உண்மைக்கு அஞ்சும் கோழைகள்!
சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்திரிபாய் புலே வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் புலே. இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தது படக்குழு. இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை வாரியம், படத்தின் பல காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து உரையாடல்களை நீக்க வலியுறுத்தியுள்ளது. இதனால் திரைப்படம் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குத் திரையிடத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மையமாக, படத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்டார்கள், ‘மஹர், மாங், பேஷ்வா என சாதிப் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது. மூன்றாயிரம் ஆண்டுகள் அடிமைத்தனம் என்றெல்லாம் குறிப்பிடக்கூடாது’ எனப் பல இடங்களில் உரையாடல்களை நீக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறார்கள். படத்தின், முன்னோட்டக் காட்சிகளில் பார்ப்பன ஒடுக்குமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், திரைப்பட வாரியத்தின் இந்தப் போக்கு குறித்து இயக்குநர் அனுராக் காஷ்யப் “இந்த சாதிய, இன வெறி அரசாங்கம் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறது” என்று விமர்சனம் செய்துள்ளார்.
“எது அவர்களைத் தொந்தரவு செய்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாத கோழைகள்” என்று குறிப்பிட்டுள்ள அவர், “முன்பு தாடக்- 2 படத்துக்குப் பிரச்சினை செய்து, இந்தியாவில் சாதி அமைப்பை மோடி ஒழித்து விட்டார் என்று கூறினார்கள், இங்கே சாதி அமைப்பு இல்லை என்றால், ஏன் பிராமணர்கள் புலே திரைப்படத்தின் மீது கோபம் கொள்கிறார்கள்? சாதி அமைப்பு இல்லை என்றால், ஏன் ஜோதிராவ் புலே சாவித்திரிபாய் புலே இன்னும் பேசுபொருளாக இருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த விமர்சனத்துக்காக அனுராக் கடுமையாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். அவரது மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்களுக்குப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. உண்மையை எதிர்கொள்ளமுடியாத அரசு, மதவெறி கும்பல்களுக்கு எதிராகவும் அனுராக் காஷ்யப் மற்றும் புலே திரைப்படத்துக்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் பெருகும் ஆதரவு நம்பிக்கை அளிக்கிறது. -நன்றி முரசொலி
பெரியார் முழக்கம் 24042025இதழ்
