பழனி கோயிலைப் பார்ப்பனர்கள் அபகரித்தது எப்படி? முருகன் மாநாட்டில் 3,000 நூல்கள் வழங்கி கழகம் பரப்புரை

தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அம்மாநாட்டில் கழக இணையதளப் பிரிவு வெளியிட்ட “பழனி கோயில் வழிபாட்டு உரிமையைப் பறித்தப் பார்ப்பனர்கள்” என்ற நூல் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என்று திண்டுக்கல் மாவட்டக் கழகம் அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் மருதமூர்த்தி பழனி காவல்துறையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டார். கைதுக்கு அஞ்சாத கழக செயல்வீரர்கள், ஏற்கனவே திட்டமிட்டபடி காலை 7 மணி முதலே பழனி ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நூல்களை இலவசமாக வழங்கினர். மாநாடு நடைபெற்ற பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் நூல்களை விநியோகம் செய்வதற்காகச் சென்ற திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் மாக்சிம் கார்க்கி, மாவட்ட அமைப்பாளர் ராஜா ஆகிய இருவரையும் பழனி காவல்துறையினர் கைது செய்தனர்.
மற்றொருபுறம் கழகச் செயல்வீரர்களான கபாலி, பெரியார், சங்கர், ஆயுதன், ஜெயசங்கர் உள்ளிட்டோர் 3,000க்கும் மேற்பட்ட நூல்களைப் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தனர். பின்னர் அவர்கள் ஐவரையும் பழனி காவல்துறை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனையறிந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதனையடுத்து பிற்பகல் 2:30 மணியளவில் தோழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
“பழனி கோயில் வழிபாட்டு உரிமையைப் பறித்தப் பார்ப்பனர்கள்” என்ற நூலை விநியோகம் செய்ததற்காகத் திண்டுக்கல் மாவட்டக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் தங்களது சமூகவலைதளப்பக்கங்களில் தோழர்கள் மீதான தடுப்புக்காவல் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டக் கழகத் தோழர்களின் துணிச்சலும், களப்பணியும் பலராலும் பாராட்டப்பட்டது.

பெரியார் முழக்கம் 29.08.2024 இதழ்

You may also like...