உலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’
பார்ப்பனர்கள் விளையாட்டாக மாறிவிட்ட ‘கிரிக்கெட்’ மட்டுமே இங்கு பிரபலமாக்கப்பட்டதால் கடும் உடல் சக்தியைப் பயன்படுத்தக் கூடிய ஒருவரை ஒருவர் தொட்டு முட்டி மோதி விளையாடக் கூடிய ‘கால்பந்து’ விளையாட்டுகள் ‘புண்ணிய பூமி’யில் ‘சூத்திரர்’ விளையாட்டாகிவிட்டன.
இரஷ்யாவில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியில் இந்தியாவில் ஒரு மாவட்டத்தைவிட சிறிய பரப்பளவு கொண்ட அய்ஸ்லாந்து, துனிஷியா, பனாமா, செனகல் போன்ற நாடுகள் எல்லாம் பங்கேற்கும்போது இந்தியா வேடிக்கை பார்க்கும் நாடாகவே இருக்கிறது.
2002இல் உலகப் போட்டியில் இந்தியா பங்கேற்கும் என்றார்கள். 2010இல் உலகப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ‘டி சர்ட்டுகள்’ மட்டுமே தயாரிக்கப்பட்டன. இப்போது 2026இல் பங்கேற்கும் என்கிறார்கள். இதற்கான தயாரிப்புகள் ஏதேனும் நடக்கிறதா? எதுவுமே இல்லை.
உள் நாட்டில் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் பெரிய அளவில் நடத்தப்படுவது இல்லை. ‘கால்பந்து’ கிளப் ஏதும் கிடையாது. பார்ப்பன உயர்ஜாதியினர் கடுமையாக உடல் சக்தியைப் பயன்படுத்தக் கூடிய இந்த விளையாட்டைவிட ஒருவருக்கொருவர் தொட வேண்டிய தேவை இல்லாமல் கோடிகோடியாக பணமும் விளம்பரமும் கிடைக்கக்கூடிய ‘சூதாட்டப் புகழ்’ ‘கிரிக்கெட்’டை மட்டுமே நேசிக்கிறார்கள்.
ஆசிய நாடுகளுக்கான போட்டிகளில் இந்தியா 14ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்குக்கூட அரசின் ஒப்புதலுக்காக மன்றாட வேண்டியிருக்கிறது என்கிறார் முன்னாள் தேசிய அணி வீரரும், தலைமைப் பயிற்சியாளருமான சய்யத் நயிமுதீன். கால்பந்து விளையாட்டையும் மதிப்பதில்லை; விளையாட்டு வீரர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு, பயிற்சிக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவது இல்லை என்று மனம் புழுங்குகிறார்.
இரஷ்ய நாட்டுக்கு கால்பந்து போட்டியைப் பார்க்க இந்தியாவிலிருந்து 14,000 பேர் போயிருக்கிறார்கள். சர்வதேசப் போட்டியில் இவர்கள் ஆர்வம் காட்டுவதைப்போல் உள்நாட்டுப் போட்டியில் ஆர்வம் காட்டுவதில்லையே, ஏன்? பணம் செலவழித்து வெளிநாட்டுக்குப் போய் போட்டியை ‘இரசிக்கும்’ மனோபாவம் கொண்ட மேல்தட்டு வர்க்கம், இங்கே ஏன் அலட்சியப்படுத்துகிறது? இதுவும் ‘மனுதர்ம’ மனப்போக்குதான். அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் லயோனல்மெஸ்ஸியை அர்ஜென்டினா நாடு உருவாக்கவில்லை. ‘லா மாகியா’ என்ற பார்சிலோனா நகரக் கால்பந்து அகாடமிதான் உருவாக்கியது. அத்தகைய கால்பந்துக்கான ‘கிளப்’களும் அகாடமிகளும் இங்கே உருவாக்க வேண்டும் என்கிறார், விளையாட்டு விமர்சகர் நோவிகபாடியா.
மாறாக, பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் விளையாட்டுப் போட்டிக்கான கோட்டாவில் மாணவர்கள் இடம் பிடிக்கும் வாய்ப்புகளை மட்டுமே இங்கே விளையாட்டுப் பயிற்சி அமைப்புகள் உருவாக்கி வருவது மிகப் பெரும் சோகம்.
சமஸ்கிருதம், யோகா, கீதை, புராணம், இஸ்லாமிய வெறுப்பு, ஜாதியப் பெருமைகளைக் கற்றுத் தந்தாலே போதும் என்கிறார்கள். இந்த ‘பாரத மாதா’ புதல்வர்களான ‘தேசபக்தர்கள்’, ‘பாரதமாதா’வுக்கும் இராமானுக்கும் கோயில்களைக் கட்டத் துடிக்கிறார்களே தவிர, இளைஞர்களின் ஆற்றலை விளையாட்டுத் துறைகளில் ஊக்குவிக்க ஆர்வம் காட்டவில்லை. மத்தியில் எந்தக் கட்சி அதிகாரத்தில் இருந்தாலும் அது காங்கிரசாகவே இருந்தாலும் இதுதான் நிலை!
பெரியார் முழக்கம் 05072018 இதழ்