சோதிடத்தை நம்பும் அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளை சோதிடம் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை விளக்கும் கட்டுரை ஒன்றை மத்திய அரசின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற என்.ஆர்.கிருஷ்ணன், ‘இந்து’ ஆங்கில ஏட்டில் (அக்.6) எழுதியுள்ளார். பெயர்களை குறிப்பிடாமல் பல சுவையான சம்பவங்களை அவர் பதிவு செய்துள்ளார். 1980 ஆம் ஆண்டில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒரு கட்சியின் முதல்வர் அமைச்சர் களோடு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பதற்கு சோதிடர்களைக் கலந்து ஆலோசித்தார். நாள், நேரம் குறித்து அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கப் பட்டன. காலை 10 மணிக்கு பதவி ஏற்க வேண்டும். பதவி ஏற்கும் நாளில் சோதிடர்கள் முதல்வரை அணுகி 10.02க்கு முதல்வர் பதவி ஏற்காவிட்டால், 5 ஆண்டுகாலம் பதவியில் நீடிக்க முடியாது என்று கூறவே, எல்லா நிகழ்ச்சிநிரல்களும் அவசரமாக மாற்றியமைக்கப்பட்டு, சோதிடர்கள் குறித்த சரியான நேரத்தில் முதல்வர் பதவி ஏற்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானத்தில் டெல்லிக்கு பறந்து போய் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த நாள் காலை 11 மணியளவில் தொலை வரி வழியாக ஒரு செய்தி வருகிறது. உடனே ஒரு மாநிலத்தின் ஆளுநராக அந்த முதலமைச்சர் பதவியேற்க வேண்டும் என்பதே அந்த செய்தி. 5 ஆண்டுகாலம் முதல்வராக நீடிப்பதை சோதிடம் வழியாக உறுதி செய்து கொண்டவருக்கு நேர்ந்த கதி இது!
பிரதமராக இருந்த ஒருவர், சோதிடர்-சாமியார்களைக் கேட்டுத்தான் எந்த முடிவையும் எடுப்பார். சோதிடர்கள் குறித்துத் தந்த நாளில் சில புதிய அமைச்சர்களை அறிவிக்க இருந்தார். தொலைக் காட்சியிலும் அறிவித்தாகிவிட்டது. வேறு சில சோதிடர்கள் அது நல்ல நாள் இல்லை என்று கூறியவுடன், அமைச்சர்கள் நியமன அறிவிப்பை அந்த பிரதமர் திடீரென தள்ளி வைத்து விட்டார்.
நிதியமைச்சர் ஒருவர் இருந்தார். அவர் ஒவ்வொரு நிமிடமும் சோதிடத்தின்படியே செயல்படுவார். அடுத்தப் பணியைத் தொடங்குவதற்கு முன், சோதிடரின் ஆலோசனை அவருக்கு தேவைப்படும். இதற்காகவே ஒருசோதிடர் கூட்டமே அவரைச் சுற்றி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அமைச்சரவை செயலாளர் என்ற உயர் பதவியில் இருந்த ஒரு அதிகாரி ஒரு அரைகுறை சோதிடர். அவர் எப்போதும் அந்த நிதியமைச்சருடன் இருந்து, எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்.
புதிதாக அமைச்சராக நியமிக்கப்படுவோர் தங்களுக்கு ஒதுக்கப்படும் அறைகள் ‘ராசியாக’ இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். புதுடில்லி உத்யோக் பவனில் இரண்டு அமைச்சர் களுக்கான அறைகள் ராசியில்லாதவையாக கருதப் பட்டு அந்த அறைகளுக்கு அமைச்சர்களே வர விரும்புவதில்லை.
எஃகுத் துறை அமைச்சராக பதவியேற்ற ஒரு மூத்த தலைவருக்கு இந்த அறை ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க விரும்பாமல், தனக்கு சாஸ் திரி பவனிலேயே அறை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். பிறகு, வேறு சில மாற்றங்களை செய்து உத்யோக் பவனிலேயே அவருக்கு வேறு அறை ஒதுக்கப் பட்டது. சில கோப்புகளில் முடிவு எடுப்பதே மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்ற நம்பிக்கையில் கோப்புகளை கிடப்பில் போட்ட அமைச்சர்களும் உண்டு. அரசு செய்தி விளம்பரத் துறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோப்பை, பரிசீலனைக்கு எடுக்காமலே ஒரு முதல்வர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதில் கை வைத்தால் தமது பதவியே போய்விடும் என்று கூறிய அந்த முதலமைச்சர், தனக்கு முன்னாள் இந்தக் கோப்பில் நடவடிக்கை எடுக்க முயன்றவர்கள் பதவி பறி போய்விட்டதை சுட்டிக் காட்டினார். இப்படி சம்பவங்களை பட்டியலிட்டுள்ள அந்த அதிகாரி, நாட்டை ஆட்சி செய்வது அரசியல்வாதிகளா? சோதிடர்களா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.
இந்த மூடநம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு முதல்வர் பற்றிய செய்தியையும் குறிப்பிட வேண்டும். அவர்தான் கருநாடக முதல்வர் சித்தாராமையா. கருநாடக முதல்வர் பொறுப்புக்கு வரும் எவரும் சாம்ராஜ் நகருக்குள் கால் வைக்க மாட்டார்கள். அங்கே போனால் முதலமைச்சர் பதவி பறிபோய்விடும் என்று ஒரு மூடநம்பிக்கை. தேவராஜ் அர்ஸ் , குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ் .ஆர். பொம்மை, விரேந்திரபட்டீல், குமாரசாமி, சதானந்த கவுடா ஆகியோர் சாம்ராஜ் நகருக்குள் வந்ததால் பதவியை பறிகொடுத்தார்களாம். இதனால் பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவகவுடா, ஜெ.எச். பட்டீல், எஸ் .எம். கிருஷ்ணா உள்ளிட்ட பல முதல்வர்கள் இங்கே வருவதை பதவி காலத்தில் தவிர்த்தே வந்தனர். இவர்களில் பலரும் குறுகிய காலத்திலேயே பதவி இழந்தது வேறு கதை.
ஆனால், சித்தாராமையா, தேர்தலுக்கு முன்பே தனக்கு அத்தகைய மூடநம்பிக்கை ஏதும் கிடையாது என்றும், வெற்றி பெற்ற பிறகு சாம்ராஜ் நகர் வருவேன் என்றும் மக்களிடம் உறுதியளித்தார். உறுதியளித்த படியே கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி சாம்ராஜ் நகருக்குள் நுழைந்து, அரசு திட்டங்களை தொடங்கி வைத்து, அம்பேத்கர் பவனுக்கு அடிக்கல் நாட்டி, அம்பேத்கர் சிலையையும் திறந்து வைத்தார். “எனக்கு எந்த மூடநம்பிக்கையும் இல்லை. இந்திய மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கையை முறியடிக்க அறிவே சிறந்த ஆயுதம் என அம்பேத்கர் போராடி னார். கருநாடகத்திலும் பசவண்ணரும், மகாகவி குவெம்புவும் தொடர்ந்து போராடினர். தொடர்ந்து சாம்ராஜ் நகருக்கு வருவேன்; மூடநம்பிக்கையின் கோட்டைகளை தகர்த்து எறிவேன்” என்று முழக்கமிட்டுள்ளார். சித்தாராமையாவுக்கு அவரது உறுதியான பகுத்தறிவு கொள்கைக்காக பாராட்டு மாலைகளைக் குவிக்கலாம்!
பெரியார் முழக்கம் 23102013 இதழ்