27 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலை எப்போது?
பார்ப்பன-மேல்சாதி இந்திய ஆளும் வர்க்கம் வன்னெஞ்சத்துடன், இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு தமிழர்களின் உயிருடன் கண்ணா மூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த எழுவரின் விடுதலை, கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போனதுபோல் இழுத்தடிக் கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இராசிவ் காந்தி 1991 மே 21 அன்று திருப்பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரான இத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் மரணதண்டனையை உறுதி செய்தது. இராபர்ட் பயாஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய மூவரின் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது. மற்ற 19 பேரை விடுதலை செய்தது.
பின்னர் 2000ஆம் ஆண்டில் நளினியின் மரண தண்டனையை அப்போதைய தமிழக அரசு மனிதநேய அடிப்படையில் வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்குக் கருணை விண்ணப்பம் அனுப்பினர்.
11 ஆண்டுகள் கிடப்பில் போட்டிருந்த பின், இவை நிராகரிக்கப்பட்டன. இந்த முடிவை எதிர்த்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இம்மூவரின் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்க வலியுறுத்தி செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு 30.8.2011 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இக் கோரிக்கையை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் பேரணிகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டன.
தமிழரான சதாசிவம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தபோது, 18.2.2014 அன்று, அவருடைய தலைமையிலான அமர்வு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது. அத்தீர்ப்பின் இறுதியில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 432இன்படி, “உரிய அரசு (ஹயீயீசடியீசயைவந ழுடிஎநசnஅநவே) கைதிகளை விடுதலை செய்வது பற்றி முடிவு செய்ய லாம்” என்று கூறி நல்லதோர் வழியையும் காட்டியிருந்தது.
இத்தீர்ப்பு வெளியான அடுத்த நாள், 19.2.2014 அன்று சட்டமன்றத்தில், முதலமைச்சராக இருந்த செயலலிதா, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ், செயகுமார் ஆகிய ஏழு பேரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432இன்படி விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவெய்திருப்பதாகவும், இதற்கு மூன்று நாள்களுக்குள் நடுவண் அரசு தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவித்தார்.
மன்மோகன் சிங் தலைமையிலிருந்த காங்கிரசு அரசு அடுத்த நாளே (20.2.2014) உச்சநீதி மன்றத்தில், “இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432இன்படி, நடுவண் அரசின் ஒப்புதலைப் பெறாமல் அந்த ஏழு பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாட்டு அரசுக்கு இல்லை; ஏனெனில் இராசிவ் காந்தி கொலை வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டு, நடுவண் அரசின் ‘தடா’ சட்டத்தின்கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்; எனவே எழுவர் விடுதலை குறித்துத் தமிழ்நாட்டு அரசின் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தது. இதே காரணத்தைக் காட்டி உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டு அரசு ஏழு பேரை விடுதலை செய்வதற்கு இடைக் காலத் தடை விதித்தது.
இந்த வழக்கில் 2015 திசம்பர் 2 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மத்தியப் புலனாய்வுத் துறை யாலோ அல்லது நடுவண் அரசின் வேறொரு அமைப் பாலோ விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்களை நடுவண் அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டது. இதை மறுஆய்வு செய்யுமாறு தமிழக அரசு விண்ணப்பித்தது. அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு தமிழக அரசின் மறுஆய்வு குறித்த வழக்கை விசாரித்தது. 7.2.2017 அன்று இதன் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. 2015 திசம்பர் 2 அன்று நீதிபதி கலிபுல்லா தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பை இது உறுதி செய்தது. அரசமைப்புச் சட்ட அமர்வு அளித்த இத்தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 23.1.2018 அன்று ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து நடுவண் அரசு மூன்று மாதங்களுக்குள் அதன் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. 14.2.2018 அன்று நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம் ஏழு பேரின் உடல்நிலை, மனநலம், அவர்களின் பொருளாதார, சமூகப் பின்னணி உள்ளிட்ட எட்டு விவரங்கள் குறித்து அறிக்கை அனுப்புமாறு தமிழக அரசுக்கு மடல் அனுப்பியது. நடுவண் அரசு கேட்ட அறிக்கையைத் தமிழக அரசு அண்மையில் அனுப்பியது. 12.6.2018 நாளிட்ட தினத்தந்தி நாளேட்டின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில், “ராசிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி உள்பட 7 பேர் விடுதலையாக வாய்ப்பு?” என்று தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத் தியது.
ஆனால் 15.6.2018 நாளிட்ட ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் சென்னைப் பதிப்பில், ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்கிற தமிழ்நாட்டு அரசின் கோரிக்கையைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தார் என்று முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிடப் பட்டது. இது பெரும் ஏமாற்றமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
2014இல் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் வாழ்நாள் தண்டனையாகக் குறைத்த பிறகு, ஏழு பேரும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் விண்ணப்பம் அளித்தனர். இதன் அடிப்படையில் தமிழக அரசும் ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு நடுவண் அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரி கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு தடவைகள் மடல் எழுதியது. தமிழக அரசின் இக்கோரிக்கையுடன் நடுவண் அரசு தன் கருத்தையும் இணைத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது.
“தமிழக அரசின் முடிவை நடுவண் அரசு ஏற்கவில்லை. நடுவண் அரசின் அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்ற முறையில், தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படு கிறது” என்று குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார், நடுவண் அரசின் உயர் அதிகாரி, ஆங்கில ‘தி இந்து’ செய்தியாளரிடம் “முன்னாள் பிரதமர் இராசிவ் காந்தியைக் கொலை செய்தவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் விடுதலை செய்யப்படமாட்டார்கள்” என்று கூறியதாக 15.6.2018 ‘தி இந்து’ நாளேட்டில் பதிவு செய்யப்பட் டுள்ளது. ஆட்சியாளர்களைவிட, இந்திய அரசின் உயர் பதவிகளில் இருக்கும் பார்ப்பன-மேல்சாதி அதிகார வர்க்கம்தான் வன்னெஞ்சத்துடன் ஏழு தமிழர்களின் விடுதலைக்குப் பெருந்தடையாக இருக்கிறது.
இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரும் இக்கொலைச் செயலிலோ, இதற்கான சதித் திட்டத்திலோ நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்பதற்கான சான்று எதுவும் எண்ணப்பிக்கப்பட வில்லை. பேரறிவாளன் வாங்கிக் கொடுத்த பேட்டரி தான் மனித வெடிகுண்டாக வந்த தாணுவின் பெல்டில் பயன்படுத்தப்பட்டதா என்பது உறுதிசெய்யப்படவில்லை. மேலும் அந்த வெடிகுண்டு பெல்ட் எங்கு தயாரிக்கப் பட்டது என்பதுகூட புலனாய்வில் கண்டறியப்பட வில்லை. இராசிவ் காந்தி கொலையில் அயல்நாட்டுச் சதித்திட்டம் குறித்த விசாரணை, தொடர முடியாமல் முட்டுச்சந்தில் நிற்கிறது.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உயர் அதிகாரி தியாகராசன், பேரறிவாளனின் ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பதிவு செய்ததில் முக்கியமான பகுதியைத் தவிர்த்து விட்டதாக ஒப்புக்கொண்டார். தன் பிழை குறித்து உச்சநீதிமன்ற அமர்வு முன், பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வழக்கில் தண்ட னையை உறுதி செய்த உச்சநீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ், தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்துவிடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்து இருக்கிறார். கொலையுண்ட இராசிவ் காந்தியின் மகன் இராகுல்காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், ஏழு பேரை விடுதலை செய்வதில் தங்களுக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்துவிட்டனர்.
குற்றவாளிகளைத் தண்டிப்பது என்பது வாழ்நாள் முழுவதும் அவர்களைச் சிறையில் வைத்துக் கொடுமைப் படுத்துவது அன்று. தம் குற்றத்தை – தவறை உணர்ந்து மனந்திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதே தண்டிக்கப்படுவதன் நோக்கமாகும். சனநாயக நெறி முறைகள் போற்றப்படும் நாடுகளில் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது. அதனால் தான் 130க்கு மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டிருக்கிறது.
27 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வரும் ஏழு பேரும் சிறை விதிகளை மீறாமல், நன்னடத்தையுடன் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் கல்வித் தகுதியை மேலும் உயர்த்திக் கொண்டதுடன் மற்றவர்களுக்கும் கல்வி கற்பித்துள்ளனர். ஏழு பேரும் நிரபராதிகளா? குற்றவாளிகளா? என்கிற சட்ட நுணுக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, 27 ஆண்டுகள் நன்னடத்தையுடன் சிறையில் இருந்தார்கள் என்கிற ஒரே அடிப்படையில் இவர்களை விடுதலை செய்து, இவர்களின் எஞ்சிய வாழ்நாளைத் தம் குடும்பத்தினருடன் கழிக்குமாறு செய்வதே இயற்கை சார்ந்த நீதியாகும்.
இப்போது எழுவரின் விடுதலைக்காக இரண்டு வழிகள் உள்ளன. உச்சநீதி மன்றத்தில் உள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432 குறித்த வழக்கில், நடுவண் அரசு ஏழுவரையும் விடுதலை செய்யக்கூடாது என்று கருத்துரைத்தாலும், 27 ஆண்டுகள் நன்னடத்தையுடன் இவர்கள் சிறையில் இருந்ததைக் கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம். இந்த அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது. இத்தகைய தீர்ப்பைப் பெறுவதற்கு தமிழ்நாட்டு அரசு இந்தியாவின் தலைசிறந்த வழக்குரைஞர்களைக் கொண்டு இவ்வழக்கில் வாதிட வேண்டும்.
மற்றொரு வழி, தமிழ்நாட்டு அரசின் அமைச்சரவையின் முடிவினை ஏற்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 161இன்படி, தமிழக ஆளுநர் ஏழு பேரையும், விடுதலை செய்யலாம். உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432 குறித்து தொடர்ந்துள்ள வழக்கு, இதற்கு முற்றிலும் வேறுபட்டதாகும். எனவே அரசமைப்புச் சட்ட பிரிவு 161இன்கீழ் விடுதலை செய்வதற்கு ஆளுநருக்குக் கட்டற்ற அதிகாரம் உண்டு.
தேசத்தந்தை காந்தியின் கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சேவும் மற்றவர்களும் 14 ஆண்டுகள் சிறையில் இருந்த பின் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று 1961இல் உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். உச்சநீதிமன்றம் இக்கோரிக்கையை ஏற்க மறுத்தது. ஆயினும் மகாராட்டிர மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு 13.10.1964 அன்று காந்தி யார் கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்தது.
எனவே தமிழக அரசுக்கும் அரசியலமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின்கீழ் இந்த அதிகாரம் உள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி து. அரிபரந்தாமன் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார். ஆனால் காந்தியைக் கொலை செய்த குற்றவாளிகள் வாழ்நாள் தண்டனையிலிருந்து 16 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுவிக்கப்பட்டனர் என்கிற உண்மையை மறந்துவிட்டு, நடுவண் அரசு குடியரசுத் தலைவரின் நிராகரிப்புக் குறித்துத் தமிழக அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் ஏழு பேரை விடுதலை செய்வது மோசமான முன்னுதாரணமாகிவிடும் என்று பூச்சாண்டி காட்டியிருக்கிறது.
எனவே தமிழக அரசு மீண்டும் ஏழு பேரின் விடுதலை குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஏழு பேரை விடுதலை செய்வது என்கிற அமைச்சரவையின் முடிவை ஆளுநருக்கு அனுப்பி, அரசமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நிறைவேற்றும் வகையில் ஏழரைக் கோடித் தமிழர்களும் உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.
– செங்கதிர், ‘சிந்தனையாளன்’
பெரியார் முழக்கம் 16082018 இதழ்