கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு ஒன்றிய அரசு அலுவலகங்களில் வடநாட்டார் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் வட நாட்டு அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அதை எதிர்த்துப் போராட வேண்டுமென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியார் பிறந்தநாள் விழாவில் அறிவித்தார்.
அன்றே பெரியார் எச்சரித்தார்! பறிபோகும் மாநில உரிமைகள் என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பேசியக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பறிக்கப்படும் மாநில உரிமைகளைப் பட்டியலிட்டார். தன்னாட்சிக் குரல் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலேயே தொடங்கிவிட்டது. பெரியார் சுதந்திர நாளை துக்கநாள் – பார்ப்பனிய பனியாக்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்ட நாள் என்றார். தமிழ்நாடு விடுதலையே ஒரே தீர்வு என்றார். அண்ணா தென்னக மாநிலங்களின் கூட்டமைப்பைக் கொண்ட “திராவிட நாடு” கேட்டார். அரசியலுக்காக அதைக் கைவிட்ட போது கோரிக்கை கைவிடப்படுகிறது. ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே நீடிக்கிறது என்றார். இப்போது மாநில உரிமைகளுக்காகத்தான் நாம் போராட வேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் அதிகாரிகளாக இந்தி பேசும் வடநாட்டுக்காரர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை நாம் எதிர்த்தாக வேண்டும். வட நாட்டில் இருந்து வரும் தொழிலாளர்களை நாம் எதிர்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில் வர்ணாசிரமம் தமிழர்களுக்கு எதிரானது. நமது தமிழர்களின் நெறி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவ நெறி. அடக்கப்பட்ட மக்களை மேலே உயர்த்துவது தான் நமக்கான தர்மம். தங்களை மேலாதிக்கத்தில் நிறுத்திக் கொண்டு மக்களை அடிமைப்படுத்துவது வர்ணாசிரம தர்மம். இந்தக் கருத்தியல் போர் தொடர்ந்து நடந்து வருகின்றது. நாம் தொடர்ந்து அந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
விடுதலை இராசேந்திரன்
பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தனது உரையில் இந்திய அரசியலில் மய்யமாக பெரியாரின் வகுப்புரிமை, தன்னாட்சி, மதவாத எதிர்ப்புக் கொள்கைகள் தான் இருக்கின்றன. ஒருகாலத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்த காங்கிரஸ் இன்று சமூகநீதிக்கான போராட்டக் களத்தில் முன் வரிசையில் நிற்கின்றது. ஏராளமான இளைஞர்கள் பெரியாரியலை நோக்கி வருகிறார்கள். முகநூல்களில் பார்ப்பன இந்துத்துவாவை கிழித்தெறிகிறார்கள். பெண்கள் தங்கள் உரிமைகளின் அடையாளமாகப் பெரியாரை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இளைய தலைமுறையின் எழுச்சியை நாம் மேலும் வளர்த்தெடுக்க செயல் திட்டங்களை உருவாக்கும்வோம் என்று குறிப்பிட்டார்.
கூட்ட நிகழ்ச்சி
பொதுக்கூட்டம் 21.09.2024 அன்று இராயப்பேட்டை வி.எம்.தெருவில் திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் இராஜேசு தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக அஜந்தாவில் உள்ள அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்து வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் வரை பறை இசை முழங்க பேரணியாக வந்து அங்கிருந்த பெரியார் சிலைக்கு கழகப் பெண்கள் மாலை அணிவித்தனர்.
முதலில் இசைப்போர் குழுவின் பறை இசை ஒலித்தது. தொடர்ந்து புதுவை விடுதலைக் கலைக் குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மனிதி அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதேவி ஆணவக்கொலைகளை எதிர்க்கும் நாடகத்தை உணர்ச்சியுடன் நிகழ்த்தினார்.
பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாண்புமிகு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்வை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தொகுத்து வழங்கினார்.
கழக மாணவரணியான “தமிழ்நாடு மாணவர் கழகத்திற்கான” கொடியைக் கழகத் கொளத்தூர் மணி, மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் அறிமுகப்படுத்தினார்கள்.
பொதுக்கூட்டத்திற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக உழைத்தத் தோழர்களுக்கு பயனாடை அணிவித்து கேடயம் வழங்கப்பட்டது.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 26.09.2024 இதழ்