கோவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம்; கழக ஏட்டுக்கு 75,000 நன்கொடை
திராவிட இயக்கத் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் 55ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டக் கழக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது.
எம்.ஆர்.இராதா கலைக்குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கருத்தரங்கம் தொடங்கியது. சூலூர் தமிழ்செல்வி கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன் தலைமை தாங்கினார், மாதவன் சங்கர் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து “கோயில்களும் சமூகநீதியும்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய செயலாளர் வழக்கறிஞர் ச.பாலமுருகன், திராவிட முன்னேற்றக் கழக கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், திராவிட இயக்க செயல்பாட்டாளர் லோகநாயகி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “அறிஞர் அண்ணாவும் தமிழ்நாடும்” என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார்.
கருத்தரங்கின் முடிவில் ஜெகதீசன், கார்த்திக் ஆகியோர் கழகத் தலைவர் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூல்களை வழங்கி வாழ்த்தினார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தை சேர்ந்த யோகநாதன், வெற்றிச்செல்வன் ஆகியோர் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர். கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு சந்தா தொகையாக ரூ.75,000-யை மாவட்டக் கழகம் சார்பாக கழகத் தலைவரிடம் வழங்கினார்கள்.
நிறைவாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் நவீன் நன்றி கூறினார். இதில் மாவட்டத் தலைவர் பா.இராமசந்திரன், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாநகரச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் கழகத் தலைவர் ஆற்றிய உரை, அடுத்தவார இதழில் வெளியாகவுள்ளது.
பெரியார் முழக்கம் 07032024 இதழ்