கழகத் தலைவருக்கு சீர் விருது
சீர் வாசகர் வட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு 2025 ஆண்டுக்கான சமூக போராளி விருது வழங்குகிறது. விருது தொகை ரூ. 1,00,000 இது தொடர்பாக சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் போராட்ட களங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர் என்று பாராட்டி உள்ளது.வாசகர் வட்டத்தின் அறிக்கை:
சாதி ஒழிப்பு, சமூகநீதி, பாலின சமத்துவம், பகுத்தறிவுப் பரப்புரை, சுரண்டல் எதிர்ப்பு என மானுட விடுதலைக்கான அனைத்துத் தளங்களிலும் போராட்டக் களங்களிலும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர்.
இட ஒதுக்கீட்டு வரலாறு, விடுதலை வேட்கை, தமிழர் பண்பாடு, பெரியாரும் தனித்தமிழ்நாடும், பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
தமிழர், தமிழ்நாடு நலன்சார்ந்த போராட்டங்களுக்காக எண்ணற்ற முறை சிறை சென்றவர். சட்டத்தை விட நியாயமே மேலானது என்பதை உரத்துச் சொல்பவர். தன் பேச்சையும் மூச்சையும் தமிழ்ச் சமூகத்துக்காகவே அர்ப்பணித்துக்கொண்ட வாழ்நாள் போராளி.
தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையில் மாபெரும் அறிவுப்புரட்சியை நிகழ்த்திய தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழ் தொகுப்பை அடுத்தத் தலைமுறைக்குக் கையளித்த குடிஅரசு நாயகர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி அவர்களுக்கு குடிஅரசு நூற்றாண்டில் அவரது செயல்பாடுகளுக்காக விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது சீர் வாசகர் வட்டம்.
பெரியார் முழக்கம் 15052025இதழ்
