கடவுளின் இருப்பை உடைக்கும் கேள்விகள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(5) -விடுதலை இராசேந்திரன்

உலகத்தையே உலுக்கியது அகமதாபாத் விமான விபத்து. பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர 234 பயணிகளும் மரணமடைந்து விட்டார்கள். கடவுள் இப்படி ஒரு தண்டனையைத் தர வேண்டுமா? என்ற கேள்வியை கடவுள் நம்பிக்கையாளர்கள் எவருமே கேட்கவில்லை. காசாவில் 54,000 அப்பாவி மக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை கடவுள் ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வியையும் கடவுளை நோக்கி எவரும் கேட்கவில்லை. இஸ்ரேல் ஈரான் மீது குண்டு வீசுகிறது, ஈரான் பதிலளித்திருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக குண்டு வீசுகிறது. நாட்டில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் நான் அவதாரம் எடுத்து வருவேன் என்று கூறிய ‘கிருஷ்ண பகவான்’ ஏன் வரவில்லை என்று எந்த கீதை பக்தர்களாவது கேட்டர்களா? கேட்கவில்லை.

மாறாக என்ன நடந்தது? விமான விபத்தையும் இஸ்லாமிய எதிர்ப்புக்கு பயன்படுத்தினர். விபத்துக்குள்ளான விமானத்தை இஸ்லாமிய நாடான துருக்கியின் நிறுவனம் ஒன்று பராமரிக்கிறது. எனவே விபத்தில் இஸ்லாமிய சதி இருக்கிறது என்றார் ஒருவர். அவர்தான் சங்கிகளின் ஊது குழலான “ரிபப்ளிக்” தொலைக்காட்சியை நடத்திவரும் கோஸ்வாமி. விபத்துக்குள்ளான விமானத்தை நாங்கள் பராமரிக்கவில்லை நாங்கள் பராமரிக்க ஒப்பந்தம் போட்டிருப்பது போயிங் 777 என்ற வேறு விமானம் என்று துருக்கி நிறுவனம் உடனடியாக மறுத்தது. வாய் மூடினார் கோஸ்வாமி. விமானத்தில் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து இருந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் உயிர் தப்பினார். ஜன்னல் ஓரமாக உட்கார்ந்ததால் ஜன்னல் உடைந்து அவர் கீழே விழுந்தார் அதனால் உயிர் பிழைத்தார். ஆனால் அவர் கழுத்தில் துளசி மாலை அணிந்து இருந்ததால் உயிர் தப்பினார் என்று பொய்களைப் பரப்பினார்கள்; முகநூலில் எழுதினார்கள். உண்மையில் அவர் கழுத்தில் அணிந்திருந்தது துளசி மாலை அல்ல; உலோகத்தால் ஆன சங்கிலி.

கடவுள் கருணையால் உயிர் தப்பினார் என்ற வார்த்தையை மறந்தும் ஊடங்களோ, தலைவர்களோ எவரும் அவருக்குப் பயன்படுத்தவில்லை. அப்படியானால் இறந்தவர்களுக்கு கடவுள் கருணை காட்டவில்லையா? என்ற கேள்வி வரும் என்ற அச்சம் தான் அதற்கு காரணம்.

விமானத்துக்கு வந்து சேர்வதில் தாமதமான ஒரு பெண் கணபதி பாபா என்னை காப்பாற்றினார் என்று கூறினார். கணபதி பாபாவே இந்த விமானத்தில் பயணித்திருந்தால் அவரது கருகிபோனப் உடல் தான் கிடைத்திருக்கும்.

கடைசி நேர உரையாடலையும் கோளாறுகளையும் பதிவு செய்யும் கருப்புப் பெட்டி விமானத்தின் காணொலிகளை பதிவு செய்யும் கருவி டிவிஆர், வீடியோ இவைகள் கிடைக்குமா என்று தீவிரமாக தேடினார்கள். இதோ கிடைத்துவிட்டது, என்று உற்சாகக் குரல் கொடுத்தார் ஒருவர், அவர் பெயர் சாகர் அமீன். கிடைத்தது கருப்பு பெட்டி அல்ல, அது பகவத் கீதை நூல். நூறு டிகிரி வெப்பத்தாலும் பகவத்கீதை மட்டும் எரியாமல் தப்பியது எவ்வளவு பெரிய சக்தி என்று சிலாகித்தார்கள், முகநூலில் எழுதுகிறார்கள். கீதையின் சக்தி ஏன் கீதையை கையில் வைத்திருந்த அந்த பயணியைக் காப்பாற்றவில்லை!

உண்மையில் அந்த கீதை விமானத்தில் தான் இருந்ததா? அந்த காகித நூல் நூறு டிகிரி வெப்பத்திலும் எரியாமல் எப்படி இருந்திருக்கும்? அது எவருடைய பெட்டியில் இருந்தது? விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்ததா? எவராவது கொண்டு வந்து போட்டார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் இல்லை.

கடவுளின் சக்தியை அறிவியல் கண்டுபிடிப்புகள் கேள்வி கேட்கின்றன. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் தான் நடந்தன. ஆன்மீக பூமியாக கூறப்படும் இந்த ‘பாரதத்தில்’ உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், தீண்டாமைக் கொடுமை, ஜாதிக் கொடுமை என்பவை தான் கண்டுபிடிக்கப்பட்டன. ஒவ்வொரு விஞ்ஞான கண்டுபிடிப்பும் கடும் எதிர்ப்புகளை சந்தித்தன.

அறுவை சிகிச்சையின் போதும், பிரசவத்தின் போதும் அறுவை வலிதெரியாமல் இருப்பதற்காகப் பயன்படும் குளோராஃபார்ம் எனும் மயக்க மருந்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் யங் சிம்ஸன் சென்ற நூற்றாண்டில் கண்டு பிடித்தார். இதற்கு திருமறையில் ஆதாரமில்லையே என்று கடுமையாக எதிர்த்தார்கள் பாதிரிமார்கள். `கஷ்டத்தில் நீ குழந்தை பெறுவாய்’ எனும் பைபிளின் வாக்கியத்தைக் கொண்டு தாய்மார்கள் பிரசவத்தின் போது மயக்க மருந்து பயன்படுத்தக் கூடாது அப்போதுதான் தாய்ப்பாசம் இருக்க முடியும் என வற்புறுத்தினார்கள்.

இரத்தத்தை வகைபிரித்து, இரத்த வங்கியில் சேமிக்கப்படும் முறையினால் உலகமெங்கும் பலகோடி மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றது. மனித ரத்தம் பற்றிய ஆய்வை நடத்திய ‘குற்றத்திற்காக’ செர்வெட்டஸ் எனும் விஞ்ஞானி கழுமரத்தில் ஏற்றி உயிருடன் கொளுத்தப்பட்டார். பரமபிதாவின் புனிதம் காக்க இந்த தண்டனை வழங்கியவர் கால்வின் என்ற புராட்டஸ்டன்ட் பாதிரியார்.

தேவனின் மகிமை கூறி ஆவியெழுப்ப, விமானமேறி உலகைச் சுற்றி சுற்றி வருகிறார்கள் சுவிசேசத்தின் ஊழியர்கள். ஆனால் உலகம் உருண்டையானது, தட்டையானதல்ல, பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று சொன்ன கியார்டனே புருனோவை உயிரோடு கொளுத்தினார்கள் கத்தோலிக்க மத குருமார்கள். `வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில் இருந்து வெளியிட்டார்.

பூமியின் இயக்கத்தையும், சூரியனைச் சுற்றி வருவதையும் கண்டு சொன்ன கலிலீயோ திருச்சபையினால் சித்ரவதை செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கலிலீயோ விவிலியத்தின் உலகம் பற்றி உண்மைகளை’ ஏற்று தன் கண்டுபிடிப்புகளை மறுக்க வேண்டியிருந்தது. கலிலியோவின் தொலைநோக்கியை சாத்தானின் கருவி என்றார்கள் கிறித்தவ பாதிரிகள்.

கி.பி. 370-இல் அலெக்சாண்டிரியாவில் (இன்றைய கெய்ரோ நகரம்) அரும்பாடுபட்டு சேர்த்துவைத்த நூலகத்தையும், அருங்காட்சியகத்தையும் ஆர்ச் பிஷப் சிரில் தலைமையிலான பாதிரிப்படை சூறையாடிக் கொளுத்தியது. நூலகத் தலைவரும் பெண் விஞ்ஞானியுமான ஹைப்பேஷியாவை சித்திரவதை செய்து கொளுத்தினார்கள். விஞ்ஞானிகளை வேட்டையாடிய திருச்சபையின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் ஒரு சில துளிகள்தான் இவை. அனைத்துலக பாதிரிகளின் எண்ணிக்கையை விட அவர்கள் இழைத்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகமானதாகும்.
பெரியார் முழக்கம் 03072025இதழ்

You may also like...