திருப்பூர் இலட்சுமிநாதன் முடிவெய்தினார்
திருப்பூரில் பெரியாரைப் பேணிய குடும்பம் தோழர் அருணாசலம் அவர்களின் மகள் இலட்சுமி நாதன் (93) பிப்ரவரி 9, மாலை 3 மணிக்கு பெரியார் காலனியில் உள்ள அவரின் இல்லத்தில் இயற்கை எய்தினார். கடல் கடந்து இலங்கை சென்று தன் உழைப்பால் ஜவுளி வியாபாரத்தை கொழும்பு மற்றும் மதுரையில் நிறுவிய அருணாசலம் , இளவயது முதல்கொண்டே பெரியாரிய கொள்கையில் நாட்டம் கொண்டு குடிஅரசு பத்திரிக்கையை தொடர்ச்சியாக படித்து தன் குடும்பத்தார் அனைவரையும் பெரியாரிய வாழ்க்கை முறைக்கு திருப்பினார். மூத்த மகனின் சுயமரியாதை திருமணத்தை திருப்பூரில் தந்தை பெரியாரைக் கொண்டு மிக சிறப்பாக நடத்தினார். அவரின் இரு மகள்களில் ஒருவரான இலட்சுமி நாதன், பெரியார் திருப்பூர் வரும்போதெல்லாம் அவருக்கு பிடித்தமான பிரியாணி செய்து பெரியாருக்குக் கொடுத்து உபசரிப்பார். 1945 மதுரை சுயமரியாதை மாநாட்டில் குடும்ப சகிதம் கருப்பாடை அணிந்து கலந்துகொண்டு கொள்கைத் தூணாய் இருந்தவர். சுயமரியாதை வாழ்வின் அங்கமாய் தன் இரு மகன்களுக்கும் இரணியன், மேகநாதன் என்று பெயரிட்டு வளர்த்தார். இன்றும் குடிஅரசு பத்திரிக்கையில் வந்த தங்களை பற்றிய பல செய்திகளை தோழர்களுடன் பகிர்ந்து கொள்வார். திருப்பூரில் பெரியார் தோழர்கள் அனைவருக்கும் தன் விருந்தோம்பல் பண்பால் இன்சொல் கூறி வரவேற்று உபசரிப்பார்.
பெரியார் முழக்கம் 22022018 இதழ்