மோடி ஆட்சி கோல்வாக்கர் தத்துவத்தைக் கொண்டாடுகிறது
மோடி ஆட்சியின் கலாச்சாரத் துறை அமைச்சகம், ஆர்.எஸ்.எஸ். ‘தத்துவத் தந்தை’யான எம்.எஸ். கோல்வாக்கரின் பிறந்த நாளில் அதிகாரப் பூர்வமாக டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட் டிருக்கிறது. “கோல்வாக்கர் மிகப் பெரும் சிந்தனை யாளர்; அறிவு ஜீவி; வரலாற்றில் இடம் பிடித்த மாபெரும் தலைவர்; அவரது சிந்தனைகள் நமக்கு என்றென்றும் ஊக்கம் தரும். நமது அடுத்தடுத்த தலை முறைக்கு வழிகாட்டி நிற்கும்” என்று கோல்வாக்கர் படத்துடன் அந்தப் பதிவு வெளியிடப் பட்டுள்ளது.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஷிதரூர் உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு கலாச்சாரத் துறை அமைச்சரின் பத்திரிகை தொடர்பாளரான நிதின் திரிபாதி என்ற அதிகாரி பதிலளித்துள்ளார்.
“இந்தியா பல்வேறு கலாச்சாரம் – தத்துவங் களைக் கொண்ட நாடு. எந்தத் தத்துவத்தையும் பேசக் கூடாது என்று ஒதுக்கி வைக்கவோ மவுனிக்கச் செய்யவோ நாங்கள் விரும்பவில்லை” என்று பதில் கூறியிருக்கிறார். இந்தியாவில் பெரியார் தத்துவங்கள் – மார்க்சிய தத்துவங்கள் – மாவோயிச தத்துவங்களை ஏற்றுக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அந்தத் தத்துவங்களையும், கலாச்சாரத் துறை ‘மவுன மாக்காமல்’ ஒதுக்கி வைக்காமல் செயல்படுமா?
கோல்வாக்கர் என்ன தத்துவங்களை முன் வைத்தார்? அவரது ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ நூலில் என்ன தத்துவங்களை வலியுறுத்தினார்? அனைத்தும் சட்ட விரோதமானவை.
- இந்தியா என்பது ஆரியர்களுக்கான நாடு.
- இந்தியாவின் தேசிய மொழி சமஸ்கிருதம் மட்டுமே.
- ஜாதி அமைப்பு முறையாலோ வர்ணாஸ்ரம அமைப்பு முறையிலோ எந்தப் பாதிப்பும் இல்லை. அது நம்மைக் காப்பாற்றி வருகிறது.
- பெண்களுக்கு ஓட் டுரிமையே வழங்கக் கூடாது.
- மொழி வழி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப் பட்டதே தவறு.
- இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளர்களாக ஏற்றுக் கொண்டால் இஸ்லாமியர்கள் இங்கே வாழலாம்.
- ஆப்கானிஸ்தான், பர்மா, இலங்கை, நேபாளம், பூடான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இந்துக்களுக்கான தேசம்.
- ‘பிராமணன்’, ‘சூத்திரன்’ பாகுபாடுகளை மனுஸ்மிருதி வழியாக உருவாக்கி, கடமை களையும் தண்டனைகளையும் வலியுறுத்திய ‘மனு’தான் உலகின் முதலாவது சட்டமேதை; உலகில் உள்ள அனைத்து மக்களும் ‘இந்துஸ்தான்’ சென்று, ‘பிராமணன்’ காலில் விழ வேண்டும்.
- ‘பிராமணன்’ பிறப்பால் உயர்ந்தவர்கள்; அவர்கள் வணங்கத்தக்கவர் என்பதற்கு கோல்வாக்கர் ஒரு உதாரணம் கூறுகிறார்:
“தென்னாட்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒரு நாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது ‘பிராமண’ பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார். ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து கை குலுக்கினார். ஆனால் பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத் தொட்டு வணங்கினார். அதைப் பார்த்து வியப்படைந்த ஆங்கிலேயே அதிகாரி, ‘நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கை தான் குலுக்கினாய். ஆனால் என்னுடைய பியூனின் காலைத் தொட்டு கும்பிடுகிறாயே, இது என்ன பிரச்சினை?’ என்று கேட்கிறார். அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார். ‘நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம்; ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் பியூனாக இருக்கலாம்; ஆனால் நாங்கள் வணங்கக் கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழ வேண்டியது எனது கடமை என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம்.”
(குரு கோல்வாக்கர் எழுதிய ‘Bunch of Thoughts’ நூல் பக்கம் 138-139)
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் அவர்களே கோல்வாக்கரின் பல சிந்தனைகளை இப்போது ஏற்க முடியாது என்று வெளிப்படையாக அறிவிக்கும் நெருக்கடிக்கு உள்ளானார். ஆனால் இப்போது மோடி ஆட்சியின் கலாச்சாரத் துறை கோல்வாக்கரைக் கொண்டாடுகிறது.
பெரியார் முழக்கம் 25022021 இதழ்