வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, ஜான் இளமாறனுக்கு பாராட்டு!

கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ராஜ் பவன், வெல்கம் ஹோட்டல்களை முற்றுகையிட்டதாக தொடரப்பட்ட வழக்கு, எஸ்.வி.சேகர் வீட்டை முற்றுகையிட்ட வழக்கு, பெரியார் சிலையை உடைப்போம் என ஹெச்.ராஜா கூறியதற்காக சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் எதிர்வினையாற்றியதாக தொடரப்பட்ட வழக்கு, இலங்கை தமிழர் விவகாரத்தில் புத்த மட முற்றுகை வழக்கு என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த பல முக்கிய வழக்குகளில் இருந்து கழகத் தோழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குகளில் கழகத் தோழர்கள் சார்பாக ஆஜராகி விடுதலை பெற்றுத் தந்த வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, இளமாறன், ஜான் ஆகியோருக்கு பாராட்டு விழா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த பாராட்டு நிகழ்வில், கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கழகத்தினர் மீதான வழக்குகளை திறம்பட நடத்திய வழக்கறிஞர்களை பாராட்டிப் புத்தகங்களை வழங்கினார்.

வழக்குரைஞர் ஜான் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். “இன உணர்வோடு சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் நிகழ்த்திய அரசியல் எதிர்வினை சார்ந்த வழக்குகளில் இருந்து தோழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தோழர்களுக்காக வழக்காடி விடுதலை பெற்றுத் தந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதமாக இந்நிகழ்வு அமைந்தது. சிறை சென்று வழக்கில் இருந்து மீண்ட தோழர்களுக்கு வாழ்த்துகள்” என கழகப் பொதுச்செயலாளர் பேசினார்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த இராவணன், சுகுமார், கோபி, அருண், பிரதீப் பிரபாகரன், திவாகர், நந்தா, உமாபதி, தமிழ்ச்செல்வன், தட்சணாமூர்த்தி, தாமரை, கார்த்திக், ஜெயராம், சுரேஷ், நாத்திகன் ஆகியோர் இந்த வழக்குகளில் கைதாகி இருந்தனர். பெரியார் முழக்கம் 01052025இதழ்

You may also like...