பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது
People’s literature பதிப்பகம் வெளியிட்டுள்ள “Periyar: Caste, Nation and Socialism” நூலின் அறிமுக விழா, (24.8.25), சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று நடத்தினார். பெரியார் மீது எழும் கேள்விகள் அல்லது குற்றச்சாட்டுகள், அல்லது மனதறிந்து பேசுகிற பொய்கள் எல்லாவற்றையும் விளக்கும் நோக்கத்தோடு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
பெரியார், அம்பேத்கரின் பார்வைகள், புத்தம் குறித்த பெரியார், அம்பேத்கர் கருத்துக்கள் ஆகியவற்றை முதன்மை தலைப்பாக பதிவு செய்துள்ளார். ரங்கூன் மாநாட்டில் பெரியார், அம்பேத்கர் கலந்து கொண்ட செய்திகளையும், வன்முறைக்கு எதிராக பெரியார் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
கோவி. கனக விநாயகம் (துணைப் போராசிரியர், எஸ்.ஆர்.எம் சட்டக் கல்லூரி , சென்னை) பேசுகையில், எளிய மொழிநடையில், கேள்வி பதிலாக தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல். 21ம் நூற்றாண்டில் திராவிடர் இயக்கத்துக்கு கிடைத்த ஆவணம் இந்த நூல் என்று வாழ்த்துரை வழங்கினார்.
நூலின் உருவாக்கம் குறித்து பல சுவையான தகவல்களை North Indian Dravidian என்று அழைக்கப்படும் ஜாதி ஒழிப்புப் போராளி வித்யா பூஷன் ராவத் (புதுடெல்லி) ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
ஏ.எஸ் பன்னீர் செல்வம் (தலைமை இயக்குனர் இதழியல் நிறுவனம்) ஆங்கில மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் குறித்தும் மொழிபெயர்ப்பு துறையில் இன்னும் மாற்றங்கள் வரவேண்டும் என்றும் கூறினார்.
பெரியார் ஏன் ஆங்கிலத்தில் எழுதவில்லை என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லை என்றார். “குடிஅரசு, ரிவோல்ட்” வெளியிட்ட செய்திகளே அன்றைய செய்தித் தாள்களில் பெரிதும் வரவில்லை. பெரியார் காலம் தொடங்கி கலைஞர் வரை இதழ்களை அவர்களே அச்சடித்து அவர்களே பரப்பினார்கள். ஆங்கில நூல்களின் தேவை குறித்தும் அதனை சரியான மொழியாக்கத்தில் கொண்டு வரவேண்டும் என்றும் சிறப்புரையாற்றினார்.
முனைவர் கார்த்திக் ராம் மனோகர் (இணை பேராசிரியர் இந்திய தேசிய பல்கலைக்கழக சட்டப் பள்ளி- பெங்களூரு) பேசுகையில்: இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல இடங்களில் பேசு பெருளாக மாறி உள்ளார் பெரியார். ஆண்டுதோறும் நடத்தப்படும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பெரியார் குறித்தான ஆய்வறிக்கை வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திராவிட ஆய்வுகள் பற்றி பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
1960-களில் உலகம் முழுவதும் மாணவர் புரட்சி பல நாடுகளில் நடந்தது. பிரான்சு, ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா பல இடங்களில் நடந்தது. அவை அனைத்தும் தோல்வியைத் தழுவியது. தமிழ்நாட்டில் நடந்த திராவிடர் இயக்க மாணவர்கள் போராட்டம்தான் வெற்றி கண்டது. பெரியார் தமிழ்நாட்டுத் தலைவர் மட்டும் அல்ல! உலக தலைவர் என்றும் பல்வேறு நாடுகளில் பெரியார் பரவி கொண்டிருக்கிறார் என்றும் தனது மதிப்புரையில் பேசினார்.
இறுதியாக, ஆந்திரப் பிரதேசத்திலுள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கே.எஸ்.சலம், நிகழ்காலத்தில் திராவிடம் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றியும், திராவிடத்தை தமிழ்நாட்டுக்குள் சுருக்காமல், அதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வகுடிகள் (Native Indians) அனைவருக்குமான பொது அடையாளமாக நிறுவுவதின் அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்) நன்றியுரை ஆற்றினார். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனையாளர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
பெரியார்முழக்கம்இதழ்04092025
