பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிட்டதற்காக கழகத்திடம் ரூ.15 இலட்சம் இழப்பீடுக் கோரி மீண்டும் கி.வீரமணி வழக்கு
பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டதற்காக பதிப்புரிமை சட்டப்படி தனக்கு ரூ.15 இலட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி மீண்டும் உயர்நீதிமன்றம் வந்துள்ளார்.
பெரியாரின் ‘குடிஅரசு’ வார இதழில் இடம் பெற்றிருந்த பெரியாரின் பேச்சு எழுத்துக்கள் நீண்டகாலமாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிடாத நிலையில் பெரியார் திராவிடர் கழகம், காலவரிசைப்படி தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிட்டது. பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடும் உரிமை தங்கள் நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு என்றும், பெரியார் திராவிடர் கழகம் வெளியிட உரிமை இல்லை என்றும், கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘குடிஅரசு’ பதிப்பாசிரியரும், அன்றைய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மீது வழக்கு தொடரப்பட்டது. 2009ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சந்துரு, பெரியார் தி.க. வெளியிட்ட ‘குடிஅரசு’ தொகுதிகளுக்கு 2008ஆம் ஆண்டு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை ரத்து செய்து தீர்ப்பளித்தார். காப்பீட்டு உரிமை சட்டத்தின் கீழ் உரிமை கோர முடியாது என்றும் தீர்ப்பளித்தார்.
மீண்டும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி, உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீதிபதி கலிபுல்லா தலைமையிலான இரண்டு நீதிபதி களடங்கிய அமர்வு, நீதிபதி எஸ். சந்துரு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. மீண்டும் கி.வீரமணி வழக்கை உச்சநீதிமன்றம் கொண்டு சென்றார். உச்சநீதிமன்றம் 2010ஆம் ஆண்டு நவம்பரில் வழக்கை விசாரணைக்கு ஏற்காமலேயே தள்ளுபடி செய்தது.
இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை, மூன்று நிலைகளிலும் தள்ளுபடியான நிலையில் பிரதான வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் பிரதான வழக்கில் கி.வீரமணி அவர்கள், வழக்கில் முன் வைத்த வேண்டுகோளை (ஞசயலநச) மாற்ற விரும்புவதாகவும் – புதிய வேண்டுகோள்களின் அடிப்படையில் வழக்கைத் தொடர உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இப்போது பிரதான வழக்கில் கி.வீரமணி கேட்டிருந்த பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிட்டதற்காக ரூ.15 இலட்சம் இழப்பீடு தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் திருக்கிறார்.
இதன்படி மனுதாரர் வீரமணி, உயர்நீதி மன்றத்தில் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிடும் உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்பதற்கான சான்றுகளை சாட்சியாக நேரில் வந்து கூற வேண்டும். இதற்கு பதிப்பாசிரியர் கொளத்தூர் மணியும், த.பொ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணனும் தங்களுக்கு வெளியீட்டு உரிமை உண்டு என்றும், ரூ.15 இலட்சம் இழப்பீடு கேட்க முடியாது என்றும் அதற்கான சான்று களோடு சாட்சியமளிக்க வேண்டும். இந்த வழக்கு கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்து, வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிடுவதற்கான தடை இல்லை என்ற நீதிமன்ற ஆணையைப் பெற்ற பிறகு ஏராளமான பதிப்பகங்கள் பெரியாரின் ‘குடிஅரசு’ பதிப்புகளை வெளியிட்டு இலட்சக்கணக்கில் மக்களிடம் சேர்த்துள்ளன. ‘குடிஅரசில்’ இடம் பெற்றுள்ள பெரியார் கருத்துக் களின் அடிப்படையில் ஏராளமான ஆய்வுகளும் கட்டுரைகளும் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ரூ.15 இலட்சம் இழப்பீடுகேட்டு நீதிமன்றம் வந்திருக்கிறார் ஆசிரியர் வீரமணி.
பெரியார் முழக்கம் 11012018 இதழ்