நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஈரோடு செயலவைக் கூட்டத்தில் தீர்மானம்
21.03.2024 வியாழன் அன்று ஈரோடு, கே.கே.எஸ்.கே மகாலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
இந்தியாவில் நடப்பது அரசியல் போராட்டம் அல்ல: ஆரிய திராவிடப் போராட்டம் என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்றது என்று அறிவிக்கப்பட்ட போது இது சுதந்திரம் அல்ல; பார்ப்பன பனியாவுக்கு அதிகாரத்தை மாற்றும் நாள் என்பதே பெரியாரின் நிலைப்பாடு. பெரியார் எச்சரித்த அந்த போராட்டம் தான் எதிர்வரும் தேர்தல் களத்தில் மைய கருத்தியலாக உருப்பெற்று இருக்கிறது. ஆரியம், சனாதனம் என்ற முகமூடியுடன் களத்திற்கு வந்துள்ளது. திராவிடம் தனது உண்மையான அடையாளத்தோடு சனாதனத்தை எதிர்கொண்டு வருகிறது. திராவிட சனாதன (பார்ப்பனியம்) முரண்பாடுகள் கூர்மை அடைந்து வருகின்றன. கோடான கோடி விளிம்பு நிலை இந்து மக்கள் சனாதனம் சுமத்திய சுரண்டல் அநீதிகளுக்கு பலிகடாவாக்கப்பட்டனர். இதை நேர் செய்வதற்கு சமூக நீதி, அதிகார பங்கீடு, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, மாநில உரிமை, மொழி ஆதிக்க எதிர்ப்பு, வேத மதம் சுமத்திய பண்பாட்டு இழிவுகளுக்கு எதிர்ப்பு என்ற கொள்கைகளை திராவிடம் தனது கொள்கை கவசம் ஆக்கிக் கொண்டு வாளும் கேடயமாக களத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறது. ஒரு காலத்தில் பார்ப்பனிய பிடிக்குள் சிக்கியிருந்த காங்கிரஸ் கட்சி வரலாறுகளில் இருந்து பெற்ற பாடங்களை கருத்தில் கொண்டு திராவிட கொள்கைகளோடு நெருங்கி வருவது திராவிடத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஏற்காத காரணத்தால் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். மண்டல் பரிந்துரையை காங்கிரஸ் கட்சி அமல்படுத்த மறுத்தது. அதே காங்கிரஸ் இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும், இட ஒதுக்கீடு 50% மேல் இருக்கக்கூடாது என்ற உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும், விளிம்பு நிலை பெண்களுக்கு வருடம் ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை என்று தனது கொள்கைப் பாதையை திராவிட இயக்க திசைவழியில் மாற்றிக் கொண்டுள்ளது. நீட் எதிர்ப்பிலும் மாநில உரிமைகளிலும் காங்கிரஸ் தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளதோடு ஆர்எஸ்எஸ் தத்துவத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார் ராகுல் காந்தி. பம்பாயில் நடந்த நீதி பயண நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி இந்து தர்மத்தில் ‘ஒரு அதிகார மையம்’ சக்தியுடன் செயல்படுகிறது. அதன் முகமூடியாக மோடி செயல்படுகிறார். எங்களுடைய போராட்டம் பாஜக என்ற கட்சிக்கு எதிரானது அல்ல; அந்த அதிகாரத்துக்கு எதிரானது என்று பிரகடனம் செய்திருப்பதை சுட்டி காட்டியாக வேண்டும்.
தமிழ்நாட்டில் அடுக்கடுக்கான சாதனைகளை நிகழ்த்தி வரும் திராவிட மாடல் ஆட்சி பல மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. சமூகத்தின் சரி பாதி எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்கான விடுதலைக்கு உரத்து குரல் கொடுத்த தலைவர் பெரியார், சுயமரியாதை இயக்க மாநாடுகளில் பெரியார் நிறைவேற்றிய தீர்மானங்கள் திராவிட ஆட்சியில் செயல்வடிவம் பெற்றன. பெண்களுக்கான குடும்ப சொத்துரிமைக்கு முதன்முதலாக சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். அதற்குப் பிறகுதான் நாடாளுமன்றமே அதை சட்டமாக்கியது. நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சத்துணவு திட்டம், காமராசர் ஆட்சியில் மதிய உணவு திட்டமாகி எம்ஜிஆர் ஆட்சியில் சத்துணவு திட்டமாக உருவெடுத்து கலைஞர் ஆட்சியில் மேலும் செம்மைப் படுத்தப்பட்டது. அந்த திட்டத்தை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்டு அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த பரிந்துரைத்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்திய பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, கல்லூரிக்கு செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், கட்சிகளைக் கடந்து பல்வேறு மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மருத்துவ உயர்ப்பட்ட படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ஒன்றிய பாஜக ஆட்சி மறுத்தபோது சட்டப் போராட்டம் நடத்தி அனைத்து மாநிலங்களுக்கும் அந்த உரிமையைப் பெற்று தந்த பெருமை தமிழக முதல்வருக்கு உண்டு. பழங்குடி மக்கள் தங்களுக்கான அரசு திட்டங்களின் பயன்களை பெற முடியாமல் தவித்தனர். மத்திய அரசு திட்டங்களுக்கும் மாநில அரசு திட்டங்களுக்கும் தனித்தனியாக சட்டங்கள் இருந்ததால் அதை ஒரே சட்டமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இப்போது அதை நிறைவேற்றி பழங்குடியினர், சீர் மரபினர் நீண்ட நாள் கோரிக்கையை தீர்த்து வைத்துள்ளார் தமிழக முதல்வர். நீண்ட நாள் முடங்கி கிடந்த அரசு தேர்வாணையம் இப்போது இலட்சக்கணக்கான பதவிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தேர்வுகளை நடத்துகிறது. தொழில் வளம் பெருக அந்நிய முதலீடுகள் தமிழகத்தில் கொண்டு வந்து சேர்க்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கியதோடு ஒடுக்கப்பட்ட சமூகத்து பெண்களையும் ஓதுவார்களாக நியமித்து சமுதாயப் புரட்சி நிகழ்த்தியுள்ளது. பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாகவும், அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்துள்ளது. இவை அனைத்துமே சனாதனத்துக்கு எதிரான திராவிடத்தின் சாதனைகள்.
பத்தாண்டு கால பாஜகவின் ஒன்றிய ஆட்சி என்ன செய்தது. அதன் தாய் சபையான RSS பேசும் இந்து ராஷ்டிரத்தை நோக்கி நாட்டை இழுத்து செல்கிறது. மதச்சார்பின்மையை குழி தோண்டி புதைக்கிறது. இவர்கள் பேசும் இந்து ராஷ்டிரம் என்பது இந்து மதத்தில் அடக்கப்பட்டுள்ள கோடான கோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு ஆனது அல்ல; மாறாக பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் இந்துராஷ்டிரமாகும்.
அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதச்சார்பற்ற நாட்டை, மதவாத நாடாக மாற்ற வேண்டும் என்றால் அதற்கு ஜனநாயகமும் ஜனநாயக நிறுவனங்களும் தடையாக நிற்கின்றன. எனவே அந்த அமைப்புகளை சீர்குலைத்து ஒற்றை சர்வாதிகார தலைமையின் கீழ் கொண்டுவரும் உறுதியான முடிவை நோக்கி பாஜக காய்களை நகர்த்துகிறது. அதன் செயல்பாடுகளைக் கொண்டு இதை உறுதிப்படுத்த முடியும்.
முப்படைக்கும் மூன்று தளபதிகள் இருந்ததை மாற்றி ஒரே தளபதியின் கீழ் கொண்டு வந்து விட்டனர். நாடு முழுவதும் ஒரே கட்டத்தில் தேர்தல்; நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கை; ஒரே வரிக் கொள்கை; நாடாளுமன்றம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அரசு நிறுவனங்களின் கட்டமைப்புகள் ஆகியவற்றின் சீர்குலைப்பு, பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்து பார்ப்பனியத்திற்கு சேவை செய்யும் அதானி, அம்பானிகள் இடம் கையளித்தல், அமலாக்கத்துறை, புலனாய்வுத் துறை, வருமானவரித் துறைகளை எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும் தொழில் நிறுவனங்களை மிரட்டி கோடி கோடியாக கட்சிக்கு நிதி திரட்டவும் பயன்படுத்துதல், ஊடகங்களை மிரட்டி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல், பணிய மறுக்கும் ஊடகவியலாளர்களை அடக்குமுறை சட்டத்தில் பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ளுதல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களைப் புறக்கணித்தல், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குதல், குடியுரிமை சட்டத்தில் மத பாகுபாடுகளை திணித்தல், இந்தியாவின் அடையாளம் இந்து மதம், இந்தியாவின் ஒரே கடவுள் ராமன் என்ற மதவெறி பிம்பத்தை கட்டமைத்தல், சனாதன பார்ப்பனீயத்திற்கு உடன்படாத பகுத்தறிவாளர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த நெறியாளர்களை இந்து விரோதிகளாகவும், தேச விரோதிகளாகவும் சித்தரித்தல் போன்ற அடுக்கடுக்கான அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டு வருகின்றன. சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவின் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், அடக்குமுறை கொள்கைகள், வெறுப்புப் பேச்சுகளை அம்பலப்படுத்தினாலும் நாடு வளர்ந்து வருகிறது என்று உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை கட்டமைத்து வருகிறது. எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் பாஜகவின் கைப்பாவையாக மாறி சட்ட விரோதமாக ஆட்சிகளை முடக்கி செயல்பட விடாமல் தடுத்து வருகிறார்கள். மாநில அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் தருவதில்லை. உயர்கல்வி நிறுவனங்களில், ஒன்றிய ஆட்சி அலுவலகங்களில், அமைச்சரவை செயலகங்களில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டில் பாதி அளவு கூட நிரப்பப்படவில்லை. கோரிக்கைகள் எதுவும் முன் வைக்காமலேயே உயர் சாதி ஏழைகளுக்கு நான்கே நாட்களில் தனி இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிரதமர் அலுவலகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அதிகாரி ஒருவர் கூட இல்லை என்று அரசு அறிவித்த புள்ளி விவரங்களே கூறுகின்றன.
இந்தியாவில் ஒரே முகம் மோடி மட்டுமே என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு ஒற்றை சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை படுகுழியில் தள்ளும் திட்டத்தோடு தேர்தல் களத்திற்கு பாஜக வந்திருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக அறிவித்தாலும் பாஜகவின் மக்கள் விரோத சனாதன கொள்கையோடு கட்சி நெருக்கமாகவே தன்னை அடையாளப்படுத்தி வருகிறது.
இப்போதும் மோடியை, பாஜகவை விமர்சிப்பதைத் தவிர்க்கிறது. பாஜகவின் தமிழ்நாட்டு தலைவராக இருக்கும் அண்ணாமலையை சட்டமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக முதல்வர் ஆக்கும் முயற்சிகள் நடப்பதால்தான் அது பாஜக எதிர்ப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றி உள்ளது. தேர்தலுக்குப் பிறகு மோடி ஒருவேளை பிரதமராக வந்துவிட்டாலும் எதிர்ப்போம் என்று கூறுவதற்கு இவர்கள் தயாராக இல்லை .
நாடு எதிர் நோக்கி உள்ள இந்த ஆபத்தான சூழ்நிலையில் பெரியார் தந்த கொள்கை வெளிச்சம் நமக்கு தெளிவான வழிகாட்டி வருகிறது. சனாதனத்தை வீழ்த்தி திராவிடத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு. பாரதமா? இந்தியாவா? என்ற கேள்விகள் எழும்போது பாரதம் என்ற சனாதன அடையாளத்தை எதிர்க்கும் இந்தியா கூட்டணியின் பக்கம் தான் நாம் நிற்க வேண்டும். அதுவே பெரியாரிய பார்வை என்ற உறுதியான முடிவிற்கு இந்த செயலவை வந்துள்ளது.
ஆரிய, திராவிடப் போராட்டத்தின் வரலாற்று தொடர்ச்சியாக நடக்கும் இந்த தேவ, அசுரப் போராட்டத்தில் திராவிடர் என்ற அசுரர் ஆகிய நாம் உறுதியோடு சனாதன ஆரியத்தை எதிர்த்து அணி திரள வேண்டும் என்று முடிவு செய்கிறது. இக்கருத்தியலை மக்கள் சந்திப்பு வழியாக ஒவ்வொரு தோழர்களும் தேர்தல் பரப்புரையாக கொண்டு செல்வதில் முனைப்பு காட்ட வேண்டும் என்றும், இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு தனித்துவமாய் பெற்றுவரும் முன்னேற்றங்களை ஒரு பக்கம் நிதிப் பங்கீடு பாகுபாட்டாலும், மறு பக்கம் ஆளுநரின் அடாவடி செயல்பாடுகளாலும் தடுத்து வடநாட்டைப் போல தமிழ்நாட்டையும் மாற்ற துடிக்கும் சதிகார கூட்டத்தினருக்கு பாடம் கற்பிக்கும் வகையில் தமிழ்நாட்டு மக்களும் இவற்றை மனதில் கொண்டு தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் திராவிடர் விடுதலைக் கழகம் வேண்டுகோள் விடுக்கிறது.
பெரியார் முழக்கம் 21032024 இதழ்