கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்
ஈரோடு தெற்கு : 17.09.2018 பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
காலை, ஈரோடு ப.செ. பூங்கா பெரியார் சிலை வளாகத்திலுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின் தி.க., த.பெ.தி.க., தி.வி.க. அமைப்புகளின் சார்பாக நூற்றுக்கணக்கான தோழர்கள் ஊர்வலமாக பெரியாரின் இல்லத்தை அடைந்து அங்கும் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின் தி.வி.க. ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
இரு சக்கர வாகன ஊர்வலத்தில் கருஞ்சட்டை தோழர்கள் பெரியாரை வாழ்த்தி முழக்கமிட்டபடி சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர். இறுதியாக சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாகன பேரணியை நிறைவு செய்தனர். இந்நிகழ்வில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
கீழப்பாவூர் : நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் விழாவை குடும்ப விழாவாக 30.09.2018 அன்று கீழப்பாவூரில் நடைபெற்றது. கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு தூத்துக்குடி மாவட்டப் பொருளாளர் சந்திரசேகர் இணையர் அனிதா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நெமிலி : திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நெமிலியில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட அமைப்பாளர் திலீபன் கலந்து கொண்டு நெமிலி பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மேற்கு : காலை 9 மணிக்கு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜ் தலைமையில் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் இரு சக்கர வாகனப் பேரணியும், கொடியேற்று தல் நிகழ்வும் நடை பெற்றது.
மேட்டூர் பகுதியில் கொடியேற்றிய தோழர்கள் விவரம்: காவேரி கிராஸ் பெரியார் படிப்பகம் – சுந்தரம், நாட்டாமங்கலம் – 1. காளியப்பன், தூக்கணாம்பட்டி – கணேஷ், காவேரி நகர் – வேணுகோபால், புதுக்காலனி – காவை ஈசுவரன், சிறிய பூங்கா – சூரிய குமார், பெரியார் நகர் – ரவி, வீரபாண்டிய கட்டபொம்மன் நகர் – கதிரேசன், பாரதி நகர் – அ. மாதையன், பொன்னகர் – பாஸ்கர், குமரன் நகர் – சு.குமரப்பா, ஒர்க்ஷாப் – ஆனந்தன், அரசு மருத்துவமனைப் பகுதி – சி. கோவிந்தராஜ், தந்தை பெரியார் பேருந்து நிலையம் – மே.கா.கிட்டு, பெரியார் படிப்பகம் – செ. மார்ட்டின்.
மாலை 4 மணிக்கு 4 ரோட்டிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. 2 பறை இசைக் குழுக்கள் மற்றும் தோழர்கள், குழந்தைகள், பெண்கள் பெருமளவு கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பெரியாரின் பிறந்த நாள் பதாகைகளைத் தோழர்கள் கொண்டு வந்தனர். நகரம் முழுவதும் பெரியாரைப் பற்றிய துண்டறிக்கைகள் 1000 விநியோகிகப்பட்டது. மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.
ஊர்வல நிகழ்வில் காவை, கண்ணாமூச்சி, தார்காடு, தண்டா, நங்கவள்ளி, ஆர்.எஸ்., காவேரி கிராஸ், மேட்டூர் நகரத் தோழர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலப் பாதையில் உள்ள கடைகளி லிருந்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஊர்வல முடிவில் தோழர்கள் அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.
கொளத்தூர் : கொளத்தூரில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமையில் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
கழகக் கொடியேற்றியோர் விவரம்: சோதனை சாவடி-சுதா, பெரியார் பேருந்து நிலையம் – சீமா, வடக்கு ராஜ வீதி – நல்லதம்பி, திருவள்ளுவர் நகர் – சுப்பிரமணி, உக்கம் பருத்திக்காடு – சித்ரா, தார்க்காடு – குமார், இலக்கம்பட்டி – மந்திரி, நீதிபுரம் – சக்தி.
வாகனப் பேரணியில் பொது மக்களுக்கு துண்டறிக்கைகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.
சேலம் கே.மோரூர் : தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழாக் கூட்டம் சேலம் ஓமலூர் அருகே உள்ள கே.மோரூரில் கடந்த 23.09.2018 அன்று மாலை நடைபெற்றது.
முதல் நிகழ்வாக முனைவர் சுந்தரவள்ளி புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு பறை முழக்கத்தோடு மாலையிட நிகழ்வு தொடங்கியது. டி.கே.ஆர் பறையிசைக் குழுவினரின் ஆதிப் பறையிசை , கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பகுதி பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக காவை இளவரசனின் மந்திரமா ? தந்திரமா? நிகழ்ச்சியின் மூலம் மூடநம்பிக்கை மற்றும் போலிச் சாமியார்களின் முகத்திரையை கிழித் தெறிந்தார். சிறுவர்கள் மிகவும் கலகலப்புடன் இந்நிகழ்வை சற்றும் நகராமல் கண்டனர்.
புலவர். மாணிக்கம் முன்னிலையில் விடுதலை. ஜான் (விசிக தொண்டரணி செயலாளர்) வரவேற் புரை வழங்க, கழக செயற்பாட்டாளர் இரண்யா தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது.குமரேசன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். முனைவர் சுந்தர வள்ளி சிறப்புரையாற்றினார். கருப்பும், சிவப்பும், நீலமும் காலத்தின் கட்டாயம் என்பதை மக்கள் மத்தியில் அவருக்கே உரிய வார்த்தை வீச்சுகளின் மூலம் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் என மக்களுக்கு விளங்கும் வகையில் எடுத்துரைத்தார். இறுதியாக முருகன் நன்றியுரை கூற நிகழ்வு சிறப்பாக முடிந்தது. கழக செயற்பாட்டாளர் இரண்யாவின் சொந்த கிராமம் அது. அவரே முன்னின்று அனைத்துக் கூட்ட ஏற்பாடுகளையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் : தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்ற வாரம் மழையின் காரணமாக விடுபட்ட இடங்களான சந்தை பேட்டை, தென்னம்பாளையம், குளத்துப் பாளையம், முருகம்பாளையம், இடுவம்பாளையம், வீரபாண்டி பிரிவு ஆகிய இடங்களில் 30.9.2018 அன்று கொடியேற்று விழா நடைபெற்றது. தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை கொடியேற்றி கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பெரியார் முழக்கம் 04102018 இதழ்