செப்-17 முதல் டிசம்-24 வரை ஜாதி எதிர்ப்பு தீவிர பரப்புரை இயக்கம் – தலைமைக் குழுவின் முடிவுகள்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் ஈரோட்டில் 07.09.25. ஞாயிறு காலை 10.30 மணிக்கு கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
தலைமை குழுக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற கழக தலைமைக் குழு உறுப்பினர்கள் கழகத்தின் அடுத்த கட்ட செயல்திட்டங்கள், பரப்புரைப் பயணங்கள், போராட்டங்கள், புரட்சிப் பெரியார் முழக்கம் குறித்த ஆவணமாக வெளியிடுவது பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
1) முன்னதாக கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் கிராம மற்றும் நகரப் பகுதிகளில் கடைபிடிக்கப்படும் ஜாதி தீண்டாமை குறித்து (முடி திருத்தகங்கள், இடுகாடு,குடிநீர் குழாய்கள்,பேருந்து போன்ற இடங்கள்) கழகத் தோழர்கள் கள ஆய்வு செய்து அது குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்களை திரட்டி கழகத் தலைமைக்கு அனுப்பி வைக்க கேட்கப்பட்டு பல்வேறு இடங்களில் தீண்டாமை குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்கள் திரட்டப்பட்டு பெறப்பட்டது.
அப்படி பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஜாதி தீண்டாமை வன்கொடுமை நடைபெறும் இடங்களில் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி கழகத்தின் சார்பில் அந்தந்த துறை சார்ந்த மாவட்ட அரசு நிர்வாகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீண்டாமை கடைபிடிக்கும் இடங்கள் மற்றும் நபர்கள் மீது எந்த விதமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதை தலைமைக் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி விவாதித்தார்கள்.
தற்பொழுதும் பல்வேறு வடிவங்களில் பட்டியல் சமூக மக்களின் மீது நிகழ்த்தப்படும் ஜாதிய தீண்டாமை வன்கொடுமைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை நோக்கிச் செல்லும் விதமாக கோவையில் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இருந்து கழகத் தோழர்கள் பங்கேற்கும் ஒரு மாபெரும் போராட்டம் நடத்துவது என தலைமைக் குழு முடிவு செய்தது. போராட்ட வடிவம் குறித்து தோழர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
2) தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடைபெற்று வரும் ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் சனாதன கோட்பாடும் அதன் செயல் வடிவமாக மக்கள் மத்தியில் நிலை பெற வைக்கப்பட்டிருக்கும் பிறப்பின் அடிப்படையிலான ஜாதிய ஏற்றத்தாழ்வுகளே மூல காரணம் என்பதனை சுட்டிக்காட்டி மக்கள் மத்தியில் கழகம் தற்பொழுது தெருமுனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
“ஜாதி நமக்கு அவமானம் – மனிதம் நமக்கு அடையாளம்” என்கிற தலைப்பில் கழகத்தின் சார்பில் தற்பொழுது நடைபெற்று வரும் பரப்புரை கூட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்பரப்புரை கூட்டங்கள் மக்கள் மத்தியில் இறுகி கெட்டிப்பட்டு போய் இருக்கும் ஜாதிய மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி ஜாதி குறித்த சிந்தனை மாற்றத்திற்கு வழி வகுக்கிறது. தற்போது சென்னை, சேலம், திருப்பூர், கோவை, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் இப்பரப்புரைக் கூட்டங்களை இன்னும் விரிவாக வீச்சாக தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் நடத்துவது என்று தலைமைக்குழு முடிவு செய்தது. பரப்புரை கூட்டங்களில் கலை வடிவங்களில் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
பரப்புரை கூட்டங்கள் நிறைவடையும் டிசம்பர் 24ஆம் தேதி தந்தை பெரியாரின் நினைவு நாளில் கோயம்புத்தூரில் ஜாதி தீண்டாமைக்கு எதிராக அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3) கழகத்தின் சார்பில் வார இதழாக தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கும் “புரட்சிச் பெரியார் முழக்கம் ஆவணம்” வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி கழகம் தமிழ்நாடு அளவில் நடத்திய மிகப்பெரிய போராட்டங்கள், அதில் சிறைப்பட்ட தோழர்கள்,அவற்றின் புகைப்பட பதிவுகள், கழகம் நடத்திய மாநாடுகள், அவற்றில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டு இவை அடங்கிய ஒரு வரலாற்று ஆவணமாக புரட்சிப் பெரியார் முழக்க மலரை வெளியிடுவது என்று தலைமைக் குழு தீர்மானித்தது.
தொடர்ந்து கழகம் வெளியிட்டுள்ள நூல்களின் விற்பனையை அதிகப்படுத்துவது,இணையதள செயல்பாடுகளை மேம்படுத்துவது ஆகியவை குறித்தும் தலைமைக்குழு விவாதித்தது. பிற்பகல் 02.00 மணியளவில் தலைமைக் குழு கூட்டம் நிறைவடைந்தது.
தலைமைக் குழு கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன், அன்பு தனசேகரன், சூலூர் பன்னீர்செல்வம், காவலாண்டியூர் ஈஸ்வரன், சென்னை உமாபதி, மயிலாடுதுறை இளையராஜா, விழுப்புரம் அய்யனார், சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் ஆகிய தோழர்கள் பங்கேற்றனர்.
செய்தி- பரிமளராசன் (சமூக ஊடகப் பொறுப்பாளர்)
புதிய தலைமைக்குழு உறுப்பினர்களாக கீழ்கண்ட தோழர்கள் இணைக்கப்படுகிறார்கள்.
1. கோவிந்தராஜ் (மேட்டூர்) 2. நிர்மல்குமார் (கோவை)
3. கேப்டன் அண்ணாதுரை (குமாரபாளையம்) 4. மனோகரன் (திருச்சி)
5. திருவேங்கடம் (பேராவூரணி). 6. இராமர் (கடுவனூர்)
கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
08.09.2025
பெரியார் முழக்கம் இதழ் 11092025
