சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (9) ஞான சம்பந்தனின் ‘அனல்-புனல்வாத’ மோசடிகள்
‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி)
சைவத்தைப் பரப்பிய அப்பர், சம்பந்தர் ஆகியோர் குறித்த உண்மை வரலாறுகள் குழப்பம் நிறைந்தவை. தேவாரத்தில் உள்ள சில பாடல்கள் பெரிய புராணம் கூறும் சில சம்பவங்கள், சமணர்களின் கிராமங்களில் வழங்கப்பட்ட வாய்மொழிக் கதைகள்தான் இவர்களைப் பற்றி பேசுகின்றன. புத்தர்களையும், சமணர்களையும் கடுமையாகத் தாக்கி அழிப்பது குறித்து தேவாரம், பெரிய புராணம் நூல்கள் பேசுகின்றன. இதில் சைவமும் வைதீகமும் கைகோர்த்து நின்றிருக்கின்றன. ‘அப்பரும் சம்பந்தரும்’ என்ற அரிய ஆராய்ச்சி நூலை தமிழறிஞர் அ. பொன்னம்பலனார் எழுதினார். 1944இல் ‘குடிஅரசு’ பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டது.
சமணம் தழைத்தோங்கி வைதிகம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த காலத்தில் சோழ நாடான சீர்காழியில் சிவபாத விருதையர்-பகவதி ஆகிய ‘பிராமண’ வைதிக தம்பதிகளுக்குப் பிறந்தவன் சம்பந்தன். சமண மத எழுச்சியால் புரோகிதத் தொழில் நெருக்கடிக்கு உள்ளானதால் புரோகிதர்கள் ஆங்காங்கே கூடி, தங்கள் வைதிகத் தொழிலை மீட்பது குறித்துப் பேசி வந்தனர். தனது தந்தை வேதத் தொழில் பாதிப்புக்குள்ளாகிவிட்டது குறித்து வருந்தி தாயிடம் அழுதபோது, தமிழ் கற்ற மகன் சம்பந்தன், தந்தையைத் தேற்றுகிறான். ‘அப்பா அழாதே, எவ்வாறாயினும் இந்த சமணப் பூண்டை வேரறுக்க நமது குடும்பம் தியாகம் செய்ய வேண்டுமே தவிர, புலம்புவதால் பயனில்லை” என்று தேற்றி, “வேதத்துக்கும் யாகத்துக்கும் தீங்கிழைப்பவரை அழிக்காமல் வீடு திரும்ப மாட்டேன்” என்று சபதம் செய்து வீட்டை விட்டு வெளியேறுகிறான் என்று எழுதுகிறார். தமிழ் அறிஞர் அ. பொன்னம்பலனார்.
இதேபோல திருவாரூரில் சைவக் குடும்பத்தில் பிறந்த திருநாவுக்கரசர், அவரது தங்கை திலகவதி இருவரும் சமண மதத்தின் மீது வெறுப்புற்றிருந்தனர். சம்பந்தர் இவர்களை சந்தித்து வேதப் பெருமைகளைப் பேசி சமணத்தை இகழ்ந்தார். மூவர் அணி உருவானது. சைவ வெறியரான திருநாவுக்கரசர் சமணராக வேடம் தரித்து, தனது பெயரை தருமசேனர் என்று மாற்றிக் கொண்டு, சமண முனிவர்கள் தங்கியிருந்த மடங்களுக்குச் சென்று தங்கி சமணராகவே நடித்து, சமண முனிவர்களிடம் வாதிட்டு, தனது புலமையை நிலைநாட்டினார். திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயரும் உண்டு. சில காலம் சமண வேடம் தரித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர், வயிற்று வலி வந்ததுபோல் நடித்து, சமணர்களால் அதைக் குணமாக்க முடியாத நிலையில் சிவபெருமான், தங்கை திலகவதியின் கனவில் வந்து, சைவத்திலிருந்து சமணத்துக்கு மாறி யதால்தான் வயிற்று வலி வந்ததாகக் கூறியதாகவும், சிவபெருமான் சில பாடல்களைப் பாடியவுடன், அப்பரின் வயிற்றுவலி பறந்தோடி விட்டது என்றும் மக்களை நம்ப வைத்தனர். சமணத்தை ஒழிக்க இப்படிப்பட்ட மோசடிப் பிரச்சாரங்கள் நடப்பதை அறிந்த சமணர்கள், பல்லவ மன்னனிடம் புகார் கூற மன்னன் அப்பரை வரவழைத்து, “நீர் உமது மதத்தைப் பரப்ப உரிமை யுண்டு; ஆனால் சமணத்தைத் தூற்றுதல் கூடாது” என்று எச்சரிக்கவே அப்பர் நாட்டைவிட்டு வெளியேறினார்.
பெரியார் இயக்கத்தின் முன்னணித் தலைவரும் வாழ்நாள் முழுதும் பெரியார் கருத்துகளை மேடைகளில் பரப்பியவருமான பெரியார் பெரும் தொண்டர் சுயமரியாதை சுடரொளி திருவாரூர் தங்கராசு, சைவம் குறித்து பல விரிவான ஆய்வுகளை நடத்தி நூல்களை எழுதினார். அதில் சம்பந்தன் மோசடிகளை ஆதாரத்துடன் விளக்கும் ‘திருஞான சம்பந்தர்’ என்ற நாடக நூலும் மிகவும் முக்கிய மானது.
சம்பந்தன், சிறுவனாக சீர்காழி குளத்தில் மூழ்கி எழுந்தபோது சிவபெருமான் ஞானப்பால் தந்தார் என்றும் உடனே சிறுவன், ‘தோடுடைய செவியன் இடையேறியோர் தூவெண்மதி சூடி’ என்று பதிகம் பாடத் தொடங்கினான் என்றும் கூறியது மக்களை ஏமாற்றி நம்ப வைக்கச் செய்யப்பட்ட நாடகம் என்பதை பெரிய புராணம், தேவாரப் பாடல்களைக் கொண்டே திருவாரூர் தங்கராசு நிறுவியுள்ளார். சம்பந்தன், ‘ஞானப்பால்’ குடிப்பதற்கு முன்பே சமண – பவுத்த நெறிகளை ஒழிக்க வந்தவன் என்று வேதியர்கள் கூறியிருக்கிறார்கள். பெரியபுராணத்தில் வரும் 47ஆவது பாடல் இந்த உண்மையை உறுதி செய்வதை அவர் எடுத்துக் காட்டுகிறார். ‘ஞானப் பால்’ குடித்த பிறகும் சம்பந்தன், சமணர்களை புத்தர்களை அழிப்பதையேப் பாடுகிறான்.
“சமணரும், தேரரும் (புத்தரும்) யாகங்களையும் வேதங்களையும் குறை கூறுகிறார்கள். அவர்களை வாதத்தில் வெல்ல வேண்டும், அதற்கு சிவபெருமான் திருவுள்ளம் காட்ட வேண்டும் என்று பாடும் சம்பந்தன், புத்தர்-சமணர் மனைவியர்களை ‘கற்பழிக்க’ – சிவபெருமான் தனக்கு அருள் செய்ய வேண்டும்” என்கிறான். பெரியார்கூட தனது இறுதிப் பேருரையில் இந்தப் பாடலை எடுத்துக்காட்டி கண்டித்துப் பேசினார்.
“மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவாலவாய் அருள்
பெண்ணாகத் தொழில் சாக்கியர் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே”
என்பதே அப்பாடல். புத்த-சமண மதங்கள் மீது வேத புரோகிதக் கூட்டம், எவ்வளவு ஆத்திரம் கொண்டு அலைந்தது என்பதற்கு இப்பாடலைவிட வேறு சான்று வேண்டாம். இந்தப் பாடல் வரிகளும் பிற்காலத்தில் திரித்து வெளியிடப்பட்டிருக்கின்றன. திருவண்ணாமலை ஆதினம் ஆறுமுகத்தம்பிரான், 1885இல் வெளியிட்ட திருஞானசம்பந்தர் சுவாமிகள் வரலாற்று நூலில் இந்தப் பாடல் அப்படியே இடம் பெற்றுள்ளது. அதற்குப் பிறகு 1950இல் வெளி யிடப்பட்ட திருஞானசம்பந்தர் வரலாற்றில் ‘பெண்ணர்’ என்ற சொல்லை ‘தெண்ணர்’ என்று சொல் மாற்றம் செய்த திரிபுவேலையை யும் திருவாரூர் தங்கராசு தனது ஆய்வுத் திறனால் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
நின்றசீர் நெடுமாறன் என்றும் கூன்பாண்டியன் என்றும் அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் ஆட்சி காலத்தில் தான் (கி.பி.640-670) சம்பந்தன் திருவிளை யாடல்களால் ‘அனல்வாதம் – புனல்வாதம்’ 8000 சமணர்களைக் கழுவேற்றி துடிக்கத் துடிக்க சொல்லப்பட்ட கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டன. பாண்டிய மன்னன் சமணத்தை தழுவினான். அவனது மனைவி மங்கையற்கரசி தீவிரமாக சைவ வெறியோடு செயல்பட்டவள். பாண்டியன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த குலச்சிறை என்ற அமைச்சரும் தீவிர சைவர். சமண மதத்திலிருந்து பாண்டிய மன்னனை சைவ மதத்துக்குத் திருப்ப, சம்பந்தன் – பாண்டியன் மனைவி மங்கையற்கரசி, அமைச்சர் குலச்சிறை மூவரும் இணைந்து சதித் திட்டங்களை நடத்துகிறார்கள். பாண்டிய மன்னன் தீராத வயிற்று வலியால் துடித்தான். சமணர்கள் மூலிகைகளைக் கொண்டு செய்த சிகிச்சை பலனளிக்காததால் சம்பந்தன் ‘திருநீறு’ எனும் சாம்பலைப் பூசி பதிகம் பாடி பாண்டியன் வயிற்று வலியைப் போக்கினான் என்பது கதை. மன்னனை சைவனாக்கியதோடு 8000 சமணர்களையும் கழுவில் ஏற்றிக் கொல்ல திட்டமிட்டான் சம்பந்தன்.
உண்மையில், பாண்டியன் வயிற்று வலிக்கு சம்பந்தனே காரணம். பாண்டியன் மனைவி வழியாக கனி ரசத்துடன் வயிற்று வலியை உண்டாக்கும் மருந்தைக் கொடுத்து குடிக்கச் செய்கிறான். வயிற்று வலியால் துடிக்கும் மன்னனிடம் சமணர்களால் நோயைத் தீர்க்க முடியாது. சம்பந்தனால் மட்டுமே தீர்க்க முடியும் என்று மன்னனிடம் தூபம் போட்டு சம்பந்தனிடம் சிகிச்சைப் பெறுவதற்கு மன்னனை ஏற்கச் செய்கிறாள். சம்பந்தன் அரண்மனைக்கு சிகிச்சைக்கு வரும்போது பாண்டியன் மனைவி இடையிடையே ஒரு குவளையில் திரவத்தைக் கொடுத்து மன்னனைக் குடிக்க வைக்கிறாள். இது சம்பந்தன் உருவாக்கிய நோயைத் தீர்க்க சம்பந்தனே தந்த மருந்தின் கலவை. ஆனால் வயிற்று வலியை தனது திருநீறு சக்தியால் போக்கியதாக சம்பந்தன் நாடகமாடுகிறான்.
மந்திரமாவது நீறு
வானவர் மேலது நீறு!
சுந்தரமாவது நீறு!
தந்திரமாவது நீறு!
– என்று பாடி திருநீறை அள்ளி அள்ளி மன்னன் மீது தடவுகிறான். முதலில் ‘தந்திமாவது நீறு’ என்று பாடியவன் சமணர்கள் குறுக்கிடவே சுதாரித்துக் கொண்டு ‘சமயத்தில் உதவுவது திருநீறு’ என்று மாற்றிப் பாடுகிறான். வயிற்று வலி குறித்து கண்டறியும் மருத்துவ அறிவியல் வளர்ச்சி அப்போது இருந்திருக்குமானால், இந்த மோசடிகளை நடத்தி யிருக்க முடியாது.
மருந்தே இல்லாமல் ‘திருநீறு’ மூலம் மன்னன் வியாதியை குணமாக்குகிறேன் என்று சமண முனிவர்களிடம் சவால் விட்டு, வீண் சண்டைக்கு இழுக்கிறான் சம்பந்தன். சமணர்கள் ஏடுகளையும் சைவ ஏடுகளையும் எரியும் நெருப்பில் போட வேண்டும். எரியாதவை உண்மையான மதம். பிறகு ஓடும் ஆற்றில் போட வேண்டும். எதிர் நீச்சல் அடித்து எந்த ஏடு அழியாது இருக்கிறதோ அந்த மதமே உண்மையானது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இரண்டு போட்டிகளிலும் தோற்கிற மதப் பிரிவினர் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட வேண்டும் என்பது சம்பந்தன் விதித்த போட்டி. இதில் அடங்கியுள்ள சூழ்ச்சிகளைப் புரிந்த சமணர்கள் தயங்குகிறார்கள். ஆனால் பாண்டியன் மனைவியும், அமைச்சர் குலச்சிறையும் சமணர்களை நிர்ப்பந்தித்து போட்டிக்குப் பணிய வைக்கிறார்கள். மன்னனுக்கும் இதில் உடன்பாடு இல்லாமல் தயக்கம் காட்டுகிறான். அவனையும் கட்டாயப்படுத்தியே பணிய வைக்கிறார்கள்.
மன்னனின் கட்டளைக்கு பயந்து சமணர்கள் தங்களின் ஓலைச் சுவடிகளை எல்லாம் கட்டுக்கட்டாக நெருப்பில் கொட்டுகிறார்கள். அவ்வளவும் எரிந்து அழிந்தன. சம்பந்தன் தனது சைவ கருத்துகளை அப்படியே ஒரே ஏட்டில் “ஏற்றி” யுள்ளேன். இந்த ஒரு ஏட்டை நெருப்பில் போடுகிறேன். எரிகிறதா என்று பாருங்கள் என்று சவால் விட்டு நெருப்பில் போடுகிறான். அப்போது சமண முனிவர் கந்துசேனர், நெருப்பில் போட்டு எரியாத ‘சைவ’ ஓலையை எல்லோரிடமும் எடுத்துக்காட்டு என்று சவால் விடுகிறார். சம்பந்தன் தடுமாறி கையிலிருந்த ஏட்டைக் காட்ட மறுக்கும்போது கந்துசேனர் பிடுங்கி தரையில் வீசுகிறார். அது ‘இரும்புத் தகடு’. ‘இரும்புத் தகடு’ நெருப்பில் எப்படி எரியும்? இதனால் தான் இப்போதும் மோசடிக்கு ‘தகிடுதத்தம்’ என்ற சொல் வழக்கத்தில் இருந்து வருகிறது. இப்படி சமண ஏடுகள் திட்டமிட்டு எரிக்கப்பட்டன.
அதேபோல் ஏடுகளை வைகை ஆற்றில் விடும் ‘புனல்வாதம்’கூட மோசடியாகவே நடந்தது. சமணர்கள் ஏடுகள் ஆற்றில் கொட்டப்பட்டு மூழ்கடிக்கப்பட்டன. ஒரே ஒரு சைவ ஏடு மட்டும் தண்ணீரில் போட்டவுடன் மூழ்கியது. அப்போது ‘வாழ்க அந்தணர்’ என்றே சம்பந்தன் பாடுகிறான். ஏட்டை ஆற்றில் போட்டவுடன் பாண்டியன் அமைச்சரவையில் சம்பந்தன் சதிகளுக்கு உடந்தையாக இருந்த அமைச்சன் குலச்சிறையார், ஏடு எதிர்த்து தண்ணீரில் போவதாகக் கூறிக் கொண்டே எதிர்நீச்சலில் போகும் ‘ஏட்டை’ எடுத்து வருவதாகக் கூறி குதிரையில் ஏறி பாய்ச்சல் வேகத்தில் போகிறான். சமணர்கள் கண் முன் நடந்த மோசடியை எதிர்த்து கூச்சலிடுகிறார்கள். அதிகாரிகள் சமணர்களை மிரட்டி அடக்குகிறார்கள். குதிரையில் ஏறிச் சென்ற குலச்சிறை திரும்பி வந்து, மன்னரிடம் ஒரு ஏட்டைக் காட்டி இதுதான் சம்பந்தன் ஆற்றில் விட்ட ஏடு என்றும், திருவேடகம் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருவடிக்கருகில் சென்று ஏடு அப்படியே நின்றுவிட்டது என்றும் கதை விடுகிறான். மன்னனும் நம்பி விடுகிறான். அதற்குப் பிறகு போட்டியில் தோற்ற சமணர்களைக் கழுவில் ஏற்ற வேண்டும் என்று சம்பந்தன், மன்னனின் மனைவி, அமைச்சர் குலச்சிறை, மன்னனை வற்புறுத்து கிறார்கள். மன்னன் அதை விரும்பாத நிலையிலும் அமைச்சர் குலச்சிறை, கழுவில் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளையெல்லாம் ஏற்கனவே செய்து குலச்சிறையே கழுவில் ஏற்ற உத்தரவிடுகிறான்.
திருவாரூர் தங்கராசு அவர்கள் தீட்டிய திருஞானசம்பந்தர் நாடகத்தில் அந்தக் காட்சிகள் இவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
“சம்பந்தன் : குழந்தை, குட்டிகள், பெண்டுகள், பெரியவர்கள் என்று பார்க்க வேண்டாம். சமணப் பூண்டு ஒன்றுகூட இருக்கக் கூடாது! நாங்கள் பார்க்க வருவோம்.
(நிலைமை கட்டுக்கடங்காது போய் விட்டதைப் பார்த்த பாண்டியன் மவுனம் சாதித்து விடுகிறான் சம்பந்தனுக்குப் பயந்து! உடனே தளபதிகளும் வீரர்களும் பாய்ந்து சென்று சமணர்களை வளைத்துக் கொண்டு இழுத்து வருகின்றனர்! வேடிக்கைப் பார்க்க வந்த கூட்டத்தில் உள்ள சமண நெறியைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் சிதறி ஓடுகின்றனர்! சைவ வெறியர்களும், அரசாங்க வீரர்களும் அவர்கள் அனைவரையும் விரட்டிப் பிடிக்கின்றனர். சற்று நேரத்திற்கெல்லாம் ஆற்றங்கரை முழுமையும் ஒரே அல்லோலகல்லோலமாகிறது. எங்கும் கூச்சலும் குழப்பமும். இவைகளைப் பார்த்தும் மன்னன் ஏதும் செய்ய இயலாதவனாய் – செயலற்று சிலைபோல் நிற்கிறான்!
மதுரை நகரின் பல பகுதிகளிலும், சைவமத வெறியர்களும், அரசாங்க வீரர்களும் சமணர்களை வேட்டையாடுகின்றனர். எங்கும் ஒரே கூச்சலும், குழப்பமும், அவல ஒலியும் நிறைந்து கேட்கின்றது! சிலர் பயந்து கொண்டு திடீரென பட்டைபூசி! கொட்டை கட்டி, ‘சிவ சிவ’ என்று முணுமுணுத்துத் தப்புகின்றனர். சிலர் ஓடிச் சென்று மீனாட்சி ஆலயத்துள் சரண் புகுகிறார்கள். உடனே மதம் மாறுகிறார்கள்! “நகரமே நரகமாகக் காட்சியளிக்கிறது! வேத மதவெறி அதன் உச்சியிலே நின்று செயல்படுகிறது!” ஆங்கே சம்பந்தனும், சீடர்களும், குலச்சிறையும், மங்கையர்க்கரசியும் சென்று சமணர்கள் வேட்டையாடப்படுவதைக் கண்டு களிக்கின்றனர்.
வைகை ஆற்றங்கரை அருகில் எண்ணற்ற அளவில் நடப்பட்டிருக்கும் கழுமரங்களில், ஆயிரக்கணக்கான சமண நெறியினர் ஏற்றப்பட்டு துடிதுடித்துச் செத்துக் கொண்டிருக்கின்றனர். காக்கையும், கழுகும், நாயும், நரியும் பலரது உடல்களையும் கொத்தியும் பிய்த்தும் நாசம் செய்கின்றன. ஒருபுறம் சம்பந்தனும், குலச்சிறையும், மங்கையர்க்கரசியும் சைவ வெறியர்களும் நின்று ஒவ்வொருவரும் கழுவில் ஏற்றப்படும்போது தங்கள் ஆரவாரத்தைத் தெரிவித்தபடி நிற்கின்றனர். ஏறக்குறைய எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிய பிறகு, சில வீரர்கள் சமணர்களின் முக்கிய தலைவர்கள் எல்லோரையும் கொண்டு வந்து வரிசையாக நிறுத்தி ஒவ்வொருவராகக் கழுவில் ஏற்றுகின்றனர்.
சமண முனிவர் கந்துசேனர் : அருகா! அநீதியை எதிர்த்துப் போராடி னோம். அநியாயமாக அழிகின் றோம்! வருங்காலமாவது இதற்கு ஒரு வழி காணட்டும்… அன்புத் தமிழகமே எங்களை என்றும் மறந்து விடாதே! உன் உயர்வுக்கு உழைத்த நாங்கள் அழிகின்றோம். எமது அழிவுக்கு வழி கண்டார். வாழ்கின்றார்கள் – மறந்துவிடாதே! மறந்துவிடாதே! இதை என்றுமே மறந்துவிடாதே… அருகா! அருகா!
(இறுதியாக அவரையும் கழுவில் ஏற்றுகின்றனர். சம்பந்தனும், அவனுடைய கூட்டமும் இடி இடியென சிரித்து மகிழுகின்றனர்!)
மதுரைப் பெருநகரின் கண் இலங்கி அறத்தையும், பண்பையும், வளர்த்து வந்த சமணர் பள்ளிகள், பாழிகள், சைத்தியங்கள், விகாரங்கள் அத்தனையையும் சைவ மத வெறியர்களும், அரசு ஊழியர்களும், சம்பந்தன், குலச்சிறை இவர்களின் மேற்பார்வையில் உடைத்தும், தகர்த்தும், பெயர்த்தும் சில இடங்களில் கடைக்கால் (அஸ்திவாரம்) உட்பட தோண்டியும் நாசம் செய்கின்றனர்! பல இடங்களில் மாவீரர் (மகாவீரர்) விருஷபர் மற்றும் உள்ள சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளையெல்லாம் போட்டு நொறுக்கிவிட்டு, அந்த இடங்களிலே அரி, அரன், கந்தன், விநாயகன் முதலிய உருவாரங்களை நிலைநாட்டுகின்றனர். ஒவ்வொரு இடத்திலும் உடனே மறையவர்களாம் முப்புரியினர் புகுந்து கொள்கின்றனர். இந்தக் காட்சிகளையெல்லாம் சம்பந்தனும், அவனது கூட்டத்தினரும் பார்த்துப் பார்த்து பூரிக்கின்றனர்!”
என்று படம் பிடிக்கிறார் திருவாரூர் தங்கராசு.
சமணத்தையும் பவுத்தத்தையும் அழித்து, தமிழர் மரபையும் ஊடுறுவி சிதைத்த அதே வேத மரபுதான் இப்போதும் தமிழையும் தமிழரையும் அவமதிக்கிறது; அழிக்கத் துடிக்கிறது.
(நிறைவு)