” ஜாதிய வறட்டு வன்மமே ஆணவ படுகொலைகளுக்கு அடிப்படை காரணம் ” – பேராவூரணி ஆர்ப்பாட்டத்தில் தோழர் எவிடென்ஸ் கதிர்

” ஜாதிய வறட்டு வன்மமே ஆணவ படுகொலைகளுக்கு அடிப்படை காரணம் ”
பேராவூரணியில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக்கழக ஆர்பாட்டத்தில் தோழர் எவிடென்ஸ் கதிர் பேச்சு

பேராவூரணி  ஜாதி மறுப்பு திருமணம்செய்த சங்கர் உடுமலைப்பேட்டையில் ஜாதிய வெறியர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பேராவூரணி அண்ணா சிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் மார்ச் 25ம் தேதி மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் எவிடென்ஸ் கதிர் பங்கேற்று கன்டன உரையாற்றினார்,
அவர் தனது உரையில்,

”ஜாதி மறுப்பு திருமணம் செய்த தோழர் சங்கர் தனக்கும் தன் மனைவியாகிய கௌசல்யாவிற்கும் கௌசல்யா உறவினர்களால் பலமுறை கொலை மிரட்டல் விடப்பட்டபோது இதுகுறித்து மடத்துக்குளம், குமரலிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, புகார் மனு அளித்திருந்தார். ஆனால் புகாரை பெற்றுககொண்ட மேற்கண்ட காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் இதுபோன்ற விஷயங்களில் அப்படிதான் மிரட்டுவார்கள் ஆனால் ஒன்றும் செய்ய மாட்டார்கள். என சங்கரிடம் சொன்னதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் காவல்துறை எடுக்கவில்லை. இதுதான் கொலையாளிகளுக்கு சாதகமாக போய்விட்டது- 18 வயதுள்ள ஒரு பெண்ணும், 21 வயதுள்ள ஒரு ஆணும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்வது சட்டம் அவர்களுக்-கு அளித்துள்ள அடிப்படை உரிமையாகும். இதில் தலையீடு செய்ய எவருக்கும் உரிமை கிடையாது. அரசியல் சட்ட பிரிவு 14 அனைவரும் சமம் என்று வலியுறுத்துகிறது. சட்ட பிரிவு 15 ஜாதியின் பெயரால் பாகுபாடுகள் காட்டக்கூடாது என்று சொல்கிறது. இவற்றை நடைமுறை படுத்தவேண்டிய அரசும், காவல்துறையும் இதனை மறைத்து விட்டு ஆணவப்படுகொலை செய்யும் கொலையாளிகளுக்கு ஆதரவாகத்தான் பலமுறையும் செயல்பட்டுவந்துள்ளது.

தமிழகத்தில் உரிமைகளுக்காக போராடுபர்கள் மீது அவர்களை ஒடுக்குவதற்காக, அவர்களின் குரல்களை நசுக்குவதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தை போராளிகள் மீது அரசு பாய்சுகிறது. நியாயப்படி ஜாதியின் பெயரால் ஆணவ படுகொலை செய்பவர்களையும், கொலையை தூண்டுபவர்களையும் தான் அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படவேண்டும்.
ஆணவ கொலையாளிகள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 174 பிரிவு சந்தேக மரணம் என்றும், 202 பிரிவின் படி காவல்துறைக்கு முன்தகவல் கொடுக்காமல் உடலை எரித்துவிட்டார்கள் என்ற பிரிவுகள் மட்டும் போட்டு ஆணவ படுகொலை செய்யும், குற்றவாளிகளுக்கு சாதகமாகவே வழக்கு நடத்தப்படுகிறது.

ஜாதி ஆணவ கவுரவ கொலைகளை செய்வது பெரும்பாலும் அப்பா, அண்ணன், மாமன் என குடும்ப உறுப்பினர்களே என்பதால், கொலை வழக்கை யார் நடத்துவது. குடும்ப உறுப்பினர்கள் அக்கறை செலுத்தாத போது வழக்கை நடத்தும் காவல்துறையும் அக்கறையின்றி வழக்கை முடித்தால் போதும் என, வழக்கு நீர்த்துப்போகும் வகையில் செயல்படுவதால் குற்றவாளிகள் தண்டனை ஏதுமின்றி எளிதில் தப்பி விடுகின்றனர். எனவே ஆணவ படுகொலைகளை தடுக்க தவறிய தமிழக அரசும் ஒரு குற்றவாளிதான். ஜாதிய ஆணவப் படுகொலையில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்ட தலித் இனத்து பெண்கள் தான். ஆனால் தலித் இளைஞர்கள் ஏமாற்றுவதாக சில ஜாதி கட்சி, அமைப்புகள் உண்மைக்கு புறம்பாக பேசி வருகின்றனர். திமுக, அதிமுக கட்சியினர் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டிப்பதில்லை. ஏனென்றால் இரண்டு கட்சியிலுமே சாதிய வெறியர்கள் உள்ளனர் என்பதே உண்மை.

தென்மாவட்டங்களில் இளங்காதலர்கள் ஜாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆதிக்க சாதியினரால் கொத்துக் கொத்தாக ஆணவ படுகொலை செய்யப்படுகின்றனர். புள்ளிவிவர கணக்கெடுப்பின்படி ஆண்டுக்கு 1000 பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால் அதில் 12 சதவீதம் காதல் சம்பந்தப்பட்ட படுகொலைகளாக உள்ளது. ஆண்டிற்கு 1000 தற்கொலைகள் என்றால் 20 சதவீதம் காதல் சம்பந்தப்பட்ட பிரச்சினை தான் காரணம் என அறிக்கை தெரிவிக்கிறது. தமிழகத்தில் நடக்கும் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டிக்காத, தடுத்து நிறுத்த அக்கறையில்லாத, தமிழக அரசையும் குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். சாதிய ஆணவ படுகொலைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்” இவ்வாறு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் புரட்சிக்கழக கொள்கை பரப்புச்செயலாளர் ஆறு.நீலகண்டன், திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, இசிஐ திருச்சபை ஆயர் த.ஜேம்ஸ், மெய்சுடர் ஆசிரியர் நா.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ராஜமாணிக்கம், மமக மாவட்ட செயலாளர் கப்பார், பெரியார் பெருந்தொண்டன் தஞ்சை பெரியார் சித்தன் ஆகியோர் கண்டனஉரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக்கழக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பூபதி கார்த்திகேயன், எழுத்தாளர் துரைகுணா, பெரியார் அம்பேத்கர் மக்கள் கழக அமைப்பாளர் ஆசிரியர் செல்வம், திராவிடர் விடுதுலைக்கழக பேராவூரணி ஒன்றிய அமைப்பாளர் அ.கோவிந்தன், சேது ஒன்றிய அமைப்பாளர் சுப.ஜெயந்திரன், நீடா ஒன்றிய செயலாளர் செந்தமிழன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் தென்பரை பன்னீர்செல்வம், பேராவூரணி அ.நீலகண்டன் உட்பட ஏராளமான திவிக பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.
செய்தி : மன்னை இரா.காளிதாசு

11218480_1721371084813451_3901841529581126839_n 12439289_1721370818146811_4864369288813201639_n 12923339_1721371144813445_2469739777203442981_n 12923376_1721371151480111_7425862887244553928_n 12924381_1721371158146777_2182958043006243218_n

You may also like...