பார்ப்பனர்கள் கூட்டத்தில் நீதிபதிக்கு என்ன வேலை?

கேரளாவில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் பங்கேற்றதைப்போல, பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டிலும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் என்ற பார்ப்பனர் பங்கேற்றுப் பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடித்துப் பேசி இருக்கிறார்.

‘பிராமண மகா சபையின் பொன் விழா’ இரண்டு நாட்கள் நடைபெற்றது. அம்மாநாட்டில் பேசிய அவர், “பிராமணர்கள் என்ற வார்த்தையை ஒரு ஜாதியாக பார்ப்பதைவிட, வர்ணாசிரம தர்மத்துடன் பார்க்க வேண்டும். வேதங்களை தொகுத்த வேதவியாசர், மீனவப் பெண்ணின் மகன்; ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இவர்களை கீழானவர்களாக பிராமணர்கள் பார்த்தது இல்லை. ஹிந்து கடவுளான ராமரின் கருத்துக்கள், நம் அரசமைப்பிலும் இடம் பெற்றுள்ளன.’’ என்று பேசியுள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நீதிபதி சிறீசானந்தா, “மக்கள் கல்வி, உணவுக்காக போராடும்போது, இதுபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சிகள் தேவையா என்று விமர்சிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளே சமூகத்தினர் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன், பிரச்சினைகள் குறித்தும் பேச வைக்கிறது,” என குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரைப் பற்றியும் பேசி இருக்கிறார் ஒரு நீதிபதி.

பாஜகவின் ஆட்சி பார்ப்பனர்களுக்குக் கொடுத்திருக்கும் துணிச்சலே, இவ்வளவு வெளிப்படையாக பார்ப்பனர்கள் சங்க மாநாடுகளில் நீதிபதிகள் பங்கேற்கக் காரணமாக இருக்கிறது. இந்த நீதிபதிகளிடம் உச்சநீதிமன்றம் இதுவரை எந்த விளக்கமும் கேட்கவில்லை. இதுபோல திராவிடர் இயக்க மேடைகளில் எதாவது ஒரு நீதிபதி பேசியிருந்தால் இந்த பார்ப்பனக் கூட்டம் அமைதியாக இருந்திருக்குமா? ஊடகங்கள் மவுனித்திருக்குமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பெரியார் முழக்கம் 13032025இதழ்

You may also like...