குற்றவாளிப் பட்டியலிலிருந்து இராம.இளங்கோவன் விடுவிப்பு!
கடந்த 20 ஆண்டுகளாக கழக மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் மீது பொய்யாக சரித்திர குற்றவாளி பதிவேட்டை கோபி காவல் துறையினர் பராமரித்து வருகிறார்கள், அதனால் தான் பெரும் அவதிக்கு ஆளாகியிருப்பதாகவும், தன்னுடைய தனி மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தன் மீது கடுமையான குற்றப் பின்னணி எதுவும் கிடையாது, நான் விடுதலைப் புலிகளை ஆதரித்த காரணத்திற்காகவும், 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “இனி என்ன செய்யப் போகிறோம்” என்ற குறுந்தகடு வெளியிட்டதற்காகவும் என் மீது வழக்கு பதியப்பட்டு சுமார் மூன்றரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.
2009-ஆம் ஆண்டு ஈரோடு மாநகரில் உள்ள ஒரு கோயில் மேல் மேம்பாலம் கட்டக்கூடாது என்று இந்து முன்னணியினர் உண்ணாவிரதம் இருப்பதை எதிர்த்து, நானும் கழகத்தினருடன் இணைந்து உண்ணும் விரதம் மேற்கொண்டதற்காக ஈரோடு போலீசாரால் வழக்கு பதியப்பட்டு அதற்காக 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.
2006 ஆம் ஆண்டு பார்ப்பனர்களின் மத விரோதப் போக்கினை கண்டித்து ஈரோடு இராகவேந்திரா மண்டபத்தில் பார்ப்பனர்களின் பூணூலை அறுத்ததாக என் மீது வழக்கு தொடரப்பட்டு ஏறத்தாழ ஆறு மாதங்கள் சிறையில் இருந்தேன். மேலும் அதே வழக்கிற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.
கோபி காவல் நிலையத்தில் பதிவாகி இருந்த போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் குற்றப் பின்னணி கொண்ட வழக்குகள் கிடையாது என்றும் அரசியல் மற்றும் மத காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது தொடங்கப்பட்ட நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் தன் மீது உள்ள குற்றப் பதிவேடு பின்னணியை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இராம. இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டார். சட்டப்படி அவர் மீது சரித்திரப் பதிவேடு தொடர்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கோபி காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெரியார் முழக்கம் 01062025இதழ்
