இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்
(08.02.2024 இதழில் வெளியான உரையின் தொடர்ச்சி)
1892-இல் ஆங்கிலக் கல்வி வந்தபோது சென்னை மாகாணத்தில் சர்வீஸ் கமிசன் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த 1892-க்கும் 1904-க்கும் இடையில் அய்.சி.எஸ். அதிகாரிகளாக 16 இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் 15 பேர் பிராமணர்கள். அந்த காலகட்டத்தில் ஆளுநர் நிர்வாக கவுன்சிலில் 3 இந்தியர்கள், அதில் இருவர் பிராமணர்கள். 1900-ஆம் ஆண்டு ஐந்து பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். அதில் நால்வர் பிராமணர்கள். 1907-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர்களாக 12 நியமிக்கப்பட்டனர். அதில் 11 பேர் பிராமணர்கள். அவர்கள் பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கக்கூடாது என்று கூறி அதை எடுத்துவிட்டனர். அதற்குப் பின்னர் ஆட்சியமைத்த பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சி காலத்தில்தான் தமிழ் மீண்டும் கொண்டுவரப்பட்டது.
திராவிடம் என்ற சொல் 7ஆம் நூற்றாண்டில் குமரில பட்டர் எழுதிய தாந்திர வார்த்திகா என்பதில் ஆந்திரா திராவிட பாஷை என்று வருகிறது. இந்த மண்ணில் கிறித்துவத்தை பரப்புவதற்காக இராபர்ட் கால்டுவெல் வந்தார். அவர் 18 மொழிகளை கற்றறிந்தவர். தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசப்படுகிறது. இதில் ஒரு இலக்கண ஒற்றுமை இருக்கிறது. வட இந்தியாவில் இருப்பது எல்லாம் இந்தோ ஆரியன் மொழிகள். இவைகளெல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது. தென்னிந்தியாவில் இருக்கும் மொழிக்கும், வட இந்தியாவில் இருக்கும் மொழிக்கும் தொடர்பே இல்லை என்பதை கண்டறிந்தார் கால்டுவெல். The Comparitive Grammer Of The Dravidian Or South Indian Family Of Languages (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்) என்று ஒரு புத்தகத்தை எழுதினார்.
எல்லீஸ் சென்னை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர். அவர் தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய மொழிகள் எல்லாம் ஒரு குடும்பம் என்று அவர் கூறியுள்ளார். அவர் முழுமையாக ஆய்வு செய்து மொழிகளை எல்லாம் ஒப்பிட்டு “தமிழ்மொழி உள்ளிட்ட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து பிறக்கவில்லை” என்பதை தெளிவுபடுத்தினார். பின்னர் “இருக்கிற மொழிகளிலேயே வளம்வாய்ந்த மொழி என்றால் அது தமிழ்தான். இந்த தமிழ் என்பது சமஸ்கிருதத்திற்கு வார்த்தைகளை கடன் கொடுத்துள்ளது. இம்மொழி தனித்து இயங்கவல்லது” என்றார்.
மேலும், “இவர்களெல்லாம் தமிழை திராவிடம் என்றும், தமிழ் என்றும் சொல்கிறார்கள். பெரிய அறிவாளிப் பார்ப்பனர்கள் திராவிடம் என்று சொல்கிறார்கள். சாதாரண எளிய மக்கள் தமிழை தமிழ் என்று சொல்கிறார்கள். பின்னர் அவர், ஒரு மொழிக்கு எதற்கு இரண்டு சொற்கள், தமிழை தமிழ் என்று சொல்லுவோம். அந்த தமிழை சொல்லத்தெரியாமல் சொல்லும் சமஸ்கிருதப் பார்ப்பனர்கள் தமிழ், தமிழம், திரவிடம், திராவிடமாக மாறி தமிழ் என்பது தான் திராவிடமாக மாறியது. தமிழ் வேறு திராவிடம் வேறு கிடையாது. திராவிட மொழிக்குடும்பத்தில் மொத்தம் 23 மொழிகள் உள்ளது. இந்த மொழிக்குடும்பத்தை குறிக்க திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்திக்கொள்கிறேன். இதைவிட வேறு நல்ல வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. அதனால் இந்த வார்த்தையை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்” என்றார்.
ஆனால் இது சரியானது தானா என்று அவருக்கு தெரியவில்லை. இருந்தாலும் இந்த சொல்லை கலைச் சொல்லாகப் பயன்படுத்தினார். மேலும் அந்த புத்தகத்தில் “இவர்களெல்லாம் திராவிட மொழிகளை பேசுகிறவர்கள், திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறார். இவர்கள் இந்த மண்ணின் மக்கள், ஆரிய பார்ப்பனர்கள் வந்தேறிகள் என்று சொன்ன அவர், இந்த மண்ணின் மக்களை சூத்திரர்கள் என்று எழுதி இருக்கிறார்கள் என்பதை விளக்கினார். கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தில், பறையர்கள் என்பவர்களும் திராவிடர்கள்தான் என்று எழுதியுள்ளார். அப்போது வரைக்கும் கூனிக்குருகி இருந்த சூத்திரர்கள் அதற்குப் பிறகு தமிழர்களாக தலைநிமிர்ந்தனர்.
1881-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது அயோத்திதாச பண்டிதர் எங்களை “ஜாதியில்லாத திராவிடர்கள்” என்று பதிவு செய்யுங்கள் என்றார். இந்த திராவிடம் என்ற சொல் மக்கள் விரும்பி ஏற்ற சொல், அது மக்கள் போராட்ட சொல். 1885-இல் ஜான்ரத்தினம் மற்றும் அயோத்திதாச பண்டிதர் இணைந்து “திராவிடர் கழகம்” என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார்கள். அதேபோல 1891-இல் “திராவிட மகாஜன சபா” என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த சொல்லை பயன்படுத்தியவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். 1916-இல் டி.எம்.நாயர் – நடேசனார் – தியாகராயர் இணைந்து உருவாக்கிய அமைப்பு கூட பார்ப்பனரல்லாத இயக்கம்தான். அதன் பிறகு அவர்கள் தொடங்கிய பத்திரிகைக்கு ‘திராவிடன்’ என்று பெயர் சூட்டினார்கள். திராவிடம் என்ற சொல் அயோத்திதாசரால் பயன்படுத்தப்பட்டு, தற்போது திராவிட இயக்கத்தின் கைகளுக்கு வந்துள்ளது.
1919-இல் மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் வருகிறது. அந்த சட்டம், மக்களே தேர்தல் நடத்தி நீங்களெல்லாம் அதில் அமைச்சர்களாக பொறுப்பேற்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தில் சில சட்டங்களை போடலாம் என்றது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி பல சட்டங்களை கொண்டுவந்தது. இட ஒதுக்கீடு முறையை கொண்டுவந்தனர். பேருந்துகளில் பஞ்சமர்களுக்கு அனுமதியில்லை என்று இருந்ததை ஒழித்துக்கட்டியது நீதிக்கட்சி. ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த குழந்தைகளுக்கு அரசாங்கமே கல்விக் கட்டணம் செலுத்தியது. பள்ளிக்கூடங்களில் ஆதிதிராவிடர் பிள்ளைகளை சேர்க்கவில்லை என்றால் உங்களுக்கு மானியம் வழங்கப்படாது என்று அறிவித்தது அன்றைய நீதிக்கட்சி அரசு.
திராவிடம் என்பதை நான் ஒரு குறியீட்டுச் சொல்லாகத்தான் பயன்படுத்துகிறேன் என்று பெரியார் சொல்வார். 1945ஆம் ஆண்டு ஈரோடு மகாஜன பள்ளியில் பெரியார் உரையாற்றும் போது, “அனைவரும் தங்களை திராவிடர் என்று உணருங்கள். இந்த இழிவெல்லாம் உங்களை விட்டுப் பறந்து போய்விடும். அப்படி உணர்ந்தால் அந்த சமூக சனாதன கட்டமைப்பில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று அர்த்தம். ஜாதியை மதிக்காதே! மதத்தை மதிக்காதே! மனிதனை நினை!” என்று திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டே இருந்தார் பெரியார். ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை நாம் எப்படி குறிப்பிடுகிறோமோ, அப்படித்தான் இன்றைய தாழ்வு நிலையில் இருந்து கடந்து செல்வதற்கான ஒரு சொல்லாகத்தான் திராவிடம் இருக்கிறது என்று குறிப்பிட்டார் பெரியார்.
சிலர் இது தமிழ்நாடா? இல்லை திராவிட நாடா? ஒரு நாட்டிற்கு இரண்டு பெயரா? என்று கேட்பார்கள். இது தமிழ்நாடுதான் ஆனால் அது திராவிட நாடாகவும் இருக்கும். காரல் மார்ஸ், ஏங்கெல்ஸை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழ்நாட்டை ஒரு சோசலிச நாடு என்று கூறுவார்கள். ஹிட்லர் மாதிரியான ஆட்கள் வந்தால் தமிழ்நாடு ஒரு சர்வாதிகார நாடு என்று கூறுவார்கள். அதுபோல தமிழ்நாடு ஒரு திராவிட நாடாகவும் இருக்க முடியும். அப்படியென்றால் தமிழ்நாடு பார்ப்பனியம் ஒழிந்த நாடு. ஒருவர் தமிழனாகவும், இந்தியனாகவும் இருக்கும்போது ஏன் தமிழனாகவும் திராவிடனாகவும் இருக்க முடியாது?
(நிறைவு)
தொகுப்பு : விஷ்ணு
பெரியார் முழக்கம் 15.02.2024