சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (2) மதத்தைக் காப்பாற்ற உங்கள் கடவுள் வர மாட்டாரா? ஒ. சுந்தரம்
பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில்.
கேள்வி : ‘தாலி’ அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலி யோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் தைரியம் உண்டா?
பதில் : கேள்வியே தவறானது. ‘தாலி அகற்றும் போராட்டம்’ என ஒன்று எக்காலத்திலும் நடத்தப்படவில்லை. நிற்க. ‘தாலி’ பற்றிய பெரி யாரின் கருத்தென்பது, பெண்ணடிமை ஒழிப்பை மையமாகக் கொண்டது.
இந்து திருமணச் சட்டப்படி, ஓமம் வளர்த்து, தீயை வணங்கி, ஏழுமுறை சுற்றி வந்து, தாலி கட்டி, நீரை வார்த்து, அதாவது பெண்ணை ஆணுக்கு ஒரு பொருளாகத் ‘தானம்’ கொடுப்பதாக சட்டத்தில் இருந்து வந்தது. இந்த முறை, பெண்ணை போகப் பொருளாக மட்டுமே காட்டுவதாக உள்ளதால், இதனை எதிர்த்து சுயமரியாதைத் திருமணங்களை, தாலி மறுப்புடன் தந்தை பெரியார் நடத்தி வைத்தார். பல்வேறு போராட்டங்களுக்குப் பின், அறிஞர் அண்ணா அவர்களால் சுயமரியாதைத் திருமணச் சட்டம் அமல்படுத்தப்பட்டு, பெண்ணை இழிவு செய்யும் பார்ப்பன – வைதீகத் திருமண முறை ஒழிக்கப்பட்டது. எனினும், விரும்புவோர் அதனை மேற்கொண்டும் வருகின்றனர்.
வளர்ந்து வரும் கருத்துத் தெளிவின் காரணமாக, பெரியார் இயக்கச் சிந்தனை வயப்பட்டு, பெண்ணுரிமை போற்றும் முகமாக, இணையர் இருவரும் தாமாக முன் வந்து பல நூற்றுக்கணக்கில் பெண்ணடிமைச் சின்னமான தாலியை அகற்றி வருகின்றனர். பலர் தாலி கட்டாமலேயே மணம் புரிந்தும் வருகின்றனர். எவரையும் கட்டாயப்படுத்தியோ, போராட்டம் நடத்தியோ, பெரியாரியக்கத்தினர் இந்தத் தாலி அகற்றும் நிகழ்வை நடத்தியதில்லை. தமக்குச் சரியென பெண் ஏற்கும் நிலையிலேயே, சுதந்திரமான எண்ணத்துடன், தாமாகவே முன் வந்து இதனைச் செய்வதையே நாம் வரவேற்கிறோம். இந்த நிலையில், தாலி அகற்றுதலை நிபந்தனையாக்குவதோ, பெரியார் டிரஸ்ட் பதவிக்கு தகுதியாக்குவது பற்றிய கேள்விக்கோ இடமில்லை. என்றாலும், இத்தகைய கருத்துத் தெளிவுள்ள தோழியர்களும், தோழர்களுமே பெரியாரியக்கங்களின் பொறுப்புகளில் உள்ளனர் என்பதே உண்மை.
சரி; தாலிக்கு வாதாடும் நீங்கள், கணவர் இறந்தவுடன் தாலியை அறுப்பதற்கு ஒரு சடங்கையே நடத்துகிறீர்களே, இதற்கு என்ன பதில்?
கேள்வி : எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிடக் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரச்சாரம் செய்யும் தைரியம் உண்டா?
பதில் : ‘கோபுர தரிசனம் மட்டும் செய்துவிட்டுப் போங்கள்’ என எம் மக்களை இழிவுபடுத்திய பார்ப்பனிய இந்து – காவி – மதவாதக் கூட்டத்தை எதிர்த்துப் போராடி, கடவுள் மறுப்பாளர்களாகிய நாங்கள்தான், கடவுள் பக்தர்களாக உள்ள மக்களை கோயிலுக்குள் சென்று வழிபடுவதற்கான உரிமையைப் பெற்றுத் தந்தவர்கள்.
இன்று கருவறைக்குள்ளே சென்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வண்ணம் சட்டம் நிறைவேற்றப்படப் போராடியதும் பெரியாரும், அவர் இயக்கத்தவரும் தான்.
இந்த சாதி ஒழிப்பு – சமத்துவத்தைக் கொண்டுவர, நாடு முழுவதும் சாதி பேதமற்ற சமத்துவபுரங்களை உருவாக்க, தகுதி வாய்ந்த ஓர் ஆட்சி அமைந்திட வேண்டுமென்பதற்காகத்தான், கடவுள் நம்பிக்கையாளர் களையும் ஒருங்கிணைத்து செயல்படும் தி.மு.கழக ஆட்சி வரவேண்டும் என்பதற்காகவே பெரியார் தி.மு.க.வுக்கு ஆதரவளித்தார். உண்மைப் பெரியார் இயக்கங்களும் சமூக நீதி நிலைநாட்டப்பட, ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வடைய எவர் பாடுபடுவார், யார் இந்த இனத்தின் பாதுகாப் பாய் வர இயலும் என எண்ணியே கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகின்றன.
எந்த ஒரு ஆட்சிக்கும் பெரியார் தந்த ஆதரவுக்கு அடிப்படைப் பார்வை சமூகநீதிக் கொள்கையை எப்படிப் பின்பற்றுகிறது என்பதுதான். கடவுள், மத மறுப்பு என்பது சமுதாய மாற்றத்துக்கான இலட்சியம். அதற்கு மக்களை தயார் செய்வதே பெரியார் இயக்கம்.
சரி; நாங்கள் ஒரு கேள்வி கேட்கிறோம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே பா.ஜக.வுக்கு வாக்களித்தால் போதும்; மற்றவர்கள் வாக்கு தேவை இல்லை என்று பா.ஜ.க. அறிவிக்குமா? அப்படி அறிவித்தால், பா.ஜ.க.வையே கலைக்க வேண்டியிருக்கும். கடவுள் நம்பிக்கை என்பது உண்மையாகவே கடவுள்தான் இந்த உலகத்தைப் படைத்தார்; அவர் தான் உலகையே ஆட்டுவிக்கிறார் என்பதை நம்புவதாகும். விபூதிப் பட்டையும், நெற்றி நாமமும், பூணூலும், பூஜைகளும் கடவுள் நம்பிக்கை அல்ல; அவை மதத்தைக் காப்பாற்ற பக்தியை வெளிப்படுத்தும் அடையாளங்கள் மட்டுமே!
உலகைப் படைத்து மனித குலத்துக்கே மனு சாஸ்திரத்தை வழங்கியவர் பிரம்மா என்றால் (அப்படித்தான் மனு சாஸ்திரம் கூறுகிறது) அந்தக் கடவுள் ‘பிர்மா’ இந்து தர்மத்தைக் காப்பாற்ற மாட்டாரா? அதர்மம் நடக்கும் போதெல்லாம் அவதாரம் எடுத்து வருவேன் என்று கூறிய ‘கிருஷ்ண பரமாத்மா’ அவதாரம் எடுத்து வர மாட்டாரா? உங்கள் மோடியும், அமித்ஷாவும், மோகன் பகவத்தும், சுப்பிரமணிய சாமியும்தான் வர வேண்டும் என்றால், ‘பிரம்மா’வையோ, கிருஷ்ணனையோ நீங்களே நம்பவில்லை என்று தானே அர்த்தம்? இது கடவுள் நம்பிக்கையா? கடவுள் மறுப்பா? பதில் சொல்லுங்கள்!
கேள்வி : கடவுள் வழிபாட்டையும், சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ.வெ.ரா. சிலைக்குப் பிறந்த நாள் அன்று மாலை போடு வதையும், இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை, காமராசர், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை போடுவதையும், மலர் அஞ்சலி செய் வதையும் கேலி பேசியும், கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?
பதில்: முதல் கேள்விக்குப் பதில் நிறுத்த முடியாது. மேலும் விமரிசை யாகக் கொண்டாடுவோம். தந்தை பெரியார் சிலை என்பது மூடத்தனத் திற்கு எதிரான குறியீடு, அறிவுச் சுடருக்கு ஆதாரம், சமூகப் புரட்சிக்கு ஊக்கம், திராவிட இன மக்களின் சாதி இழிவுக்கு எதிரான போராட்ட வடிவம். பெரியார் சிலைகளைப் போற்றிப் பாராட்டி, மலர் தூவி, மகிழ்ந்து, சமூகக் களத்தில் போராடி வரும் போராளிகள் உறுதி எடுத்துக் கொண்டு, தொடர்ந்து பயணம் மேற்கொள்வதற்கான உணர்வைப் பெறும் நிகழ்வுகள் அவை. போராட்டக் களத்துக்கு வந்து பக்தி, மோட்சத்தில் இடம் பிடிப்பதற்கு அல்ல!
இரண்டாவது கேள்வி, அறிஞர் அண்ணா உள்ளிட்ட பெருமக்கள், தலைவர் தந்தை பெரியார் காண விரும்பிய தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்கள்; பெரியார் சிந்தனையைச் சட்டமாக்கியவர்கள்.
கல்விக் கண் தந்த காமராசரும், ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டி, வேத மதத் திருமண முறைக்கு வேட்டு வைத்து சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட மாக்கி சரிதம் படைத்த அண்ணாவும், பெரியார் எழுத்துச் சீர்திருத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், இட ஒதுக்கீடு உயர்வு எனச் சாதனைகள் புரிந்த எம்.ஜி.ஆரும் எம் மக்களின் நன்றிக்கு உரியவர்கள். அதனை வெளிப்படுத்திட விழாக்கள் நடத்துவதும், பாராட்டிப் போற்றுவதும் நன்றி காட்டும் நற்செயல்களேயாகும். தவறில்லை.
பெரியாரும், அண்ணாவும், காமராசரும் மக்களுக்காக உழைத்த வர்கள் மட்டுமல்ல; மக்களால் நேரில் பார்க்கப்பட்டவர்கள். சிவனை யும் விஷ்ணுவையும், வினாயகனையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நாங்கள் எங்கள் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம்! பதில் சொல்லுங்கள்! வணங்கப்பட வேண்டியது கடவுள் சிலைகள் மட்டும்தான் என்றால், ஏன் பட்டேலுக்கு உலகத்திலேயே பெரிய சிலை வைத்து அரசுப் பணத்தைப் பாழடித்தீர்கள்? பதில் தேவை.
கேள்வி : ‘இந்துக்களை’ மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் மற்றவர்கள் முட்டாள்கள், மட்டமானவர்கள், அறிவில்லாதவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது அஞ்சுகிறீர்களா?
பதில் : ‘இந்துக்கள்’ என்று யாரும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ‘இந்து மதம்’ என்பது அனாமதேயம் என ஆரியப் பார்ப்பனர்களின் ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்கிடும் சங்கராச்சாரிகள் முதல், பார்ப்பனரால் போற்றப்படும் அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார், ஆச்சாரியார் வரை ‘அவாளின்’ அறிவுக் களஞ்சியங்களே ஆதாரத்துடன் நிறுவியிருக்கின்றனர்.
எனினும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கடவுள், மத மறுப் பாளர்களான நாங்களும் சரி; நம்பிக்கையாளர்களும் சரி; ஜாதிகளாலேயே அடையாளப்படுத்தப்படுகிறோம். இதன் அடிப்படையிலேயே ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவிற்குத் தீ வைத்துக் கொளுத்தி பெரியார் தொண்டர்கள் 4000 பேர் சிறைபட்டு, கொடுமைகளை ஏற்றனர் என்பது வரலாறு.
நிற்க, ஒரு வாதத்திற்கு ‘இந்துக்கள்’ என வைத்துக் கொண்டாலும், நாங்கள், இந்துவாகத் தம்மைக் கருதிக் கொண்டுள்ள பெரும்பான்மை ‘இந்து மக்களின்’ கல்வி, இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, சமூக சமத்துவம், சமூக முன்னேற்றம் ஆகியனவற்றிற்காகப் போராடி வருகிறோம். ஆனால், இந்தப் பெரும்பான்மை ‘இந்து’ ‘சூத்திர, ‘பஞ்சமர்’ மக்களின் முன்னேற்றத் திற்கு எதிராக – உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடுவதும், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதும், இம்மக்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதுமான காரியங்களில் ஈடுபடும் ‘இந்துக்கள்’ யார்? அவர்களே ‘பிராமண’ வருணபேதக் காவலர்களாக நடமாடி வரும் பார்ப்பனர்கள். அந்த வகை பார்ப்பன ‘இந்துக்களுக்கே’ நாம் எதிரியாகக் காட்சியளிக்கிறோம்.
மற்றபடி சனாதன சூழ்ச்சி அறியாது, சேற்றில் சிக்கியுள்ள எமது பெரும்பான்மை ‘இந்து’ மக்களுக்கு நாம் என்றும் தோழர்களே, எதிரிகளல்ல. அந்த அடிமை மதத்திலிருந்து வெளியே வாருங்கள் என்று விழிப்புணர்வூட்டிக் கொண்டே அவர்களின் மானத்துக்கும் உரிமைக்கும் போராடுகிறோம். பிற சிறுபான்மையினர், அறிஞர்களாக, வள்ளல்களாக, கல்வியறிவு பரப்பி எம் மக்களை சுயமரியாதைப் பெற்று வாழச் செய்யும் பெருமக்களாகவே திகழ்கின்றனர். எம் மக்களை உயர்த்துகின்றனர். இந்தச் சமூக மாற்றத்தில் எந்த ‘இந்து’ அமைப்பும் உண்மையாய் ஈடுபடுவதில்லை. சிறுபான்மையினர் எமக்கு தோழமையினர்தான்! அவர்கள் பார்ப்பனியத்துக்கு பலிகடாவாக மறுத்து, பல தலைமுறைகளுக்கு முன்பு உங்கள் மதத்துக்கு முழுக்குப் போட்டவர்கள்.
பெரியார் முழக்கம் 28022019 இதழ்