வாலாஜா வல்லவனின் உரை; கடந்த இதழின் தொடர்ச்சி! தேவதாசி முறை – ‘மனுநீதி’ சனாதனங்களை எதிர்த்தது திராவிடம்
நீங்கள் நான்கு வருணங்களாக பிரித்து வைத்தீர்கள், ஊருக்கு வெளியே தான் குடியிருக்க வேண்டும், நல்ல நகை போடக்கூடாது, சூத்திரர்கள், மேல் ஜாதிக்காரர்கள் பயன்படுத்திய பழைய ஆடைகளைத் தான் உடுத்த வேண்டும், ஈய பாத்திரம் தான் பயன்படுத்த வேண்டும், பொன் வெள்ளி நகைகளை அணியக்கூடாது என்று துரத்திய மக்களை ஊருக்குள் அழைத்து சமத்துவபுரம் கட்டிக் கொடுத்தவர் தான் கலைஞர், இதுதான் திராவிடம். மேற்கூறியவை சனாதனம், அதற்கு எதிரானது தான் திராவிடம்.
ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து நீங்கள் தேவதாசி முறையை கொண்டு வந்தீர்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மசோதா காரணமாக 1929 இல் தேவதாசி முறையை ஒழித்துக் கட்டியது எங்கள் திராவிடம். சனாதனத்திற்கு நேர் எதிரானது திராவிடம், ‘எதைக் கொடுத்தாலும் கொடு ஆனால் சூத்திரனுக்கு கல்வியை மட்டும் கொடுக்காதே என்கிறது மனுநீதி’, அதற்கு நேர் எதிராக சென்னை மாகாணத்தில் 1922 முதல் 1926 க்குள் பனகல் அரசர் ஆட்சியில் 12250 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. காமராஜர் பள்ளிக்கூடங்களை திறந்தார் என்பது உண்மை ஆனால் அதற்கு முன்பே பனகல் அரசர் 500 மக்கள் வாழ்கிற பகுதியில் ஒரு பள்ளி என்று கொண்டு வந்தார். காமராஜர் ஆட்சியின் 300 பேர் வாழ்கிற பகுதியில் ஒரு பள்ளி என்று கொண்டு வந்தார். 1920 களிலேயே கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது நீதிக்கட்சி என்பது வரலாறு. தெரியாத காரணத்தினால் தான் திராவிடம் என்ன செய்தது என்று சிலர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவம், புலவர், பண்டிட் படிப்புகளுக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நிலை இருந்தது. பனகல் அரசர் ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த ஏ.பி.பாத்ரோ சொன்னார், எதற்காக சமஸ்கிருதம் கட்டாயமாக இருக்க வேண்டும், இதற்கு திராவிட அரசு திராவிட மொழிகளுக்கு மட்டும் தான் செலவழிக்கும், 1924 இல் சட்டமன்றத்தில் பேசியதோடு நிற்காமல் அரசாணை பிறப்பித்தார் பனகல் அரசர்.
அதன் பிறகு தான் பார்ப்பனர்கள் சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட்டில் சமஸ்கிருதம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை தமிழை தனியாக படித்து பண்டிட் ஆகலாம் என்று ஒப்புக்கொண்டனர். 1926 இல் தான் முதல் முறையாக சமஸ்கிருதம் தெரியாமல் தமிழ் படிக்கிற வாய்ப்பு வந்தது, எதை எடுத்தாலும் சமஸ்கிருதம், எதற்காக அப்படி வைக்கிறார்கள் பார்ப்பனர்கள் மட்டுமே தமிழ் ஆசிரியர்களாக வரவேண்டும், பார்ப்பனர்கள் மட்டுமே வரலாற்று ஆசிரியர்களாக வர வேண்டும், பார்ப்பான் மட்டுமே பொறியியல் மருத்துவம் எல்லாவற்றிலும் ஆசிரியராக இருக்க வேண்டும். சமஸ்கிருதம் தெரியாமல் மருத்துவம் படிக்க கூடாது என்ற ஒரு விதி இருந்தது, அதற்கு நேரடி சாட்சி கிஆபெ.விஸ்வநாதன் என்றார் வாலாஜா வல்லவன்.
பெரியார் முழக்கம் 20072023