காதலர்களின் காவல்கோட்டை காவலாண்டியூர்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வலுவான கோட்டையாக சேலம் மாவட்டம் காவலாண்டியூர் திகழ்கிறது. பாலமலையை ஒட்டியுள்ள அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள் குடும்பம் குடும்பமாக கழகப் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடெங்கும் ஜாதி மறுப்பு காதல் திருமணம் புரிவோருக்கு அடைக்கலம் தந்து, இணையேற்பையும் நடத்தி வைக்கும் சமத்துவ மண். காவலாண்டியூரைச் சேர்ந்த தலைமைக் குழு உறுப்பினரான காவை ஈஸ்வரன் இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்திவைத்துள்ளார். இதனால் ஜாதிச் சங்கங்களின் அச்சுறுத்தல்கள், கொடுந்தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளார். ஆனால் ஒருபோதும் தனது இலட்சியத்தில் இருந்து பின் வாங்கியதில்லை. இந்த வரலாறுகள் எல்லாம் நிகழ்காலத்திலேயே ஊடக வெளிச்சம் பெற்று சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. DW சேனலில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலாண்டியூரின் செயல்பாடுகள் குறித்து மிக நேர்த்தியான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. காவை ஈஸ்வரன், ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்த இணையர்களின் நேர்காணல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. சமூக ஊடகங்களில் சிறு சிறு துணுக்குகளாக இலட்சக்கணக்கோரிடம் அந்த காணொளி சென்று சேர்ந்திருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஆக்கப்பூர்வமான ஜாதி ஒழிப்புப் பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் இது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இல்லை.
பெரியார் முழக்கம் இதழ் 11122025

You may also like...