குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் கழகம் பங்கேற்பு
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 23ஆம் தேதி நடந்த மாபெரும் பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். தி.மு.க. கூட்டணி கட்சிகளைத் தவிர, இஸ்லாமியர் அமைப்புகள், பல்வேறு இயக்கங்கள் பங்கேற்றன. திராவிடர் விடுதலைக் கழகம் பேரணியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் பங்கேற்றது. அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் இரா. உமாபதி, அய்யனார், அன்பு தனசேகர் மற்றும் மயிலை சுகுமார், வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏசுகுமார், ராஜீ, தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், எம்.ஜி.ஆர். நகர் கரு. அண்ணாமலை உள்ளிட்ட சென்னை மாவட்டக் கழகத் தோழர் கள் ஏராளமாகப் பங்கேற்றனர்.
ஈரோட்டிலிருந்து 20க்கும் மேற்பட்ட தோழர்களும் குடியாத்தம் பகுதி, காஞ்சிபுரம் பகுதி கழகத்தினரும் பேரணியில் பங்கேற்றனர்.
கழகக் கொடிகளுடன் ஒலி பெருக்கி வழியாக கழகத் தோழர்கள் முழக்கங்களை எழுப்பி வந்தனர். எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் தொடங்கிய பேரணி, இராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே நிறைவடைந்தது. ஒன்றரை மணி நேரம் பேரணி நடந்தது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தி.க. தலைவர் கி. வீரமணி, ப. சிதம்பரம் (காங்கிரஸ்) உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் பேரணி யின் முன் வரிசையில் நடந்து வந்தனர். தமிழ்நாடு பா.ஜ.க.வின் மதவெறியை ஒரு போதும் தமிழ்நாடு ஏற்காது என்பதை பேரணி உணர்த்தியது.
பெரியார் முழக்கம் 26122019 இதழ்