தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?
தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்றே சொல்ல வேண்டும். எவ்வித அரசியல் அனுபவமோ, பயிற்சியோ இல்லாத நடிகர் விஜய் ஒரு கட்சியைத் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் நேரடியாக முதலமைச்சர் பதவியில் அமரப் போகிறார். இதற்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் பெருமளவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.
75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுக வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. முதல் தலைமுறை வாக்காளர்கள் பெருமளவு நடிகர் விஜய்க்கு வாக்குகளைக் குவித்துள்ளார்கள். நடிகர் விஜய் மக்களிடம் முன்வைத்த ஒரே கொள்கை “திமுக தீய சக்தி” என்பது மட்டுமே! இது தவிர தனது கொள்கை இதுதான் என்று ஒரு வார்த்தையைக் கூட அவர் உச்சரிக்கவில்லை. ’மாற்றம் வேண்டும்’ என்ற ஒரே கொள்கைக்காக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். எதை நோக்கிய மாற்றம் என்பது குறித்த புரிதலோ, தெளிவோ வாக்காளர்களுக்கும் இல்லை; அந்த கட்சிக்கும் இல்லை.
தமிழ்நாடு வரலாற்றில் கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்த திராவிட மாடல் ஆட்சி அடுக்கடுக்கான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. சமூகத்தில் எந்த ஒரு பிரிவினரையும் பின்தங்க விடமாட்டோம் என்ற குறிக்கோளுடன் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர். பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே தொடர்ந்து 2 ஆண்டுகள் முதல் இடத்தில் தமிழ்நாட்டை கொண்டு வந்து நிறுத்தினார். இந்த சாதனைகளை நடிகர் விஜய் மீது கொண்டிருந்த திரைக் கவர்ச்சி தோற்கடித்திருப்பது என்பது பெரும் அவலம்!
மதச்சார்பற்ற முற்போக்கு அணி 1 கோடியே 54 இலட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகளை பெற்று 73 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. தவெக 1 கோடியே 72 லட்சத்து 25 ஆயிரத்து 782 வாக்குகளை பெற்று 108 இடங்களை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 17 லட்சத்து 43,000; அதாவது 3.5 விழுக்காடு மட்டுமே.
பாஜகவுடன் கூட்டணி அமைத்த அஇஅதிமுக 27.4 விழுக்காடு ஓட்டுடன் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் தவெக திராவிட கட்சிகளின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் அஇதிமுக அணிக்கே பாதிப்புகள் அதிகம்.
திமுக, அதிமுக அணிகளே தமிழ்நாடு அரசியலில் மாறி மாறி ஆட்சியைப் பிடித்தவர்கள். இப்போது முதல் முறையாக இரண்டு கட்சிகளும் இல்லாத `தமிழக வெற்றிக் கழகம்’ ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனாலும் பெரியார், அம்பேத்கர் தங்களின் கொள்கைத் தலைவர்கள் என்று விஜய் கூறுகிறார். அவர்களின் படங்கள் மாநாட்டு மேடைகளில் அலங்கரிக்கப்படுகின்றன. பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையைத் தவிர ஏனைய கொள்கைகளை ஏற்பதாக கட்சியின் பேச்சாளர்கள் அவ்வப்போது கூறுகிறார்கள். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது கட்சியின் முழக்கமாக இருந்தாலும் பிறப்பு பாகுபாடுகளை உறுதிப்படுத்தும் பகவத்கீதை கட்சியின் தொடக்க விழா மேடையில் உருவகப்படுத்தப்பட்டது.
இரண்டு பார்ப்பனர்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். பார்ப்பனர்கள் தங்களின் ஒரே எதிரியாக திமுகவை மட்டுமே பார்க்கிறார்கள். எனவே திமுகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு பார்ப்பனர்கள் ஆதரவு தந்து வருகிறார்கள். மயிலாப்பூரில் பார்ப்பன வாக்குகள் இதுவரை அவர்கள் ஆதரித்து வந்த பாஜகவுக்கு வரவில்லை. மாறாக தவெக வேட்பாளராக நிறுத்தப்பட்ட வெங்கட ரமணன் என்ற பார்ப்பனருக்கு விழுந்துள்ளது. அவரே வெற்றி பெற்று இருக்கிறார். பாஜக வேட்பாளரான தமிழிசை 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். தற்போதைய அரசியல் சூழலில் தமிழ்நாட்டில் உறுதியாக பாஜக எதிர்ப்புக் கொள்கை கொண்ட ஒரே கட்சி திமுக மட்டும்தான்! அஇஅதிமுக பாஜகவில் கரைந்து விட்டது. இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் விஜய் கட்சி ஒன்றிய ஆட்சி எதிர்ப்பில் பதுங்கிக் கொள்கிறது. தேர்தல் பரப்புரையில் நடிகர் விஜய் ஒன்றிய ஆட்சியை சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்று கேள்வி கேட்டு நழுவி விட்டார். திமுகவை வீழ்த்தத் துடிக்கும் பார்ப்பன சக்திகள் விஜய் கட்சியை பாஜகவின் பக்கம் திருப்புவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். விஜய்க்கு நெருக்கமான நண்பரான திரிஷா என்ற பார்ப்பன நடிகை தவெக ஆட்சியில் அதிகார மையமாக உருவெடுக்கும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
முழுமையான எண்ணிக்கை கிடைக்காத நிலையில் அக்கட்சி ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் முடிவுக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து தனது ஆதரவுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு த.வெ.க -வுக்கு தரக்கூடும். அப்படி ஒரு நிலை வந்தால் அதை ஆதரிக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு!
தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாட்டுக்கும் தான் என்று மு.க.ஸ்டாலின் தெளிவாக தேர்தல் களத்தில் அறிவித்தார்.
முதன்மையான எதிரி பாஜகதான் என்று சரியான கொள்கை நிலைப்பாட்டை முதல்வர் எடுத்தார். அந்தப் பார்வையில் தமிழ்நாட்டில் இப்போது வந்துள்ள புதிய ஆட்சியை பாஜகவின் ஆதரவு சக்தியாக மாற்றி விடாமல் தடுக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே இந்த ஆட்சி பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் போய்விடாமல் பாஜக எதிர்ப்பு கொள்கையை உள்ளடக்கிய காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு செயல்பட வைப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். இதுவே முதன்மை எதிரிகளை தமிழ்நாட்டில் இருந்து விலக்கி வைக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கக்கூடிய அணுகுமுறையாக இருக்கும்.
விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றால் பாஜகவை நோக்கி திரும்பவிடாமல் ஆட்சியைத் தடுக்கக்கூடும். இது திமுக கூட்டணிக்கு சந்தர்ப்பவாதம் அல்லவா? என்ற கேள்விக்கு நமது பதில் சந்தர்ப்பவாதம் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தப்படலாம் என்பதுதான்.
தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 27 இடங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. அதன் தலைவர் நயினார் நாகேந்திரன் தோற்றுவிட்டார். தமிழிசை வானதி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் உட்பட 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பெரியார் கொள்கைகளை குழிதோண்டி புதைப்பேன் என்று கடப்பாரையைத் தூக்கிய நாம் தமிழர் என்ற சீமான் கட்சி துடைத்தெறியப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் அக்கட்சி டெபாசிட் இழந்துள்ளது. சீமான் டெபாசிட்டை பறிகொடுத்து இருக்கிறார். கடந்த தேர்தலில் 8% விழுக்காடு வாக்குகளைப் பெற்று கட்சிக்கு அங்கீகாரம் பெற்றிருந்த சீமான் இப்போது 4% விழுக்காடு வாக்குகளை பெற்று கட்சியின் அங்கீகாரத்தையும் இழந்து நிற்கிறார்.
இத்தகைய தமிழ்நாடு அரசியல் சூழலில் இளைய தலைமுறையினரிடம் சமூக,அரசியல் கருத்துகளை எடுத்துச் செல்ல வேண்டிய தேவையையும் அவசியத்தையும் இந்த தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்திக் காட்டுகின்றன. அந்த இயக்கத்தை வீரியமாக முன்னெடுக்க திட்டங்களைத் தீட்டி களமிறங்க உறுதியேற்போம்!
தற்போதைய நிலையில் பாஜகவை எதிர்க்கும் அணிகள் தவெகவுக்கு ஆதரவு வழங்கினால் பாஜக ஊடுருவலை விலக்கி வைக்க முடியும்.
பெரியார் முழக்கம் இதழ் 07052026
