசூலித்து, மக்களின் உழைப்பைச்சுரண்டி மிகப்பெரிய கோயில்களை கட்டி, அந்த கோயில்களையெல்லாம் பார்ப்பனர்களிடத்தில் ஒப்படைத்த பெருமைகள் எல்லாம் இந்த தமிழ் மன்னர்களைத்தான் சேரும். அந்த கோயில்களில் சமஸ்கிருத பண்பாடும், ஆரியக் கடவுள்களும், யாகங்களும்தான் இடம்பெற்றன. பார்ப்பனர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியதும், தேவதாசி முறையை வளர்த்தெடுத்ததும் ராஜ ராஜ சோழன் என்ற வரலாற்று உண்மையைத்தான் இவர்களால் மறைக்க முடியுமா? விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ‘கடமை’ என்றும் பெயரிட்டிருந்தார்கள்.
தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுகளில் தீண்டாமை பற்றிய முதல்குறிப்பு இராசராச சோழனின் ஆட்சிக் காலத்தில் வந்துள்ளது என்பதை வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் தனது ஆய்வுகளில் சுட்டிக்காட்டியுள்ளார். ஊருக்கு வெளியே தீண்டாச்சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு ஜாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன. முதலாம் இராசராசன் மற்றும் இராசேந்திரனின் ஆட்சிக்காலத்தில் பிரமதேய கிராமங்களின் (பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கிராமங்கள்) தனித்தன்மையைக் காக்க வேண்டி இதர வகுப்பினர்களின் நில உரிமைகள் சுருக்கப்பட்டன என்கிறார் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி. அகரம், அக்ரஹாரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் எனப் பல பெயர்களில் தானமாக வழங்கப்பட்ட கிராமங்களில் எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், ஆயங்கள், கடமைகளில் இருந்தும் பார்ப்பனர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 250 ஊர்கள் சோழர்jகள் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.
‘உயர் கல்வியானது ஜாதி தழுவியே கற்பிக்கப்பட்டது. மடங்கள் – கோயில்களைச் சார்ந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இது பயிற்றுவிக்கப்பட்டது. நான்கு வேதங்கள், சூத்திரங்கள், ரூபாவதரா இலக்கணம் போன்றவையே பாடத்திட்டங்கள். சோழர்கள் ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் தமிழ் கல்வி முறை கற்பிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கமும் சோழ மன்னர்கள் காலத்தில் இருந்தது. இராசராசனின் தந்தையான சுந்தர சோழன் இறந்தபோது அவருடைய மனைவி வானவன்மாதேவியும் உடன்கட்டை ஏற்றப்பட்டார் என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. மன்னர்களைப் போற்றுவது என்பது அடிமை மனநிலையின் வெளிப்பாடு. நாம் மன்னர்களை மறந்துவிட்டு, நவீன ஜனநாயக விழுமியங்களை நோக்கி நகர வேண்டும் என்பதே பெரியாரின் சிந்தனையாக இருந்தது. கடந்த காலப் பெருமைகளைப் பேசிக்கொண்டே இருப்பது, தமிழர்களின் அறிவியல் மற்றும் சமூக வளர்ச்சிக்குத் தடையானது என்றுதான் பெரியார் கருதினார். பெரியாரின் அந்த கருத்தியல்போக்கில் தோழர் திருமா வெளிப்படுத்தியிருக்கும் இக்கருத்து வரவேற்கத்தக்கது. தேர்தல் அரசியலுக்காக மன்னர்களை போற்றும் பழமைவாத கருத்துக்களை மற்ற அரசியல் கட்சிகளும் விட்டொழிக்க வேண்டும். அவர்கள் கடைபிடித்த வருணாசிரம சிந்தனைகளை தோலுரிக்க வேண்டும். அதுதான் தமிழர்களின் நலனுக்கானதே தவிர, இத்தகைய பிற்போக்கு மன்னர்களின் புகழைப்பாடுவது எந்தக் காலத்திலும் ஒருவருக்கும் பயன்படாது!
பெரியார் முழக்கம் இதழ்05022026
