பார்ப்பனப் பிடியில் இந்துமதம் ஏழை இந்துக்களை ஒதுக்கும் `ஏழுமலையான்’
திருப்பதி ஏழுமலையானுக்கு ஜூலை-16, அன்று ஒரே நாளில் மட்டும் 97 கோடி ரூபாய் காணிக்கையாக வந்திருக்கிறது. இதற்கான காரணமும் இப்போது வெளிவந்து இருக்கிறது. ஏழுமலையானுக்கு தொடர்ந்து நன்கொடை வழங்குகிறவர்களின் பட்டியல் ஒன்று இருக்கிறது. இதில் 1.97 லட்சம் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் திருப்பதி ஏழுமலையான் கூடுதலாக தரிசனங்களை வழங்குவார்.
எவ்வளவு அதிகமான தொகை நன்கொடை வழங்குகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தரிசனங்களில் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு தரிசனம்; கருவறைக்கு அருகில் உள்ள குறுக்கு வழி வழியாக அனுமதி; பிரேக் அப் தரிசனம்; விடியற்காலை தரிசனம்; சுப்ரபாத சேவை; கல்யாண உற்சவத்தில் அனுமதி. இவை தவிர லட்டு பட்டு வஸ்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணய பரிசுகள், தங்குமிட வசதிகள் எல்லாமும் கிடைக்கும். இந்தச் சலுகைகளில் புதிய மாற்றங்கள் ஜூலை-16, முதல் அமுலுக்கு வந்தன.
இதன்படி நன்கொடையாளர்கள் மேலும் புதிதாக நன்கொடை அளித்தால் மட்டுமே பழைய சலுகைகள் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் நேற்று ஒரே நாளில் 97 கோடி ரூபாய் காணிக்கையாக வந்திருக்கிறது. பலர் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நன்கொடைகளை வாரி வழங்கி இருக்கின்றனர். தங்களுக்கான ஏழுமலையான் சிறப்பு தரிசனங்களை கூடுதலாக பணத்தைக் கொட்டி புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜாதியால் பாகுபடுத்தும் இந்து மதம் இப்படி பொருளாதாரத்திலும் பாகுபடுத்துவது என்ன நியாயம்? இதை ஏழுமலையான் அனுமதிக்கிறானா?
ஏழை இந்துக்களை விட கோடீஸ்வர இந்துக்களுக்கு தான் ஏழுமலையானின் கருணையும் சிறப்பு தரிசனமும் கிடைக்கும் என்பதுதான் இந்து தர்மமா?
அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் காரியங்களைச் சாதிப்பது குற்றம் என்று சொன்னால் நன்கொடை கொடுத்து ஏழுமலையானின் சிறப்பு தரிசனத்தை குறுக்கு வழியில் பெறுவதற்கு என்ன பெயர்? இது கடவுளுக்குத் தரும் லஞ்சம் அல்லவா?
கோயில் சொத்துக்களையும் நகைகளையும் கொள்ளையடிப்பது மட்டும் ஊழல்அல்ல; பணக்கார இந்துக்களுக்கும் பார்ப்பன அர்ச்சகர்களுக்கும் மட்டுமே பகவான் சிறப்பு காட்சிகளை தருவார் என்பதும் மிக மிக மோசமான ஆன்மீக ஊழல் தான்!
ஏழை எளிய இந்துக்களுக்கு ஒரு நீதி; பார்ப்பன கோடீஸ்வர இந்துக்களுக்கு ஒரு நீதி பேசுவது தான் சனாதன தர்மமா? பார்ப்பனியத்தின் பிடியில் இந்து மதம்”என்று இதைத்தான் கூறுகிறோம்!
பெரியார் முழக்கம் இதழ் 23072026
