கழகத் தலைமையகத்தில் குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் திறந்துவைத்தார்!

சென்னை : திராவிடர் விடுதலைக் கழகத்தின் 13ஆவது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு 12.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் “குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகம்” திறக்கப்பட்டது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், நூலகத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் கருஞ்சட்டைப் பதிப்பக இயக்குனர் பெல் இராசன் சிறப்புரையாற்றினார். அவர் குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத்திற்காக சுமார் 15,000/- மதிப்புள்ள 96 நூல்களை வழங்கியதுடன் கணினி வாங்குவதற்காக நன்கொடையாக ரூ.25,000/-யை கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கினார்.
நிறைவாகக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், விழாப் பேருரை யாற்றினார்.
கூட்டத்தை ஒருங்கிணைந்தச் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி ஒருங்கிணைத்தார்.
இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் மற்றும் கழக மாவட்ட – பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள், தோழமை இயக்கத்தினர், பதிப்பாளர்கள், வாசகர்கள், கழகத் தோழர்கள் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகம் உருவாவதற்காக உழைத்த கழகத் தோழர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

நன்செய் பதிப்பகம் கவிஞர் தம்பி மற்றும் கருப்பு பிரதிகள் கருப்பு நீலகண்டன் ஆகியோர் தலா 5000/- மதிப்புள்ள நூல்களை வழங்கினர். மேலும் திமுக ஓ.சுந்தரம் கழகத் தோழர்கள் லீலாவதி, தினகரன், உள்ளிட்டோரும் ஆய்வு நூலகத்திற்கு நூல்களை வழங்கினார்கள்.
‘குடிஅரசு’ நூற்றாண்டு ஆய்வு நூலகம் திறப்பு!
தமிழ்ச் சமூகத்தின் போக்கைப் புரட்டிப் போட்ட இதழ்களில் ஒன்று குடிஅரசு நூற்றாண்டு ‘குடிஅரசு’. பெரியாரின் ஆய்வு நூலகம் பேராயுதமான இந்த இதழின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் வேளையில், திராவிடர் விடுதலைக் கழகம் ‘குடி அரசு நூற்றாண்டு ஆய்வு நூலகம்’ ஒன்றை சென்னையில் அமைத்துள்ளது. மயிலாப்பூர், 95, நடேசன் சாலையில், அம்பேத்கர் பாலம் அருகில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், இந்த ஆய்வு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் சமீபத்தில் இந்த நூலகத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.
‘திராவிடம்’, ‘பெரியாரியம்’, ‘அம்பேத்கரியம்’, ‘மார்க்சியம்’, ‘சூழலியல்’, ‘வரலாறு’, ‘சட்டம்’ எனப் பல்வேறு தலைப்புகளில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமாக நூல்கள் இடம்பெற்றுள்ளன. திராவிட இயக்கம் குறித்த ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையிலான ஆவண நூல்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. திராவிட இயக்கம் குறித்த விமர்சனங்கள், அவதூறுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலான நூல்கள் சேகரிக்கப்பட்டு, ஒரே இடமாக கொண்டுவரப்பட்டுள்ளதால், இந்த நூலகம் சிறப்புப் பெறுகிறது.
பொதுமக்கள் பயன்பாட்டுக்கான நூலகமாக இருந்தாலும், உறுப்பினராகவும் சேரலாம். வாரத்தின் 7 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நூல்களை எடுத்து வாசிக்கலாம். திராவிட இயக்கத்தின் அறிவுப் பங்களிப்புகளில் நூலகம், வாசிப்பு இயக்கங்கள் பெரும் பணியாற்றியவை. அந்த வகையில், நூற்றாண்டு கண்ட இதழ் பெயரில், அமைக்கப்பட்ட நூலகம், தலைநகரில் கருத்தியல் கருவூலமாகத் திகழட்டும்.
நன்றி: முரசொலி 15.08.2024

பெரியார் முழக்கம் 15.08.2024 இதழ்

You may also like...