விநாயகர் சதுர்த்தி அத்துமீறலைத் தடுக்க வேண்டும்! கழகம் சார்பில் காவல்துறைக்குக் கோரிக்கை!
விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களைத் தடுக்கக் கோரி கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனு அளிக்கப்பட்டுவருகிறது.
சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலிப் பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்டு அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 20.08.2024 அன்று சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் சென்னை மாவட்டக் கழக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கோவை: விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைகளைத் துளியும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் இவ்விழாவினை அரசு உரிய முறையில் கண்காணிக்க வேண்டுமெனவும், பிளாஸ்டர் பாரிஸ் சிலைகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளிடக்கிய மனு ஒன்றினை 20.08.2024 அன்று கோவை மாவட்டக் கழக சார்பில் கோவை மாநகரக் காவல் ஆணையர், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆணையர் உள்ளடக்கிய துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
தேனி: விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் இந்து முன்னணிக் கும்பல்கள் நீதிமன்ற உத்தரவுகள், அரசாணைகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவதைக் கண்காணித்து அவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தேனி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது
இந்நிகழ்வில் தி.வி.க. மாவட்ட அமைப்பாளர் தேனிராயன், பெரியார் சிவா, காளியப்பன், தமிழரசி, சோலையம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலம் : விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரி 21.08.2024 அன்று சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வெற்றிமுருகன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், வெள்ளார் சிவ சண்முகம், அருள்பாண்டியன், இளம்பிள்ளை கோபி, நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 29.08.2024 இதழ்