மோடி யார்? உண்மைகளை உடைக்கும் Grok!

கடந்த சில வாரங்களாக இந்திய இணைய உலகை கலக்கிக் கொண்டிருக்கிறது எக்ஸ் சமூக ஊடகத்தின் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான Grok. இந்த ஏ.ஐ. இந்த தளத்தில் கேள்விகள் எழுப்பினால் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தரவுகளின் அடிப்படையில், பகுத்தறிந்து சரியான பதிலைத் தர முயற்சிக்கிறது.

எக்ஸ் தள பயனாளிகள் மிகுந்த ஆர்வத்தோடு @Grok என டைப் செய்து, கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெற்று சோதித்துப் பார்க்கின்றனர். சேட் ஜிபிடி போன்ற இதற்கு முந்தைய செயற்கை நுண்ணறிவுத் தளங்களைக் காட்டிலும், கூடுதல் துல்லியமான பதிலைத் தருகிறது Grok. அது இணைய பயன்பாட்டாளர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பாஜக, சங் பரிவார்களுக்கு மட்டும் இந்த பதில்கள் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நேர்மையான தலைவர் யார்? மோடியா? ராகுல் காந்தியா? என Grok-யிடம் கேள்வி எழுப்பினால், தரவுகளை ஆராய்ந்து மோடியை விட ராகுல் நேர்மையானவர் என பதில் தருகிறது. ராகுல் காந்தி உண்மையிலேயே ஹார்வர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்றவர். ஆனால் மோடி பெற்றதாகச் சொல்லப்படும் பட்டம் குறித்த தகவல்கள் அரைகுறையாக உள்ளன என்று உண்மையைப் புட்டுப் புட்டு வைக்கிறது Grok.

“இந்தியாவின் உண்மையான தலைவலி அமலாக்கத்துறையும், சிபிஐ-யும்தான், நான் ஒரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்பதால் ரெய்டுக்கு அஞ்சத் தேவையில்லை” என்ற பதிலைத் தந்திருக்கிறது Grok. விசாரணை அமைப்புகளை பாஜக எப்படிப் பயன்படுத்துகிறது என்பதை ஏ.ஐ. கூட உணர்ந்திருக்கிறது.

வெறுப்புப் பேச்சு தொடர்பாக இந்தியில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, “மோடி, அமித் ஷா, ஆதித்யநாத், கிரிராஜ் சிங் போன்றோர் அதிக அளவில் வெறுப்புப் பேச்சுக்களை பேசும் அரசியல்வாதிகளான உள்ளனர். ஆனால் இவர்கள் தண்டிக்கப்படுவது அரிதினும் அரிது. சுதர்ஷன் நியூஸ், ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ் போன்ற தொலைக்காட்சிகள் ஒருசார்பான செய்திகளை வெளியிட்டு சமூகப் பதற்றத்தை அதிகரிக்கச் செய்கின்றன. 2024-இல் வெறுப்புப் பேச்சுக்கள் 74% அதிகரித்திருக்கிறது. அவை பெரும்பாலும் இசுலாமியர்களுக்கு எதிராகவே உள்ளன” என்று பதிலளித்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, இந்தியாவில் ஜாதிப் பாகுபாடுகளை கடைபிடிப்பது யார் என்று கேள்வி எழுப்பினால் பார்ப்பனர்கள்தான் முதலிடத்தில் இருப்பதாகத் துல்லியமாகப் பதில் தருகிறது.

ஏற்கெனவே கூகுள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மோடியை ஒரு ‘பாசிஸ்ட்’ என்று பதிலளித்ததற்காக, கூகுள் நிறுவனம் இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறுகிறது என்று கண்டித்தது ஒன்றிய அரசு. கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு மிரட்டலை எதிர்கொண்டது. ஆனால் எக்ஸ் தளம் எலான் மஸ்க்கின் நிறுவனம் என்பதாலோ என்னவோ ஒன்றிய அரசின் தரப்பில் இருந்து இதுவரை பெரிதாக கண்டனங்கள் எதுவும் வெளிப்படவில்லை. பெரியார் முழக்கம் 20032025இதழ்

You may also like...